Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு துறவி மீன் வளர்க்க பயிற்சி தருகிறார்... எங்கே... ஏன்?

சேது சமுத்திரத் திட்டத்துக்கான பாதையைத் தேர்வு செய்தபோது, ‘‘பாராளுமன்றத்துக்குள் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு குதிப்பேன்’’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் சுவாமி பிரணவானந்தா. இவர் தற்போது மீனவப் பெண்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறார்.

யார் இந்த பிரணவானந்தா?

கோவையைப் பூர்வீகமாகக் கொண்டவர் சுவாமி பிரணவானந்தா. விவேகானந்தரின் மீது உள்ள பற்றால் துறவியாக மாறிக் கடந்த 36 வருடங்களுக்கு முன் ராமேஸ்வரத்துக்கு வந்தார். இங்குள்ள மீனவர்கள் நிறைந்த புதுரோடு பகுதியில் ராமகிருஷ்ணரின் பெயரில், நகர் ஒன்றை உருவாக்கி... அதில், சுவாமி விவேகானந்தா குடிலையும் ஏற்படுத்தினார். பல்வேறு தரப்பினரின் உதவியுடன் ஏழ்மை நிலையில் உள்ள மீனவக் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக ஆரம்பப் பள்ளி, நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கியிருக்க ஆதரவுக் கூடம், அன்னதானம் போன்றவற்றை நடத்திவந்தார்.

இலங்கை ராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் அகதிகளாக வந்திறங்கியபோது அவர்களை மீட்டுவந்து, உணவுகொடுத்து முகாமுக்கு அனுப்பிவைக்கும் பணிகளையும் செய்துவந்தார். இலங்கைத் தமிழர்களுடன், தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். அதில் பங்கேற்ற சுவாமி பிரணவானந்தா, ‘‘தமிழக மீனவர்களைக் காக்கத் துப்பாக்கி தூக்கிப் போராடவும் தயார்’’ என அதிரடியாகப் பேசினார். சேது சமுத்திரத் திட்டத்துக்கான பாதையினைத் தேர்வு செய்தபோது... அதில், கோதண்டராமர் கோயில் பாதிக்கப்படும் சூழல் எழுந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இவர், ‘‘கோதண்டராமர் கோயிலைக் காக்க, பாராளுமன்றத்துக்குள் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு குதிப்பேன்’’ எனப் பீதியூட்டினார்.

சுவாமியின் அதிரடிப் பேச்சுகளால் அரண்டுபோன அரசுத் துறைகள், அவரது ஆசிரமத்துக்கு வெளிநாடுகள் மூலம் கிடைத்துவந்த உதவிகளுக்கு செக் வைத்தது. இதனால் அவர் நடத்திவந்த பள்ளிக்கூடம், குழந்தைகள் ஆதரவுக்கூடம் எல்லாம் வரிசையாக மூடப்பட்டது. எஞ்சியிருக்கும் ஆசிரமத்தில் நாள்தோறும் தியானம், 20-க்கும் குறைவான குழந்தைகளுக்கு உணவு வழங்குதல் எனக் கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தனது தொண்டினை விடாப்பிடியாக செய்துவருகிறார் பிரணவானந்தா.

தொண்டு செய்வதையே தனது தொழிலாகக் கொண்ட சுவாமி பிரணவானந்தா மீனவப் பெண்களின் மேம்பாட்டுக்கான புதிய முயற்சிகளை மீண்டும் தொடங்கியிருக்கிறார். பருவநிலை மாற்றம், மீன்வரத்துக் குறைவு, இடைத்தரகர்களின் கொள்ளை போன்றவற்றாலும், போதுமான பொருளாதார விழிப்பு உணர்வு இல்லாததாலும் பல நாட்டுப் படகு மீனவர்களின் குடும்பங்கள் இன்றும் நல்ல நிலையை அடையவில்லை. இவற்றைக் கருத்தில்கொண்டு, மீனவப் பெண்களின் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் வகையில் காளான் வளர்ப்பு மற்றும் அலங்கார மீன் குஞ்சுகள் வளர்க்கும் திட்டங்களை தனது ஆசிரமத்தில் தொடங்கியுள்ளார்.

மீனவப் பெண்களுக்கு மாற்றுத் தொழில்!

இந்தப் பகுதியில் உள்ள மீனவப் பெண்களை ஒரு குழுவாக அமைத்து, அவர்களுக்கு மேலூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழக கல்லூரியின் மூலம் காளான் வளர்ப்புப் பயிற்சி பெற உதவினார். அவர்களின் உதவியுடனும் அரசு வேளாண்மைத் துறை மற்றும் மீன்துறை அலுவலர்களின் ஒத்துழைப்புடனும் தீவுப்பகுதியில் முதன்முறையாக காளான் வளர்ப்பினை மேற்கொண்டிருக்கிறார். இதற்காகத் தனது ஆசிரமத் தோட்டத்தில் காளான் திசு வளர்ப்பு மையம், காளான் வளர்ப்புக் கூடம் போன்றவற்றைப் பல ஆயிரம் செலவில் அமைத்துள்ளார். கடந்த விஜயதசமி நாளில் தொடங்கப்பட்ட இந்த மையத்தில், தற்போது காளான்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ளது. சுமார் 150 பெட்களில் இந்தக் காளான் திசுக்கள் வேளாண் அதிகாரிகளையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் வளர்ந்துள்ளது. ‘‘பரிசார்த்த முறையில் உருவாக்கப்பட்ட இந்தக் காளான் வளர்ப்புத் திட்டம் நல்ல பலனைத் தந்துள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்தி நலிவடைந்த நிலையில் உள்ள மீனவப் பெண்களுக்கு வருவாயினை ஈட்டித் தரக்கூடிய மாற்றுத் தொழிலாக உருவாக்குவதே தனது லட்சியம்’’ என்கிறார் சுவாமி பிரணவானந்தா.

இதேபோல் மண்டபத்தில் உள்ள கடல் மீன் வளர்ப்பு மையம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவியுடன் கடல்நீர் மற்றும் நன்னீர் தொட்டிகளில் அலங்கார மீன்குஞ்சுகள் வளர்ப்பதற்கான பயிற்சியினையும் மீனவப் பெண்களுக்கு அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அலங்கார மீன்குஞ்சுகளை கடல்நீர் மற்றும் நன்னீர் தொட்டிகளில் தனித்தனியாக வளர்த்தும் வருகிறார். இந்த மீன்குஞ்சு வளர்ப்புத் திட்டமும் காளான் வளர்ப்பைப்போல் வெற்றியடைந்தால், அதனையும் இந்தப் பகுதி மீனவப் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கான மாற்றுத் தொழிலாக உருவாக்கவும் எண்ணியிருக்கிறார் இந்த மீன் வளர்க்கும் துறவி.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close