Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தந்தையை இழந்த சிறுமிக்கு தாயாக மாறிய போலீஸார்! (வீடியோ இணைப்பு)

''நாம் அவரைப் பார்க்க முடியாது என்பதற்காக அவரால் நம்மைப் பார்க்க முடியாது என்று அர்த்தம் அல்ல. அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார்''  இது பணியில் இருந்தபோது இறந்த போலீஸ் அதிகாரிக்கு நடந்த கவுரவ ‛வழியனுப்பு’  விழாவில், அவரது எட்டு வயது மகள் பேசியது. 

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ் நகரத்தில், 35 ஆண்டுகளாக போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் ஜோஸ் கில் வேகா. டிசம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுவதாக இருந்த அவரை, நிரந்தரமாக ஓய்வு பெற வைத்து விட்டது ஒரு உள்ளூர் கலவரம். 

கடந்த அக்டோபர்  8-ம் தேதி அந்த பகுதியில் கலவரம் வெடித்ததை அடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஜோஸ் கில் வேகா சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன், நான்கு மாதங்களுக்கு முன் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, பேறுகால விடுப்பு முடிவதற்குள் பணிக்குத் திரும்பிய, பெண் போலீஸ் அதிகாரியான லெஸ்லி ஜெர்பினியும் சுட்டு வீழ்த்தப்பட்டார். அதுவும் அவர் கணவர் கண் முன். 

‛‛குண்டடி பட்டு கண்கள் திறந்த நிலையில், போலீஸ் சீருடையில் தரையில் லெஸ்லி வீழ்ந்து கிடக்க, அந்த கோலத்திலும் அவரது கணவர் கடைசியாக  லெஸ்லியின் நெற்றியில் முத்தமிட்டதைப் பார்க்கும்போது மனசு என்னவோ போல் இருந்தது’’ என சக அதிகாரி ரீயெஸ் சொல்லும்போது, அதுவரை அவர் கண்ணில் திரைகட்டி நின்ற நீர் உருண்டு விழுந்தது. இதற்குத்தான் இந்தப் பெண் அவசர அவசரமாக பணிக்குத் திரும்பினாரா என தலையில் அடித்து, கண்ணீர் வடித்தது கலிஃபோர்னியா மாகாணம்.

இதற்கு முன் 1962ல், பணியில் இருந்தபோது போலீஸ் அதிகாரிகள் மரணமடைந்துள்ளனர். அதன்பின் கிட்டத்த அரை நூற்றாண்டுக்குப் பின் ‛ஆன் டூட்டி’யில் இரு போலீஸ் அதிகாரிகள் இறப்பது இதுவே முதல் முறை. இந்த சம்பவம் பாம் ஸ்பிரிங்ஸ் நகரையே உலுக்கி உள்ளது. இரங்கல் கூட்டங்கள், அஞ்சலி என ஒரு வாரம் நகரமே அழுது தீர்த்தது. துக்கம் விசாரித்தவர்கள் அனைவரும் ‛நாங்கள் இருக்கிறோம்’ என தேற்றினர்.

அதோடு, துக்கம் விசாரிப்பது என்பது இறந்தவருக்கு மரியாதை செய்வதோடு முடிந்து விடுவதல்ல, உயிரோடு இருப்பவருக்கு ஆறுதல் சொல்வது வரை நீடிக்கிறது என உணர்த்தியுள்ளனர் பாம் ஸ்பிரிங்ஸ் போலீஸ் அதிகாரிகள். கலவரத்தில் இறந்த ஜோஸ் கில் வேகாவுக்கு எட்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் வனெஸா. 


இரண்டு வார துக்கத்துக்குப் பின் வனெஸா மீண்டும் பள்ளிக்குத் திரும்பியபோது, அப்பா இல்லாத குறையை நிவர்த்தி செய்திருந்தனர் பாம் ஸ்பிரிங்ஸ் போலீஸார். இரண்டு நாட்களுக்கு முன் காலையில், வனெஸா பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வெளியே 15 போலீஸார் அவள் வருகைக்காக காத்திருந்தனர். வனெஸா வீட்டை விட்டு வெளியே வந்ததும் ‛குட்மார்னிங் வனெஸா, எப்படி இருக்கிறாய்’ என ஒரு போலீஸ் அதிகாரி அவளைக் கட்டி அணைத்து வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து வரிசையாக நின்றிருந்த போலீஸாரும் வனெஸாவை வரவேற்றனர். ‛நாங்கள் எல்லோரும் சேர்ந்து உன்னை பள்ளிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம்’ என அந்த அதிகாரி சொன்னதும், அந்த சிறுமியின் முகத்தில் புன்னகை. ஒவ்வொரு அதிகாரியும் அவளைக் கட்டி அணைத்ததோடு, பள்ளி வரை அவளுடன் கூடவே நடந்து சென்றனர். வகுப்பறைக்குச் செல்லும் முன்பும்  ஒவ்வொருவரும் ‛ஹக்’ செய்தனர். இதை சற்றும் எதிர்பார்த்திராத அவள், நிம்மதியுடன் விடைபெற்றாள். 

‛இது அவளுக்கு நெருக்கடியான நேரம். இந்த நேரத்தில் அவளை எங்களால் தனித்து விட முடியாது. இப்போது அவளுக்கு ஒரு புதிய குடும்பம் உள்ளது. எங்களால் முடிந்தவரை அந்த சிறுமியின் வாழ்வில் ஒரு புன்னகையை, மகிழ்ச்சியை கொண்டு வர முயற்சிப்போம்’’ என்றார் பாம் ஸ்பிரிங்ஸ் உயர் அதிகாரி வில்லியம் ஹட்சின்சன். சபாஷ் போட வைக்கிற அதிகாரிகள் அங்கேயும் உண்டுதானே!

பிடித்தவர்கள் இல்லையென்றாலும் நம் வாழ்க்கையை நாம் வாழ்ந்தே ஆக வேண்டும் என்பது எட்டு வயதிலேயே வனெஸாவுக்கு புரிந்திருக்கிறது. புரிய வைத்திருக்கின்றனர் அவர் தந்தையுடன் பணியாற்றியவர்கள். 

 

‛‛பேஸ்பால், கராத்தே, ஓட்டம் என எல்லாவற்றையும் என் தந்தையிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். என் தந்தையுடன் ஓடும்போதுதான் வேகமாக ஓட கற்றுக் கொண்டேன். நான் வேகமாக ஓட வேண்டும் என்பதற்காக அவர் மெதுவாக ஓடுவார். என் தந்தை நல்ல போலீஸ் அதிகாரியாக, நல்ல கணவனாக, நல்ல தந்தையாக இருந்தார். அவர் தன் வாழ்க்கையை அனுபவித்தார். தனக்குக் கிடைத்தவற்றில் திருப்தி அடைந்திருந்தார்.  நாம் அவரைப் பார்க்க முடியாது என்பதற்காக அவரால் நம்மைப் பார்க்க முடியாது என்று அர்த்தம் அல்ல. அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார்’’ என்றார் வனெஸா. 


- தா.ரமேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close