Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை எப்படி பார்க்கணும் தெரியுமா!?

நாளை இந்நேரம் 'ஹேப்பி தீபாவளி' என பார்க்கும் எல்லாருக்கும் வாழ்த்து சொல்லிக் கொண்டிருப்பீர்கள். தீபாவளி தேதி, உங்கள் தோரணை எல்லாம் வருஷா வருஷம் மாறலாம். மாறாத ஒன்றே ஒன்று இருக்கிறது. அது டிவியில் வரும் சிறப்பு நிகழ்ச்சிகள். சாட்டிலைட் டிவி தொடங்கிய காலத்திலிருந்து டி.டிஹெச்சுக்கு பிந்தைய யுகம் வரை அதே டெம்ப்ளேட்டில் சீனிவெடி கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள் டிவிக்காரர்கள். அந்த டெம்ப்ளேட் நிகழ்ச்சிகளின் தொல்லைகளிலிருந்து முடிந்தவரை தப்பிப்பதற்கான ஐடியாக்கள்தான் இவை.

* விடியற்காலையில் எல்லா டிவிகளிலும் சொல்லி வைத்தது போல இசை நிகழ்ச்சிகள்தான் இருக்கும். நல்ல நாளை மங்களகரமாக தொடங்கவேண்டும் என்ற அவர்களின் எண்ணம் சரிதான். ஆனால் எழுந்திருப்பதே ஒன்பது மணிக்குத்தான் என்பதால் அதை எல்லாம் பார்க்கவே வாய்ப்பு இருக்கப்போவதில்லை.

* நீங்கள் எழுந்திருக்கும் நேரத்திற்கு கண்டிப்பாய் ஏதாவது டாக் ஷோ நடந்து கொண்டிருக்கும். அதில் தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்களின் ஹீரோ, ஹீரோக்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். வேறென்ன, 'இது ஒரு உலகத்தரமான படம். இது ஒரு கிலோமீட்டர் கல் சினிமா. இந்த அனுபவமே எனக்கு புதுசு' போன்ற 'காளிதாஸ்' காலத்து வசனங்கள்தான். இந்த வசனங்களை எத்தனை முறை சொல்கிறார்கள் என எண்ணிக்கொண்டிருந்தால் எபிசோட் போவதே தெரியாது.

* அதன்பின் பட்டிமன்றம். 'பட்டிக்காடா - பட்டணமா?', 'பொறந்த வீடா - புகுந்த வீடா?', 'சொந்தக்காரர்களா - பணமா?' என ஏற்கெனவே புளித்துப் போன மாவில்தான் தோசை ஊற்றுவார்கள். டிஜிட்டல் யுகம் என்பதால் அதில் சொல்லும் காமெடி டயலாக்குகளில் முக்கால்வாசி வாட்ஸ் அப் பார்வேர்டுகள்தான். எந்தந்த க்ரூப்களில் என்னன்ன காமெடி வந்தது என ப்ளாஷ்பேக் ஓட்டிப் பார்த்தால் பட்டிமன்றம் போயே போச்!

* அதன்பின் ஒருகாலத்தில் ஓஹோவென இருந்த இசையமைப்பாளர்களை வைத்து கிராமம் vs நகரம் என இசைக் கச்சேரி நடத்துவார்கள். ஒரு பக்கம் கானா, டப்பாங்குத்து, மறுபக்கம் ராப், வெஸ்டர்ன் என பட்டிமன்றத்துக்கும் சற்றும் குறையாத பழங்கால டெம்ப்ளேட். சேனலை ம்யூட் செய்துவிட்டு பாடுபவர்களின் ரியாக்‌ஷன்களை பார்த்தால் ஆவ்சம் ஆயிரம் வாலாவாக இருக்கும்.

* அதற்குப் பின் தீபாவளி ரிலீஸ் படங்கள் பற்றிய திரைப்பார்வை. விக்கிபீடியா இருக்கும் படம் பற்றிய டீட்டெயில்களை வாசிப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷலே. அதுபோக எக்ஸ்க்ளூசிவ் காட்சிகள் என சிலவற்றை ஒளிபரப்புவார்கள். அவற்றுக்கும் ட்ரெய்லரில் இருக்கும் காட்சிகளுக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கும் வேலையை செய்தால் பொழுது சல்லென ஓடும்.

* அதன்பின் 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' ரக படங்கள். படம் தொடங்கும்போதே யூ ட்யூப்பில் வேறு ஏதாவது பார்க்காத படம் ஒன்றை போட்டுக்கொள்ளுங்கள். கண்டிப்பாக இரண்டு மணி நேர படத்தை நள்ளிரவு வரை போடுவார்கள் என்பதால் கிடைக்கும் கேப்களில் யூ டியூப்பில் இரண்டு படங்கள் பார்த்துவிடலாம். இதற்கு பேர்தான் மல்ட்டி டாஸ்க்கிங்!

* இந்த தீபாவளிக்கு இன்னொரு சூப்பர் வாய்ப்பும் இருக்கிறது. இந்தியா - நியூசிலாந்து மோதும் கடைசி ஒருநாள் போட்டி. ரொம்பப் போரடித்தால் அதை போட்டு உட்கார்ந்துவிடலாம். தோனியோ, கோலியோ அடிக்கடி பவுண்டரி அடித்து சிலிர்க்க வைப்பார்கள். சொறிந்து சொறிந்தே பொழுதைக் கழித்துவிடலாம்.

* இப்படி ஆயிரம் யோசனைகள் சொன்னாலும் தப்பிக்கவே முடியாத பொறி ஒன்று இருக்கிறது. அது - விளம்பரங்கள். மொத்த நாளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை கணக்கிட்டுப் பார்த்தால் மொத்தமே 4 மணிநேரம்தான் இருக்கும். பாக்கி எல்லாம் மூச்சு முட்டிம் விளம்பரங்கள்தான். என்ன...அதிலிருந்து தப்பிக்கணுமா? ஹைப்போதெட்டிக்கல் கேள்வி. ஸோ, யோசிச்சு அடுத்த தீபாவளிக்கு சொல்றோம் பாஸ்! 

-நித்திஷ்
 

எடிட்டர் சாய்ஸ்