Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளி ஆன்லைன் ஷாப்பிங்கின் போது இதையெல்லாம் கவனிங்க ப்ளீஸ்! #MustRead

தீபாவளி என்றாலே அனைவரின் மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது ஷாப்பிங்தான். அது இல்லாத தீபாவளி என்பது இயலாத ஒன்று. அந்த அளவுக்கு தீபாவளியும் ஷாப்பிங்கும் ஒன்றிணைந்துவிட்டது. இதுதான் சமயம் என்று கடைக்காரர்கள் தங்களின் பொருள்களை அதிக லாபத்தில் விற்றுவிட விளம்பர யுக்தியைக் கையாண்டு மக்களை தங்களின் வலையில் சிக்கவைக்கிறார்கள். ஆனாலும், அதை மக்கள் பொருட்படுத்தாது ஷாப்பிங் செய்வதற்கு அலைமோதுகின்றனர். இது ஒருபுறமிருக்க தற்போதுள்ள காலத்தில் ஆன்லைன் மூலமாகப் பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சின்ன குண்டூசிகளில் ஆரம்பித்து இருசக்கர வாகனங்கள், கார்கள், வீடுகள் வாங்குவதுவரை வளர்ந்திருக்கிறது ஆன்லைன் ஷாப்பிங். இதில் உள்ள ஆபத்துகள் தெரியாமல் மக்கள் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். அது தெரியாமல், மக்களும் அதில்போய் சிக்கிப் பணத்தை பறிகொடுப்பது மட்டுமல்லாமல் தேவை இல்லாத மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

கவர்ந்திழுக்கும் ஆன்லைன் மையங்கள்!

பெரும்பாலானோர் நேரடியாகக் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதைத் தவிர்த்துவிட்டனர். ஏனென்றால், அனைத்துவிதமான பொருட்களும் ஆன்லைன் வர்த்தகத்திலேயே கிடைக்கிறது. அதுவும் நாம் ஆர்டர் செய்தால், வீட்டுக்கே வந்து பொருட்களைக் கொடுத்துவிடுகின்றனர். இதனால் நேரம் விரயமாவது தவிர்க்கப்படுகிறது. தேவை இல்லாத அலைச்சல் மற்றும் அதனால் உண்டாகும் மனஉளைச்சல் அனைத்தும் தவிர்க்கப்படுகிறது. மேலும், குறைவான விலையில் அதிக பொருட்கள் தரமாகவும், நம்பகத்தன்மையாகவும் கிடைக்கிறது என்று எண்ணி மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை அதிகம் விரும்புகின்றனர். இதனைப் பயன்படுத்திக்கொள்ள தற்போது சில போலி ஆன்லைன் வர்த்தக மையங்களும் செயல்படத் தொடங்கியிருக்கின்றன. இந்தப் போலி ஆன்லைன் மையங்கள், அதிரடியாகப் பல சலுகைகளைக் கொடுத்து மக்களைக் கவர்ந்திழுக்கின்றன. இவை, சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலமும், எஸ்.எம்.எஸ் மூலமாகவும் விளம்பரங்களை அனுப்புகின்றன. உதாரணமாக மின்னணுச் சாதனங்கள், ஆடைகள், இதர வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை 90 சதவிதத்துக்கும் மேல் தள்ளுபடி தருவதாக சமீபத்தில் ஒரு ஆன்லைன் மையம் அறிவித்திருந்தது. இந்தச் சலுகை, நம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது அல்லவா? இதுபோல இன்னும் பல நம்பமுடியாத சலுகைகளைச் சொல்லி, நம்மை அந்த இணையதளத்துக்குள் உள்நுழைய வைத்து, தரமில்லாத பொருட்களை நம் தலையில் கட்டி, நம் பணத்தைச் சூறையாடுவது அவர்களின் முக்கிய எண்ணம்.

பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

அதிரடிச் சலுகைகளைப் பார்த்து அவற்றை வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் நமது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போனவற்றின் விவரங்களைக் கொடுத்துவிடுவோம். இதனைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் போலி இணையதளங்கள் உங்கள் கார்டுகளைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்துக்கொண்டு, கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் கொள்ளையடித்துவிடுவார்கள். மேலும், இணையதளங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் சில விளம்பரங்கள், நாம் ‘கிளிக்’ செய்யாமல் இருந்தாலும்கூட, அவை தானாகவே ஓப்பன் ஆகிவிடும். இவை உங்கள் கார்டுகளின் தகவல்களைத் திருடுவதற்கான யுக்தி ஆகும். மேலும், நம்பத்தகுந்த இணையம் என்றாலும்கூட பொருட்களை வாங்கும்போது எப்போதும் ஒரே கார்டை பயன்படுத்துங்கள். ஏனென்றால், அப்போதுதான் நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளீர்கள்; என்னென்ன பொருட்கள் வாங்கியுள்ளீர்கள்; எந்தத் தளத்திலிருந்து வாங்கியிருகிறீர்கள் என்று நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பழக்கமில்லாத அல்லது அதிகம் தெரியாததுமான இணையதள விளம்பரங்கள் வந்தால் அவற்றைப் புறக்கணிப்பதே மிகச் சிறந்தது.

ஃப்ரீ வைஃபை வேண்டாம்!

சில நேரங்களில் நாம் ஏதேனும் ஒரு ஷாப்பிங் மால்களிலோ அல்லது ஃப்ரீ வைஃபை கிடைக்கும் இடங்களிலோ நின்றுகொண்டிருக்கும்போது, நம்பத்தகுந்த இணையதளத்திலிருந்து நல்ல சலுகையை அறிவித்து இருப்பார்கள். நாமும் இது நம்பிக்கையான ஆன்லைன் வர்த்தகத்தளம்தானே? இதில், என்ன பிரச்னை வரப்போகிறது என்று அந்தப் பொருளை புக் செய்ய நினைத்தால், உண்மையில் நீங்கள் மாபெரும் ஏமாளிகளே! ஏனென்றால், அந்த நம்பத்தகுந்த ஆன்லைன் வர்த்தகத்தளம் உண்மையிலேயே உங்களுக்குச் சிறந்த சலுகையை அறிவித்து இருந்தாலும், நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருப்பது ஃப்ரீ வைஃபை என்பதை மறக்க வேண்டாம். ஃப்ரீ வைஃபையில் நீங்கள் இயங்கும்போது உங்கள் அனைத்துத் தகவல்களையும் திருடுவது என்பது ‘ஸ்மார்ட் கொள்ளையர்களுக்கு’ அல்வா சாப்பிடுவதுபோல. சில நொடிகளில் உங்கள் தகவல்கள் திருடப்பட்டு, பணம் கொள்ளையடிக்க 99 சதவிகிதம் வாய்ப்புகள் அதிகம். எனவே, ஃப்ரீ வைஃபையில் நீங்கள் இருக்கும்போது எவ்வளவு பெரிய சலுகைகள் வந்தாலும், தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள்.

நம்ப முடியாத சலுகைகள்

சில இணையதளங்கள் நம்மைக் கவர்வதற்காக நம்ப முடியாத சலுகைகள் கொடுத்தால், கிடைத்தவரை லாபம் என்று பொருட்களை வாங்காதீர்கள். அது, பல சிக்கலில் உங்களைக்கொண்டு போய்ச் சேர்க்கும். மேலும், நீங்கள் பார்க்கும் பொருட்களின் விலையை, மற்ற இடங்களில் விற்பனை செய்யும் அதே பொருட்களின் விலையை ஒப்பீடு செய்துகொண்டு முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவது அவசியம். அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள அதே பொருட்கள் விலை அதிகமாகவும், குறிப்பிட்ட அந்த இணையதளத்தில் விலை குறைவாகவும் மற்றும் அந்தப் பொருட்களின் படங்கள் நம்மை மிகவும் கவர்வதுபோலவும் இருந்தால், அந்த இணையதளத்துக்கு பை சொல்லி வெளியேறுங்கள்.

அறிமுகமில்லாத இணையதளம் வேண்டாம்:

சமூக வலைதளங்களின் மூலமாகவோ அல்லது மொபைல் எஸ்.எம்.எஸ் மூலமாகவோ நம்ப முடியாத சலுகைகள் உங்களைத் தேடி வந்தால் அவசரப்பட்டு பொருட்களை வாங்கிவிடாதீர்கள். முதலில் அந்த இணையதளத்தின் விற்பனையாளரைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். அவர்கள் சட்டப்பூர்வமாக இயங்குகின்றனரா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். பின்பு, அந்த விற்பனையாளரிடம் பொருட்கள் வாங்கிய, வாடிக்கையாளர்களின் மதிப்புரைகளை இணையத்தில் தேடி, படித்து, உறுதி செய்துகொள்ள வேண்டும். போலியாக இயங்கும் சில இணையதளங்கள் அதிகாரபூர்வத் தோற்றம்கொண்ட URL-ஐப் பயன்படுத்தும். உதாரணமாக [company]onsale.com, official[Company].com போன்ற URL-களைப் பயன்படுத்தும். இவ்வாறு பயன்படுத்தும் அனைத்து இணையதளங்களும் போலி என்று சொல்ல முடியாது. ஆனாலும், போதிய தகவல்கள் இல்லாமலும் அந்த இணையதள வர்த்தகம் பற்றிய அதிகாரபூர்வ விவரம் இல்லாமலும் இருந்தால் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். இணையதள பிற தகவல்களைப் பற்றி அறிய WHOIS என்ற இணையதளத்தை நாடுங்கள்.

‘பில்’லைப் பத்திரப்படுத்துங்கள்!

பொருட்கள் திருப்தி அளிக்கவில்லை எனில், பணம் திருப்பித் தரப்படும் போன்ற வாக்குறுதிகள் கொடுப்பார்களாயின், அவர்களிடமிருந்து வாங்கும் பொருட்களுக்கான பில் மற்றும் கணக்கில் விதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டணங்களைத் திரும்பப் பெறவதற்கு, அதன் பில் அவசியமாகிறது. ஒருவேளை இணையதளங்கள் கட்டணங்களைத் திரும்பத் தராவிடில், அவர்கள் மீது நீதிமன்றம் வாயிலாக வழக்குத் தொடுத்து உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு பில் உதவும்.

பாதுகாப்புச் செய்யப்பட்ட இணையதளமா

கிரெடிட், டெபிட் கார்டுகள் அல்லது வங்கிக் கணக்கு சார்ந்த தகவல்களை அனுப்பும்போது, அந்த இணையதளம் பாதுகாப்புச் செய்யப்பட்டதா என அறிந்தபின்பு தகவல்களைச் சொல்லுங்கள். அதாவது, https:// என்று உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும், அதன் பேட்லாக் ஐகானை செக் செய்துகொள்வது நல்லது. வங்கி சம்பந்தப்பட்ட தகவல்கள் அனுப்பும்போது அந்த இணையதளம் நீட்டிக்கப்பட்ட மதிப்பாய்வுச் சான்றிதழ் (Extended Validation Certificate) பெற்றுள்ளதா என்பதையும் நினைவில்கொண்டு செயல்படுங்கள்.

ஹேக் செய்யப்பட்ட இணையதளங்களை தவிர்க்கவும்!

இணையதளத்தில் நாம் ஒரு பொருளை வாங்குவதற்கு கிளிக் செய்யும்போது, வேறு ஏதேனும் இணையதளத்துக்கு உங்களை அழைத்துச் சென்றால் அந்த இணையம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். அதுபோன்ற இணையதளங்களிலிருந்து உடனடியாக வெளியேறிவிடுங்கள்

மேலும் சில விளம்பரங்கள் தானாகவே ஓப்பன் ஆகினால் அவை உங்களை ஸ்பேம் ப்ரோகிராம் பக்கத்துக்கு அழைத்துச்செல்லும். இவை, மிக ஆபத்தானவை. இந்த ஸ்பேம் ப்ரோகிராம்கள் அந்தச் சமயம் உங்களின் கணக்கில் எந்த விதமான தகவல்களையும் திருடவில்லை என்றால், அந்த ஸ்பேம் ப்ரோகிரமால் சில வைரஸ்கள் உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் கணினியிலோ அல்லது மொபைலிலோ தரவிறக்கம் செய்யப்பட்டுப் பின் பொறுமையாக உங்களை நோட்டமிட ஆரம்பிக்கும். பின்னாளில் உங்களின் கணக்கில் உள்ள மொத்த தகவல்களையும் இந்த வைரஸ் திருடிவிடும்.

லிங்க் வெப்சைட் வேண்டாம்!

ஒரு வெப்சைட்டில் இருக்குபோது அங்கிருந்து இன்னொரு வெப்சைட்டுக்குச் செல்வதற்கு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஒருபோதும் அவ்வாறு செல்லாதீர்கள். நீங்கள் இருக்கும் குறிப்பிட்ட அந்த இணையதளத்தில் வேலை முடிந்தவுடன், மீண்டும் பிரௌசரில் எந்த வெப்சைட்டுக்குச் செல்ல நினைக்கிறீர்களோ, அந்த வெப்சைட்டின் URL-ஐக் கொடுத்து செல்லுங்கள். இதுவும் உங்கள் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

தரமான பொருளைத்தான் பெற்றுக்கொண்டீர்களா?

ஆன்லைனில் பொருட்கள் பெற்றுக்கொண்ட பிறகு, அந்தப் பொருட்கள் இணையதளத்தில் சொல்லியுள்ள தரத்தில் உள்ளதா... சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். எவ்வளவு சீக்கிரம் அந்தப் பொருளின் தரம் பற்றி மோசடி வழக்கை மேற்கொள்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கான நன்மை கிடைக்கும்.

‘கண்டிஷன் அப்ளை’ கவனம் முக்கியம்

நாம் அனைவருமே பொருளின் மீதுள்ள மோகத்தால், இணைய வர்த்தகத்தாரின் கண்டிஷன்களைக் கவனிக்க மறந்துவிடுகிறோம். அவர்கள் கொடுத்துள்ள கண்டிஷன்களை மிக நுணுக்கமாகப் படிக்கவேண்டும். ஏனென்றால், இணையதளத்தில் எங்கேனும் ஓர் ஓரமாக மிகச் சிறிய எழுத்துகளால் அவர்களின் இணையதளம் பற்றியும், பொருளின் நம்பகத்தன்மை பற்றியும் வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து இருப்பார்கள், இதனைப் படிக்காமல் அந்த இணையதளத்துக்குள் செல்லாதீர்கள்.

மேற்கண்ட இந்த முறைகள் யாவும் தீபாவளி ஆன்லைன் ஷாப்பிங்குக்கு மட்டும் அல்ல... அனைத்துக் காலத்துக்கும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றிச் சந்தோஷமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்துமகிழுங்கள்.

- ஜெ.அன்பரசன்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ