Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளிக்கு ஊருக்கு போகிறவர்கள் கவனத்துக்கு...! - 10 பாயின்ட் செக்லிஸ்ட்!

மூட்டை முடிச்சுகளோடு மூச்சு முட்டும் கூட்டத்துக்கு நடுவே தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருப்பீர்கள். அந்தப் பயணம் சூப்பராக அமைய ஒரு சின்ன செக்லிஸ்ட். இதை நீங்கள் லேப்டாப் ஷட் டவுன் செய்யும் நேரத்திற்குள்ளோ, துணிகளை பையில் திணிக்கும் கேப்பிலோ படித்துவிடலாம். ஸோ, படிச்சிருங்க மக்களே!

* எந்த நகரமாக இருந்தாலும் சரி, மொத்தமாக எல்லாருமே சொந்த ஊருக்குத்தான் போய்க்கொண்டிருப்பார்கள். எனவே முக்கிய சாலைகளில்  கபாலி பர்ஸ்ட் ஷோ போல கூட்டம் அள்ளும். எனவே குறைந்தது ஒரு மணிநேரம் முன்பே கிளம்பிவிடுவது நல்லது. கார், ஆட்டோ என எல்லாமே பிஸியாகத்தான் இருக்கும். ஸோ, பஸ் ஏறும் இடத்துக்கு எப்படி செல்கிறீர்கள் என்பதை முன்பே யோசித்துக்கொள்ளுங்கள்.

* எல்லா இடங்களிலும் டெபிட் கார்டுகள் செல்லுபடியாகாது. எனவே கையில் கொஞ்சம் பணம் வைத்திருங்கள். உங்கள் ஏரியா ஏ.டி.எம்மிலேயே எடுத்துக்கொள்ளுதல் உத்தமம். அதுபோக, சில்லறை கொஞ்சமும் வைத்துக்கொள்ளுங்கள்.

* போர்டிங் பாயிண்ட் எங்கே எனத் தெளிவாக செக் செய்துகொள்ளுங்கள். பெரும்பாலும் புறநகர் பகுதிகளாகத்தான் இருக்கும். முன்பதிவு மெயிலில் இல்லாவிட்டால் போன் செய்து கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் அருகிலிருக்கும் போர்டிங் பாயிண்ட் செல்வதே புத்திசாலித்தனம்.

* புறநகர் பகுதிகளில் ஹோட்டல்கள் சுமாராகத்தான் இருக்கும். எனவே சாப்பிட சலிப்பவர்கள் ஸ்நாக்ஸ் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நைட் முழுவதும் பக்கத்திலிருப்பவர் காதில் பஞ்சு வைத்துக்கொள்ளுமளவிற்கு கொறித்துக் கொண்டிருக்கலாம். கூல்ட்ரிங்க்ஸ் ஆடம்பரம். தண்ணீர் அத்தியாவசியம்.

* ஆபிஸில் இருந்து அப்படியே பஸ் ஏறப் போகிறவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது செல்போன் சார்ஜ்ஜைத்தான். முடிந்த அளவிற்கு சார்ஜ் போட்டுக் கொண்டு கிளம்புங்கள். இ-டிக்கெட் காட்டவாவது மொபைல் வேண்டுமே. இல்லையெனில் பவர் பேங்க்கை சரணடையுங்கள்.

* ஆம்னி பஸ்சில்தான் முக்கால்வாசி பொதுஜனம் செல்கிறது. எனவே அதில் நடக்கும் டிக்கெட் முறைகேடுகளை பற்றி புகாரளிக்க 1800-425-6151 என்ற ஹெல்ப்லைனை அறிவித்திருக்கிறது அரசு. இதை மறக்காமல் நோட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

* இ-டிக்கெட் மெயில்/மெசேஜை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். சில பஸ் நிறுவனங்கள் டிக்கெட் ப்ரின்ட் அவுட் கேட்பார்கள். அதையும் ரெடியாய் கையில் வைத்துக்கொண்டால் டன்டனாடண்!

* பெண்களுக்கான ஓய்வறை சிக்கல்கள் பயணத்தின்போது மிக அதிகம். எனவே கிளம்பும்போதே தேவையான முன்னேற்பாடுகளுடன் தொடங்குவது நல்லது. தண்ணீர் அளவாய் குடிப்பது நலம்.

* குழந்தைகளுக்குத் தேவயான ஸ்நாக்ஸ், பால், சுடுதண்ணீர் போன்றவற்றை மறக்காமல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பயணங்கள் அவர்களுக்கு அலுப்பு தரக்கூடியவை. கூட்டத்தில் உங்கள் ரேடாரில் இருந்து தவறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

*எப்போதாவது ஊருக்குப் போகிறவர்கள்தான். ஆனால் இருக்கின்ற கூட்டத்தில் நாமே அஞ்சலிப் பாப்பா போல
திருதிருவென முழிக்கும்போது லக்கேஜ்களை பத்திரமாக பார்த்துக்கொள்வது சிரமம். எனவே முடிந்த அளவுக்கு லக்கேஜ்களை குறைத்துக்கொள்ளுங்கள். நான்கைந்து மாத அழுக்குத்துணிகளை துவைக்க எடுத்துச் செல்வதெல்லாம் கும்பிபாகம் ப்ரோ!

தட்ஸ் ஆல்! பத்திரமா ஊர் போய் சேருங்க. தீபாவளி வாழ்த்துகள் மக்களே!

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ