Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'என்னம்மா....' முதல் 'மைக்கை அவர்கிட்ட கொடுங்க...' வரை! #tvtalkshowhostday

இன்று உலக Talk show தொகுப்பாளர்கள் தினம். நம் எல்லோருக்குள்ளும் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. டி.வி-யில் செலிபிரிட்டிகளோடு ஜாலியாக அரட்டையடிக்க யாருக்குதான் பிடிக்காது. ஆனால் டாக் ஷோ தொகுப்பாளராக உங்களுக்கு சில விஷயங்கள் தெரிஞ்சிருக்கணும் ஜி. படிங்க இந்த லிஸ்ட்டை...!

* நீங்கள் எமி ஜாக்ஸனுக்கே சவால்விடும் சிவப்பாக இருந்தாலும் சரி, டன் கணக்கில் மேக்கப் பூசிக்கொள்ள வேண்டும். கண்ணாடியில் பார்த்தால் நமக்கே அடையாளம் தெரியக் கூடாது. லேயர் லேயராகப் பூசுவதில் பொங்கலுக்கு வெள்ளையடிக்கப்பட்ட வீடு போல உங்கள் முகம் மாறினால்தான் கேமராமேன் லென்ஸ் மூடியைக் கழற்றுவார் போல. 

* ஷோ தொடங்கியதும், 'வணக்கம், இது கெக்ரான் மெக்ரான் கம்பெனி வழங்கும் பழையசோறு வித் பரதேசி, இணைந்து வழங்குபவர்கள் ஆந்தை மார்க் லுங்கிகள் மற்றும் பூச்சி மசாலா, பவர்ட் பை 420 ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ்' என எஸ்.பி.பி போல மூச்சுவிடாமல் சொல்ல வேண்டும். லேசாக கேப் விட்டால் ரீடேக் தான். குறிப்பு: இந்த நிறுவனங்களில் பெயர்கள் வாராவாரம் மாறக்கூடும்.

* சாதாரணமாக சிரித்தால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும். எனவே க்ளிஷே சிரிப்புகளைத் தவிர்த்து வித்தியாச சவுண்டில் சிரிக்க வேண்டும். கேட்பவர்கள் 'டி.வி-யில் கோளாறு போல' என நினைத்துவிட்டால் உங்கள் முயற்சி சக்ஸஸ். வாழ்த்துகள்.

* கண்களில் ரெடியாகத் தண்ணீர் பைப் கட்டி நிற்க வேண்டும். எதிர்த்தரப்பில் இருப்பவர்கள் சென்டிமென்ட்டாக ஒரு வார்த்தை பேசினாலும் பைப்பை உடைத்துக் கொட்டிவிட வேண்டும். முக்கிய விஷயம், அழும்போது சத்தமாக மூக்கை உறிஞ்ச வேண்டும். இல்லையென்றால் இதுவும் உங்கள் ட்ரேட்மார்க் சிரிப்பு போல என ஆடியன்ஸ் நினைத்துவிடக் கூடும்.

* பல்ப் வாங்க அசரவே கூடாது. செட்டில் தண்ணீர் கேன் போடுபவர் சகட்டுமேனிக்கு கலாய்த்தாலும் சிரித்துக்கொண்டே சமாளிக்க வேண்டும். கவுன்ட்டர் போடுகிறேன் என மொக்கை காமெடி செய்வதற்கு பல்லைக் காட்டிக்கொண்டிருப்பதே மேல்.

* சிரிப்பு மட்டும் போதாது. சினிமா ஹீரோக்களுக்கு இணையாக ஏதாவது பன்ச் டயலாக் ஒன்றை அடிக்கடி சொல்ல வேண்டும். 'மைக்கை பிடுங்குங்க, இப்படி பண்ணீங்கனா மண்டையைப் பொளந்துடுவேன்' போன்ற அதிரிபுதிரி டயலாக்குகளை அடிக்கடி சொல்வதன் மூலம் உங்களை வைத்து தமிழ் சினிமா பாடல் இயற்றக்கூட வாய்ப்பிருக்கிறது.

* கெஸ்ட்டாக வந்திருப்பவர் துக்கடா ரோலில் இரண்டே நிமிடங்கள் ஸ்க்ரீனில் வந்து போனவராக இருந்தாலும் சரி, 'வாவ்வ்வ்வ்வ்வ், வந்திருக்கிறது யார் தெரியுமா? `நாசமா போவோம்' படத்துல 120 செகண்ட் கெஸ்ட் ரோல்ல நடிச்சவர்' என 'பாகுபலி' பில்டப்பில் சொல்ல வேண்டும். இதர பில்டப்புகள் உங்களின் கற்பனை வளம் சார்ந்தது.

* தப்பித் தவறிக்கூட வித்தியாசமான கேள்விகளைக் கேட்கவே கூடாது. அரதப்பழசான, செர்லாக் சாப்பிடும் குழந்தைக்குக்கூட பதில் தெரிந்த மொக்கை கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும். தவறாமல் கேட்க வேண்டிய கேள்வி - இந்தப் படத்துல நடிச்ச உங்க அனுபவத்தைச் சொல்லுங்க?

* போகிற போக்கில் ஏதாவது சின்ன ஆக்‌ஷன் ப்ளாக் சிக்க வாய்ப்பிருக்கிறது. அதை பச்சக்கென கேட்ச் செய்து ஊதிப் பெரிதாக்கி சோஷியல் மீடியா அடுத்த இரண்டு நாட்களுக்கு சீரியஸாக டிஸ்கஸ் செய்யுமளவிற்கு வளர்த்துவிட வேண்டும். நிகழ்ச்சி விளம்பரத்தின்போது அதையே போட்டுக்காட்டி ஹைப் ஏற்றி வருமானம் அள்ளலாம்.

* கடைசியாக, ஆனால் முக்கியமான விஷயம் இதுதான். விவாத நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தால், முடிந்தவரை இரு தரப்பையும் சூடாக சண்டை போட வைக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் தீர்ப்பை மட்டும் சொல்லிவிடவே கூடாது. ஈயம் பூசியும் பூசாத மாதிரியுமான நடுநிலையில் 'இதாம்லே முடிவு' என ஏதாவது ஒன்றைச் சொல்லி பார்ப்பவர்கள் குழம்பும் கேப்பில் எண்ட் கார்ட் போட்டுவிட வேண்டும்.

தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!

-நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close