Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகத்துக்கே தலைமை தாங்கிய இந்தியப் பெண்! அக்டோபர் 24 ஐ.நா தினம்

1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ம் தேதி ஐ.நா.சபை என்று அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது. உலக நாடுகளில் பாதுகாப்பு, அமைதி, மற்ற நாடுகளை  நட்பு நாடுகளாக ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சர்வதேச பிரச்னைகளை சுமுகமான முறையில் கையாள இந்த சபை உருவாக்கப்பட்டது. நியூயார்க் நகரில் அமைந்துள்ளது ஐ.நா.சபையின் கொள்கைகள் மற்றும் கருத்துக்களை வலியுறுத்த 1948 ஆம் ஆண்டுமுதல் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி ஐ.நா. தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐ.நா. சபையின் ஆறு அங்கங்கள்:

ஐ.நா.சபையில் பொதுச்சபை, பாதுகாப்பு மன்றம், பொருளாதார மற்றும் சமூக மன்றம், தர்மகர்த்தா சபை, பன்னாட்டு நீதிமன்றம் மற்றும் செயலகம் என ஆறு முக்கிய அங்களை கொண்டுள்ளன. இந்த ஆறு முக்கிய அங்கங்களே சர்வதேச பிரச்சினைகளை அமைதியான முறையில் கையாண்டு வருகின்றன.

பொதுச்சபை ஐ.நா.சபையின் நிரந்தர மற்றும் முக்கிய அமைப்பு ஆகும். ஐ.நா.சபையின் முக்கிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள பொதுச்சபைக்கு அதிகாரம் உள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பொதுச்சபை கூடும். இந்தியாவை சேர்ந்த விஜயலட்சுமி பண்டிட் என்பவர் 1953 ஆம் ஆண்டு இதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலக நாடுகளில் பாதுகாப்பு மற்றும் அமைதியை பாதுகாக்க, பாதுகாப்பு மன்றம் செயல்படுகிறது. இது ஐ.நா.சபையின் முக்கிய அங்கம் ஆகும். பாதுகாப்பு மன்றத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் இங்கிலாந்து போன்ற நாடுகள் உறுப்பினராக உள்ளனர். ஐ.நா. சபையில் உள்ள உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக செயல்பாடுகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பொருளாதார மற்றும் சமூக மன்றம் செயல்படுகிறது.

தர்மகர்த்தா அவையானது ஐ.நா.சபையின் கீழ் உள்ள நாடுகளை கண்காணித்து நல்வழிபடுத்துகிறது. பன்னாட்டு நீதிமன்றம் என்று அழைக்கப்படும் ஐ.நா.சபையின் நீதிமன்றம் ஐ.நா.சபையின் உறுப்பு நாடுகளில் உள்ள சர்வதேச பிரச்சினைகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்குகிறது. பன்னாட்டு நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் உள்ள தி ஹேக் நகரில் அமைந்துள்ளது. ஐ.நா.சபையின் செயலகமே சபையின் நிர்வாக பணிகள் முழுமையையும் செயல்படுத்துகிறது. ஐ.நா.சபையின் ஆறு அங்கங்களில் செயலகமே மிக முக்கிய அங்கம் ஆகும்.

ஐ.நா.சபைவின் சிறப்பு நிறுவனங்கள்:

ஐ.நா.சபையின் சிறப்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சபையில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதார நிலை உயரவும், பொருளாதாரம் மற்றும் சமூகம் முன்னேறவும் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம், ஐ.நா. குழந்தைகள் அவசர கால நிதி நிறுவனம் மற்றும் ஐ.நா. கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு போன்றவை  ஐ.நா. சபையில் உள்ள சில சிறப்பு நிறுவனங்கள் ஆகும்.

ஐ.நா.சபையின் சாதனைகள்:

உலக நாடுகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை அமைதியான முறையில் கையாண்டு சுமுகமான தீர்வுகளை கண்டு உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டி வருகிறது. ஐ.நா.சபையில் உள்ள பாதுகாப்பு மன்றம் நீதிமன்றம் போன்ற பல்வேறு அமைப்புகள் மூலம் தீர்வுகள் கண்டு வருகிறது. அணு ஆயுத சட்டத்தை 1963ம் ஆண்டு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு தொடர் அணு ஆயுத சோதனை சட்டத்தை நிறைவேற்றியது.

இயற்கை சூழலை பாதுகாக்க 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி அனைத்து நாடுகளையும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி வெற்றி கண்டது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நாடுகளில் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தி பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்டது. சூயஸ் கால்வாயை எகிப்து அரசர் நாசர் நாட்டுடமையாக்கிய போது பிரிட்டன் பிரான்சு இஸ்ரேல் போன்ற நாடுகள் எதிர்த்த போது ஐ.நா.சபையின் அமைதிப்படை எகிப்துக்கு சென்று சூயஸ் கால்வாய் பிரச்னையை சரியான முறையில் கையாண்டு அதற்கு சரியான தீர்வை வழங்கி அமைதியை பாதுகாத்தது ஐ.நா.சபையின் முக்கிய சாதனை ஆகும்.

இந்த ஐ.நா.தினத்தில் உலக நாடுகளில் அமைதி, சமாதானம் நிலவ நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்.

 

தொகுப்பு:
லோ.பிரபுகுமார்
(மாணவப் பத்திரிகையாளர்.)

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ