Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘அரசியலை நான் தொழிலாகப் பார்ப்பதில்லை!’ - இந்திரா காந்தி நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

‘‘னக்கு நல்லது செய்தவர்களைவிட, தீங்கு செய்தவர்கள்தான் அதிகம். ஆனால், என்னிடம் அவர்கள் திரும்ப வரும்போது யாரிடமும் எதுவும் சொல்லிக்காட்டாமல் அவர்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அவர்கள் மேல் கசப்புணர்வு தோன்றாமல் இருப்பதும்’’ என்றவர் அன்னை இந்திரா காந்தி. அவருடைய நினைவு தினம் இன்று.

இந்திராவின் சிறுவயது நாட்கள்!

கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் அலகாபாத் நகரம்; அங்கு, ‘ஆனந்த பவனம்’ என்னும் அழகு மாளிகை. அரண்மனைக்கு ஒப்பான அந்த மாளிகையில் ஒரு இளவரசரை விடவும் மேன்மையாக வளர்க்கப்பட்டவர் ஜவஹர்லால் நேரு. இவருக்கும் காஷ்மீர் ரோஜாவுக்கு ஒப்பான கமலாவுக்கும் மகளாகப் பிறந்தவர் இந்திரா பிரியதர்ஷினி.

தங்கத் தொட்டில்; வெள்ளித் தட்டு; அலங்கார நடைவண்டி; 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்... இவையனைத்தும் அரண்மனை போன்ற அந்த மாளிகையில் நிரம்பி இருந்தன. இருந்தும் என்ன பயன்? சிறுமி இந்திராவின் உறவுகள் எல்லாம் சிறைச்சாலைகளிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் அல்லவா குழுமியிருந்தன. சிறைவாசம் முடிந்து வரும் தாத்தா மோதிலால் நேருவின் மடியில் சில காலம் விளையாடுவார் சிறுமி இந்திரா. பிறகு, மீண்டும் கைதாகிச் சிறைக்குச் சென்றுவிடுவார் தாத்தா. அப்பா ஒரு சிறையில்; அன்னையும், பாட்டியும் அந்நிய நாட்டுத் துணிகளைச் சேகரித்துத் தீயிட்டுக் கொளுத்தும் கண்டன ஊர்வலத்தில். இப்படித்தான் நகர்ந்தன சிறுமி இந்திராவின் சிறுவயது நாட்கள்.

‘தலைமைக்கான தகுதி அதிகம் பெற்றவர்!’’

உறவினர்களின் சுதந்திர தாகம் சிறுமி இந்திராவுக்கும் இயல்பாகவே ஒட்டிக்கொண்டது. ஆனந்த பவனத்துக்கு உள்ளேயே மூவர்ணக் கொடி ஏந்திய தியாகி போன்ற பொம்மைகளையும், ஆங்கிலேயே வீரர் போன்ற பொம்மைகளையும் நிற்க வைத்துப் போராடுவதாகக் கோஷம் எழுப்புவார். பின்னர், தியாகிகள் வெற்றி பெற்றதாக, அந்த நான்கு சுவர்களுக்குள்ளேயே வலம் வருவார். விளையாடும் வயதில்கூட இப்படிப்பட்ட வரலாற்று விளையாட்டுகளை விளையாடியவர் சிறுமி இந்திரா. தன்னைப்போன்ற சிறுவயதினருடன் இணைந்து இந்திரா, ஓர் அணியை உருவாக்கினார். அதற்கு கமலா நேரு, ‘வானர சேனை’ என்று பெயரிட்டார். இதைக் காதில் கேட்ட நேருவோ, ‘‘தன் மகள் பிறவியிலேயே தலைமைக்கான தகுதிகள் மிகப் பெற்றவள்’’ என்று பூரித்துப்போனார்.

‘‘நினைவு தெரிந்த நாளிலிருந்து ஏகப்பட்ட பள்ளிகளில் படித்ததால், அவற்றின் பெயர்களை என்னால் நினைவில்கூட வைத்துக்கொள்ள முடிந்ததில்லை’’ என்று இந்திரா ஒருமுறை சொன்னார். வீட்டில் நிலவிய சுதந்திரப் போராட்டச் சூழல், தாயின் உடல்நிலை இவற்றால் இந்திரா, பல ஊர்களில், பல பள்ளிகளில் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சாந்தி நிகேதனில் இந்திரா படித்தபோது, அவருடன் படித்த சக மாணவி ஒருவர் தனது தங்க நகையைக் காணவில்லை என்று விடுதிக் காப்பாளரிடம் புகார் சொன்னார். அவர், இந்திராவின் பெட்டியைத் தவிர, மற்ற மாணவிகளின் பெட்டிகளைச் சோதனையிட விரும்பினார். ஆனால், இந்திராவோ தன்னுடைய பெட்டியை முதலாவதாகத் திறந்து காட்டிச் சோதனைக்கு உட்படுத்தினார். இறுதியில், அந்த மாணவியின் நகைகள் குளியல் அறையில் இருப்பது தெரியவந்தது. இந்தச் செயல், இந்திராவின் நேர்மையான குணத்தைப் பிரதிபலித்தது.

தன் மகள் வெறும் ஏட்டுப் படிப்பை மட்டும் பெறுவதில் விருப்பமில்லாதவராக இருந்தார் நேரு. உலக வரலாற்றையும் இந்திரா தெரிந்துகொள்ள வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். அதன் விளைவாக சிறையில் இருந்தபடி அவர், தன் மகளுக்குக் கடிதங்கள் எழுதத் தொடங்கினார். அதில் உலகம்; இயற்கை; மனித வாழ்வு; ஒவ்வொரு நாட்டின் நாகரிகம், வரலாறு என ஒவ்வொன்றைப் பற்றியும் எழுதினார். அவைகள், இந்திராவுடைய தனிமையைத் தகர்த்தன; தந்தையை நேரில் காண்பதுபோன்ற உணர்வுகளை ஏற்படுத்தின.

‘தைரியம் மட்டும் உன்னோடு இருந்துவிட்டால்...’

‘‘பிறந்தநாளின்போது உனக்கு மற்றவர்களிடமிருந்து பரிசுகளும் வாழ்த்துகளும் கிடைப்பது வழக்கம். நிறைந்த வாழ்த்துகளைப் பெற்றிருக்கும் உனக்கு இந்த நைனி சிறையிலிருந்து நான் என்ன பரிசை அனுப்ப முடியும்? என்னுடைய பரிசுகள் யாவும் வெறும் மூலக்கூறுகள் மட்டும்தான்’’ என்று பயணிக்கும் அந்தக் கடிதத்தில் தொடர்ந்து, ‘‘பிறர் அறியாமல் ஒளிப்பதற்கும், செய்வதற்கும் நம்மிடம் ஏதுமில்லை. அதனால், பிரகாசமான சூரிய ஒளியில் செய்யப்படும் எந்தச் செயல் குறித்தும் நாம் பயப்படத் தேவையே இல்லை. இதைப்போலவே நம்முடைய சொந்த வாழ்விலும் சூரியனை நட்புகொண்டு அதன் ஒளியில் நாம் செய்யும் எந்தச் செயலிலும் ரகசியங்களோ அல்லது மற்ற வகையான மறைத்தல்களோ இருக்க வாய்ப்பே இல்லை. இவ்வாறு ஒளிவுமறைவின்றி நடந்து கொண்டால்தான் நீ ஒளியின் குழந்தையாக வளர முடியும். தைரியம் மட்டும் உன்னோடு இருந்துவிட்டால் போதும். மற்ற எல்லா நல்லவைகளும் அதைத் தொடர்ந்து உன்னிடம் வந்துவிடும்’’ என்று நேரு, தன் மகளுக்கு எழுதிய முதல் கடிதத்திலேயே இப்படியான தைரியத்தைப் பதிந்திருந்தார்.

இதுபோன்ற கடிதங்களின் உந்துதல்தான் இந்திராவை ஒரு துணிச்சல்மிக்கப் பெண்ணாக மாற்றியது. அதனால்தான், அவர் பின்னாளில் இப்படிச் சொன்னார்: ‘‘இளமைக் காலத்திலிருந்தே தைரிய உணர்வு என்னுள் ஒரு நெருப்பாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும். இது தேவைப்பட்ட காலத்தில் பெரிதாகப் பற்றி ஒளிவிடும்போதுதான் மற்றவர்களுக்குத் தெரியும்.’’

மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய மற்றொரு கடிதத்தில், ‘‘நீண்ட காலத்துக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதனை முழுவதுமாகப் புரிந்து கொள்வதற்கு, முதலில் நாம் செய்ய வேண்டியது இதுதான்.... அந்தக் காலகட்டத்தில் அவன் வாழ்ந்த சூழ்நிலை, அப்போதைய அவனுடைய மனநிலை இரண்டையும் முதலில் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று மனிதனின் தன்மையை உணர்த்தியிருந்தார்.

பெரோஸ் மீது காதல்!

தன் அன்னையின் உடல்நிலை காரணமாகச் சாந்தி நிகேதனிலிருந்து விடுபட்ட இந்திரா, அயல்நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கமலா நேருவுக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டாலும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத சூழல்; காலன், அவரை அழைத்துக்கொள்ளும் நிர்பந்தம்; யாரும் ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் இந்திராவின் நிலை. அந்த நேரத்தில்தான் அவருக்கு ஆறுதல் சொல்பவராய்... உதவி செய்பவராய் வந்தார் ஒரு நண்பர். அவர், நேரு குடும்பத்து பால்ய நண்பரான பெரோஸ். லண்டனில் தங்கிப் படித்து வந்தார். அழகு, நுண்ணறிவு, புத்திசாலித்தனம் என அனைத்தும் ஒருங்கே அமைந்திருந்த இந்திராவை, பெரோஸ் விரும்பினார். தன் அன்னையின் மீது காட்டிய அக்கறையும், கைமாறு கருதாத பிரியமும் இந்திராவுக்கு, பெரோஸிடமிருந்த அவரது நட்பை இன்னும் ஆழமாக்கியது. நாட்கள் நகர்ந்தன. கமலா நேருவை காலன் அழைத்துக் கொண்டான். இந்திராவின் மனதைத் துயரம் தொற்றியது. அன்னையின் மறைவும், தந்தை இல்லாத வெறுமையும் அவரை மிகவும் வாட்டியது. அந்த நேரத்தில் பெரோஸின் மீதிருந்த நட்பு காதலாக மாறியது.

தன் காதல் விஷயத்தைத் தந்தையிடம் தெரிவித்தார் இந்திரா. வாயடைத்துப் போனார் நேரு. தன் மகளின் காதலை அவரால் அங்கீகரிக்க முடியவில்லை. ஆனாலும் இந்திரா தன் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இறுதியில், இந்திரா - பெரோஸ் காதல் வென்றது. திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. அது, கலப்புத் திருமணம் என்பதால் கடிதங்கள் வாயிலாகவும், தந்திகள் மூலமாகவும் ஆதரவும், எதிர்ப்பும் சங்கமிக்கத் தொடங்கின. ஆயினும், அண்ணல் காந்தியடிகளின் முதல் ஆசியினால் திருமணம் இனிதே நடைபெற்றது. பெரோஸும், இந்திராவும் அற்புதமான மன ஒற்றுமை படைத்தவர்கள். அரண்மனை போன்ற ஆனந்த பவனத்தில் வலம் வந்த இந்திரா, பெரோஸை மணந்த பிறகு அவருடைய அழகான சின்னஞ்சிறு வீட்டிலும் சந்தோஷமாகவே வாழ்ந்தார். சுத்தத்தையும், ஒழுங்கையும் எப்போதும் கடைப்பிடிக்கும் இந்திராவுக்கு, ரோஜா மலர்களைக்கொண்டு வீட்டை அலங்கரிப்பது பொழுதுபோக்கு. இதனால் பெரோஸ், வீட்டைச் சுற்றி நிறைய ரோஜாச் செடிகளை வைத்து வளர்த்தார்.

துணிச்சல் மிகுந்த பெண்!

இந்தத் தம்பதிகளின் இல்வாழ்க்கை உதயமான காலகட்டத்தில், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கமும் வீறுகொண்டு எழுந்தது. தந்தை நேரு, சிறைக்குச் சென்றார்; கணவர் பெரோஸ் தலைமறைவானார். இந்திராவைப் பாதுகாத்த இந்த இரண்டு துருவங்களும் அருகே இல்லாததால் வேதனையில் துடித்தார். வீட்டைச் சுற்றி காவலர்கள். இருந்தாலும் வீறுகொண்டு எழுந்தார். அந்த நேரத்தில், லக்னோ நகர கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சிறப்பு விருந்தினராக இந்திராவை அழைத்திருந்தனர்.  அவர் செல்வதற்கு முன், மாணவன் ஒருவன் தன் தேசியக்கொடியை இரும்புத் தொப்பிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக அதைக் கீழே விழாதவாறு கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். ஆனால், ஆங்கிலேய சிப்பாயோ அதைக் கீழே போடச்சொல்லிப் பலமாகத் தாக்கினான். குருதி சிந்தக் கீழே சாய்ந்தான் அந்த மாணவன். கொடி கீழே விழும்முன் அம்புபோலப் பாய்ந்து அதைத் தூக்கிப்பிடித்து நிறுத்தினார் இந்திரா. காவல்துறையினர் மூர்க்கமாகத் தாக்கினர். இந்திராவுக்கும் முதுகில் அடி விழுந்தது. ஆனாலும் தூக்கிப் பிடித்த கொடியைப் பறக்க வைத்து விட்டே வீட்டுக்குச் சென்றார். அப்படிப்பட்ட துணிச்சல் மிகுந்த பெண்ணாக அன்றே விளங்கினார் இந்திரா. அதற்குப் பிறகு இன்னும் அதிகமாக விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆரம்பித்தார்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, நேரு பிரதமரானார். அங்கேயே பெரோஸும், இந்திராவும் தனது குழந்தைகளுடன் தங்கினர். இருவரும், தத்தம் வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்த வேளையில்தான் பெரோஸின் மரணம் மாரடைப்பு மூலம் வந்தது. உண்மைக் காதலை உணராதவன் காலன். அதனால்தான் இன்றும் நிறைய நிஜக் காதலர்களுடைய உயிர்களில் ஒன்றைப் பறித்துச் சென்று விடுகிறான். இளம் விதவையான இந்திராவின் நிலையைக் கண்டு இந்தியாவே கண்ணீர் விட்டது. மனதின் வெறுமை அவரை வாட்டியது. அன்பான தந்தையினாலும், அழகான பிள்ளைகளின் பாசத்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டார். இதுவரை சாதாரணமாக கடந்த இந்திராவின் வாழ்க்கை 1960-க்குப் பிறகு, சரித்திரம் மிக்க வாழ்க்கையாக மாறியது. ஆம், அரசியல் என்னும் அத்தியாயத்துக்குள் அதிதீவிரமாகக் காலடி எடுத்து வைத்தார் இந்திரா. தந்தைக்கு உதவியாக இருந்து செயல்பட்டார். அதுகூடக் கொஞ்சகாலம்தான். அடுத்து, உறங்கப்போன அவரது தந்தை ஒரேயடியாக உறங்கி விட்டார். துக்கம் திரும்பத் திரும்ப இந்திராவைத் தொற்றிக்கொண்டும், துரத்திக்கொண்டும் இருந்தது. என்றாலும் இந்திரா மீண்டும் அதிலிருந்து விடுபட்டு வந்தார்.

இளம்வயது முதல் பெண் பிரதமர்!

நேருவுக்கு அடுத்தபடியாக, சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமராக லால்பகதூர்  சாஸ்திரி பொறுப்பேற்றார். அவருடைய அமைச்சரவையில் இந்திராவுக்கு ஒலிபரப்புத் துறை ஒதுக்கப்பட்டது. இந்தத் துறையில் இருந்தபோதுதான் அகில இந்திய வானொலியைச் சிறப்பான முறையில் செம்மையாக்கி சாதனை படைத்தார்.  தொலைக்காட்சியைக் கொண்டுவந்தார். எப்போதும் மக்கள் தொடர்பு, இந்திராவின் தாரக மந்திரமாகவும், சிறப்பம்சமாகவும் இருந்தது. இதன் பயன்தான் அவரை, இளம் வயதிலேயே இந்தியாவின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்க வைத்தது. இந்தியாவின் பிரதமராக அவர் பதவியேற்றபோது, ‘‘ஒரு பெண்மணியினால் இந்தியாவை ஆள முடியுமா?’’ என ஒரு பத்திரிகையாளர் கேட்டார்.  அதற்கு இந்திரா, ‘‘I am no woman but human’’ என்று பதிலளித்தார்.

இந்திரா, பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக எத்தனையோ சாதனைகளை செய்தார்.  தன் மனதுக்குச் சரியென பட்டதைத் தானே முடிவெடுத்து நிறைவேற்றும் இந்திராவை, ‘இந்தியாவின் துணிச்சல் மிக்கப் பெண்மணி’ என்று மக்கள் போற்றினர். இந்திராவின் வெற்றிப் பாதையில் நெருக்கடி நிலை, நெருடலைத் தந்தது. இதனால் 1977-ல் நடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலில் ஆட்சியமைத்த ஜனதா அரசால், நாட்டை சரியான பாதையில் அழைத்துச் செல்ல முடியாமல் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் இந்திரா பிரதமரானார். சொந்த மகனைக்கூட விமான விபத்தில் இழந்து நின்ற அவர், தொடர்ந்து வந்த பல சோதனைகளைச் சாதனைகளாக்கிய வியத்தகு பெண்மணியாகத் திகழ்ந்தார்.

‘‘அரசியலில் உங்களுக்கு எப்போதாவது அலுப்புத் தோன்றி இருக்கிறதா?’’ என்று அன்னை இந்திரா காந்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘நான் அரசியலின் அடிப்படை அம்சத்தைத்தான் நோக்குகிறேன். அதை ஒரு தொழிலாகவோ, போட்டிக்குரிய விஷயமாகவோ  பார்ப்பதில்லை’’ எனப் பதிலளித்தார்.

1984-ம் ஆண்டு ஜூன் மாதம் சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாரா எனப்படும் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் ராணுவத்தினரை அனுப்பி வன்முறையை அடக்கினார். இது அவருடைய அரசியல் வாழ்வில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட இந்திராவைப் பற்றி ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அது, இப்படிச் சொல்கிறது. ‘‘The most honest, competent impressive and respected world leader with great charm and tolerance.’’

இந்தியாவின் விடுதலையிலும், ஆட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்டு வாழ்ந்த அன்னை இந்திரா காந்தி, 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி தன்னுடைய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

‘‘கல்வி கற்பதும், கற்பிப்பதும் மிகவும் முக்கியம். அதே நேரத்தில் சிறந்த மனிதனை உருவாக்குவதாக அவை அமைய வேண்டும்’’ - இந்திரா காந்தி.

- ஜெ.பிரகாஷ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close