Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘யார் தமிழர் ...?’ கா.சு. பிள்ளை வகுத்த வரையறை... ! பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு #VikatanExclusive

‘‘பல்வேறு வகையாகப் பிரிந்து நிற்கும் தமிழர் யாவரையும் ஒற்றுமைப்படுத்தற்குரிய சிறந்த கருவி தமிழ்மொழிப் பற்று ஒன்றேயாகும்” என்றவர் கா.சு.பிள்ளை. அவரது பிறந்த தினம் இன்று.

பொதிகை மலை; பொருநை நதி; பொன்னான நெல் விளையும் புண்ணிய பூமி போன்றவற்றை ஒருங்கே கொண்ட திருநெல்வேலியில் காந்திமதிநாதப் பிள்ளை - மீனாட்சியம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் கா.சுப்பிரமணியப் பிள்ளை. இவருடைய, தந்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக பி.ஏ. பட்டம் பெற்று, ‘பி.ஏ. பிள்ளை’ என்று அழைக்கப்பட்டவர். அவருடைய வாரிசாக உருவான கா.சு.பிள்ளை, தன்னுடைய ஆரம்பக் கல்வியை நெல்லையில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றார்.

இவர் படித்த காலத்தில், தங்கிய இடத்தில் மணியடித்துச் சிவ பூஜை செய்துவந்ததால், இவருக்குப் பூஜைப் பிள்ளை என்ற பெயரும் உண்டு. 1902-ம் ஆண்டு அரசின் நடுத்தரத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றதால், மற்ற வகுப்புகளுக்கான கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டது. மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்விலும் சென்னைப் பல்கலைக்கழகத் தேர்விலும் மாநில அளவில் இவர் முதலிடம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்றபோதுதான், ‘பவல்மூர்கெட்’ என்ற ஆங்கிலப் பெரியார் அமைத்த தமிழாராய்ச்சி நிறுவனப் பரிசைப் பெற்றார்.

 

‘‘சுப்பிரமணியனுக்குப் பாடப்புத்தகமே தேவையில்லை!’’

மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த உ.வே.சா., ‘‘சுப்பிரமணியனுக்குப் பாடப்புத்தகமே தேவையில்லை’’ என்று ஏனைய மாணவர்களிடம் தன் மாணவன் கா.சு.பிள்ளையைப் பற்றிப் புகழ்ந்துரைப்பாராம். காரணம், கா.சு.பிள்ளை 1,000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைக் கூட சில மணி நேரங்களில் படித்து முடித்து விடுவாராம். எதையும் ஒரு தடவை படித்து விட்டால், அதை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்வாராம். அதனால்தான் அவர், Photographic Mind என்று அழைக்கப்பட்டார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எம்.ஏ. பட்டம் பெற்றதுடன், ‘கலைப் பேரறிஞர்’ என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றார். பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்தார். ‘எம்.எல்’ பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் கா.சு.பிள்ளை என்பதால், தன் தந்தையைப்போலவே இவரும், ‘எம்.எல். பிள்ளை’ என்று பலராலும் அழைக்கப்பட்டார்.

1920-ம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகம் நடத்திய அகில இந்திய அளவிலான கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, ‘குற்றவியலின் நெறிமுறைகள்’ என்ற கட்டுரையை அளித்தார். அவரது கட்டுரைக்கு ரூ.16,000 பரிசு கிடைத்தது. அத்துடன், ‘தாகூர் சட்ட விரிவுரையாளர்’ என்ற விருதும் கிடைத்தது. சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பிற்காலத்தில் உயர் நீதிமன்றத்தில் பெரும் பதவி பெற வாய்ப்பு இருந்தும் அதை ஏற்க மறுத்தார் கா.சு.பிள்ளை. அதற்குக் காரணம், அவர் சார்ந்திருந்த நீதிக்கட்சி மீதான பித்து என்று அவர் மீது நன்மதிப்பு வைத்த அறிஞர்கள் பலரும் அங்கலாய்த்தனர். இதனால் கா.சு.பிள்ளை தன்னுடைய வாழ்வில் வளர்ச்சி அடையாமல் போனாலும் தமிழ்மொழி மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசியராகப் பணியாற்றிய கா.சு.பிள்ளை, தமிழ் மீது பற்று கொண்டிருந்த பல மாணவர்களின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவர்களைத் தமிழ்ச் சான்றோர்களாக்கினார்.

தமிழர் என்பவர் எவர்?

1937-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டு கா.சு.பிள்ளை ஆற்றிய உரை, தமிழக அரசியலில் நிலையான மொழிக் கொள்கையை வகுத்திடக் காரணமாக இருந்தது. நெல்லையைச் சேர்ந்த நாயகம் பிள்ளையின் மகள் பிரமு அம்மாளை திருமணம் செய்து கொண்டார். ‘செந்தமிழ்ச்செல்வி’ என்ற இதழில் பல கட்டுரைகளை எழுதினார். ‘மணிமாலை’ என்னும் மாத இதழை வெளியிட்டார். அதில், தமிழ், சமயம், அறிவியல், மருத்துவம், கலை போன்ற ஒன்பது வகைகளில் இவரே பல கட்டுரைகளை எழுதினார். தமிழ், இலக்கியம், வரலாறு, சமயம் முதலியவற்றை வெளிப்படுத்தும் வண்ணம் கா.சு.பிள்ளையின் எழுத்துக்கள் இருந்தன. தமிழர் என்பவர் எவர் என்பதற்கு, “தமிழைத் தாய்மொழியாக உடையவர்; தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழைத் தாய்மொழி எனக் கருதாதவர் தமிழர் ஆகார். தமிழ்நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழி போல் போற்றுபவரைத் தமிழர் என்பது இழுக்காகாது. தமிழ் நாகரிகத்தை உயர்ந்தது எனக் கருதுபவரும் தமிழர்” என வரைமுறை செய்துள்ளார் கா.சு.பிள்ளை.

கா.சு.பிள்ளையின் நூல்கள்!

‘அறிவு விளக்க வாசகம்’, ‘திருஞானசம்பந்தர் தேவார இயற்கைப் பொருளழகு’, ‘இறையனார் அகப்பொருள்’, ‘பழந்தமிழர் நாகரிகம்’, ‘மொழிநூல் கொள்கையும் தமிழ் மொழியமைப்பும்’ போன்ற நூல்கள் இவருடைய ஆராய்ச்சித் திறன் மிக்கவை. ஒவ்வொரு தமிழனும் மகிழத்தக்க வகையில், ‘உலக நன்மையே ஒருவன் வாழ்வு’ என்கிற ஒரு சிறிய நூலை எழுதினார்.

சமுதாய நலன் சார்ந்த ‘தமிழர் சமயம்’!

‘தமிழர் சமயம்’ என்ற நூலில் இடம்பெற்றுள்ள கருத்துகள் புரட்சியும் தெளிவும் பெற்று விளங்குகிறது. அதில், “தமிழர் சமயம் நிலைபெற வேண்டுமாயின் தமிழ்மொழி பேணப்பட வேண்டும்; தமிழ்மொழி நன்கு பேணப்படுவதற்கு அதனைத் தாய்மொழியாக உடைய தமிழர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். தமிழர்களின் பொருளாதார நிலை சிறப்படைய வேண்டும். அது சிறப்பதற்குத் தமிழ் அருட்செல்வர்களாய் இருப்பவர்களும், சொல்லாற்றல் உடையவர்களும் சமுதாயத்தில் உள்ள ஏழை மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் வருந்தாதபடி, அவரவர்க்கு உரிய தொழிலும் உணவும் அளித்தற்கேற்ப வாயில்களை வகுக்க வேண்டும்” என சமுதாய நலன் சார்ந்த கருத்தை எடுத்தியம்பியுள்ளார். சென்னை மாகாண தமிழ்ச் சங்கத் தலைவராக கா.சு.பிள்ளை இருந்தபோதுதான் தனித்தமிழ் வித்வான் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தாய்மொழிக்கு முக்கியத்துவம்!

“காலப்போக்கில் தமிழைப் புதிய கலைக்கண் கொண்டு ஆராயவில்லை என்றால், உலகில் தமிழனுக்கு இடமே இல்லாமல் போய்விடும். இந்தப் புதிய முறையில் ஆராய்ந்தால்தான், நமது பழைய இலக்கண ஆசிரியர்களுடைய பெருமையும், அறிவின் நுட்பமும் புலப்படும்” என்னும் மொழியியல் சிந்தனையுடன் விளங்கிய கா.சு.பிள்ளை, “தமிழ், புதிய படைப்புச் சிந்தனைகளுக்கு வடிகாலாய் அமைய வல்ல சொல்லமைப்பும் சொல்லாக்க வளமும் உடையது” என்பதை தமது ஆய்வின் மூலம் உணர்த்தினார். 

திருநெல்வேலியில் சைவ சித்தாந்த சங்கம் ஒன்றை நிறுவி அதன் தலைவராக இருந்தார். இவருடைய நாற்பெருங்குரவர்களின் வரலாற்று ஆராய்ச்சி நூல்கள் இந்தச் சங்கம் மூலம் வெளிவந்தன. நெல்லையப்பர் கோயிலில் தர்மகர்த்தாவாக இருந்து இறைப் பணிகள் செய்தார். ‘சைவ சித்தாந்தத்தின் இயற்கைத் தத்துவம்’, ‘இந்து சமயங்களின் சுருக்க வரலாறு’ போன்ற நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார்.

கலப்புத் திருமணம்; கைம்பெண் மறுமணம்; ஆண்களைப்போலவே பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை; தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஒன்றே கட்டாயப் பயிற்றுமொழி; தமிழிலேயே கடவுள் வழிபாடு; தமிழிலேயே சமயச் சடங்குகள் போன்றவற்றை வலியுறுத்தினார். கோயில்களிலும் மடங்களிலும் முடங்கிக் கிடக்கும் பொருட்களை ஏழைகளின் கல்வி நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ‘பல்கலைப் புலவர்’, ‘பைந்தமிழ்க் காசு’ எனப் புகழ்ப்பெற்ற கா.சு.பிள்ளை, தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தொண்டாற்றினார். தமிழின் கருவூலமாகவும், சைவத்தின் திருவுருவமாகவும் விளங்கிய கா.சு.பிள்ளை 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி மறைந்தார்.

கா.சு.பிள்ளையின் தமிழ்த் தொண்டு தமிழ் மொழி உள்ளவரை என்றும் மறையாது!

- ஜெ.பிரகாஷ் | ஓவியம் : பிரேம் டாவின்சி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close