Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அசத்தலாக வருகிறது பஜாஜ் VS400

பஜாஜ் நிறுவனத்தின் பல்ஸர் பைக்குகளை, ஹாலிவுட் படமான ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படத்துடன் ஒப்பிடலாம். ஏனெனில், ஒவ்வொரு பாகத்திலும் எப்படி இதன் ஹிட் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறதோ, அதேபோல 135சிசி தொடங்கி 220சிசி வரை எத்தனை பல்ஸர்கள் வந்தாலும், அவை இளைஞர்களிடையே தெறி ஹிட் அடித்துள்ளன. எனவே இந்திய இரு சக்கர வாகனச் சந்தையில், பெர்ஃபாமென்ஸ் பைக்குகளைப் பொறுத்தவரை, பஜாஜின் பல்ஸரைப் போல அதிக ரசிகர்களை வேறெந்த தயாரிப்பும் கவர்ந்ததில்லை என தைரியமாகச் சொல்லலாம். தற்போது டிவிஎஸ் அடுத்த வருடத்தில் அறிமுகப்படுத்த உள்ள அப்பாச்சி 300 மற்றும் பிஎம்டபிள்யூ G310R பைக்குகளுடன் போட்டியிடும் விதமாக, VS400 எனும் பைக்கைக் களமிறக்குகிறது பஜாஜ். இந்த பைக்கைப் பற்றிய தகவல்களின் தொகுப்பு பின்வருமாறு;

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், பஜாஜ் முதன் முதலாக பல்ஸர் CS400 எனும் கான்செப்ட் மாடலைக் காட்சிப்படுத்தியது. இதில் CS400ல் CS என்பது 'Crusier Sport ஆகும். தற்போது இதே பைக்தான் VS400 (Vantage Sport) எனப் பெயரிடப்பட்டுள்ளது. கிரேக்க கடவுளான Kratos எனும் பெயரிலான புதிய பிராண்டின் முதல் பைக்காகக் களமிறங்கப் போவது இதுதான்!

VS400 பார்ப்பதற்கு நேக்கட் பைக்கைப் போல இருந்தாலும், மஹிந்திரா மோஜோ போல ஸ்போர்ட்ஸ் க்ரூஸர் செக்மென்ட்டில் இதனைப் பொசிஷன் செய்ய உள்ளது பஜாஜ். தவிர அப்பாச்சியைப் போல, இந்த பைக்கில் இன்ஜின் கவுல் இருப்பது அழகு. 

மற்ற பல்ஸர் பைக்குகளைப் போலவே, இளைஞர்களைக் கவரும் வகையில் VS400 பைக்கின் டிஸைன் மிரட்டலாக அமைந்துள்ளது. அசப்பில் டுகாட்டி டயாவல் பைக்கை இது நினைவுபடுத்துவதால், ''ஆரம்பம்'' பட அஜித் போல, இளைஞர்கள் ஸ்டைலாக இந்த பைக்கில் செல்லும் நாள், வெகு தொலைவில் இல்லை!

CS400 கான்செப்ட்டில் இருந்த LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், ஸ்பிளிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆகியவை VS400 பைக்கில் தொடர்கின்றன. ஆனால் முன்பக்க USD ஃபோர்க்குக்குப் பதிலாக, தடிமனான டெலிஸ்கோபிக் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் வரவேற்கத்தக்க மாற்றமாக, ஒற்றை இருக்கை இருவர் தாராளமாக அமர்ந்து செல்லும் வகையில் ஸ்பிளிட் சீட்டாக மாற்றப்பட்டுள்ளது.

கேடிஎம் டியூக் 390/RC390 பைக்கில் இருக்கும் அதே இன்ஜின் - கியர்பாக்ஸ்தான் இதிலும் என்றாலும், இந்த பைக்கின் கேரக்டருக்கு ஏற்ப, பஜாஜின் டிரேட்மார்க் தொழில்நுட்பமான ட்ரிபிள் ஸ்பார்க் உடன், இந்த இன்ஜின் ரி-ட்யூன் செய்யப்படும் எனத் தெரிகிறது. எனவே கேடிஎம் பைக்கைவிடக் குறைவாக, அதாவது 35 - 40bhp பவரை இந்த பல்ஸர் வெளிப்படுத்தப் போகிறது என்பதால், பஜாஜின் பவர்ஃபுல்லான மற்றும் விலை அதிகமான பைக்காக இது அறியப்படும் வாய்ப்புகள் அதிகம்.

இவ்வுளவு பவரைக் கட்டுப்படுத்த, திறன்மிக்க பிரேக்குகள் அவசியம். எனவே கேடிஎம் 390 பைக்குகளைப் போல, இரு சக்கரங்களுக்குமான பெட்டல் டிஸ்க் பிரேக் செட்-அப்பிற்கு, டூயல் சேனல் ஏபிஎஸ் அமைப்பை பஜாஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம். 

சுமார் 2 லட்ச ரூபாய்க்கு இந்த பைக், வரும் நவம்பர் மாதத்தில் அறிமுகமாக உள்ளது. ஆக, இளைஞர்களின் இதயத்துடிப்பை VS400 எகிறச் செய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

- ராகுல் சிவகுரு

எடிட்டர் சாய்ஸ்

MUST READ