Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தந்தைக்கே சுற்றுச்சூழல் பாடம் கற்றுக்கொடுத்த 16 வயது பெண்! #BraveGirl

ரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி, சோனாலி ஷேகண்ட்(Sonali Sheokand). அவருக்கு ஹரியானா மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 11,000 ரூபாய் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது. ஆனால், சோனாலிக்கு இந்தப் பரிசுத்தொகை கிடைத்ததற்கு அவர் பெற்றோரும், ஊர் மக்களும் பாராட்டாமல், அவர் மீது கோபப்பட்டார்கள்.

என்ன காரணம் தெரியுமா?!

பயிர் அறுவடை முடிந்ததும், எச்சமாகும் வைக்கோலை தீவைத்து எரிப்பது சோனாலி அப்பாவின் வழக்கம். வருடா வருடம் செய்வதுபோலத்தான் இந்த வருடமும் அறுவடை முடிந்த பிறகு, தேவையில்லாத வைக்கோலை எரித்தார் அவர். இதைக் கண்ட அவர் மகள் சோனாலி, 'இப்படி வைக்கோலை எரிப்பதால் உண்டாகும் புகையால் காற்று மாசுப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாசு காரணமாக சுத்தமான காற்று கிடைக்காது என்பதால், வைக்கோலை எரிக்காதீர்கள் அப்பா' என்று தன் தந்தையிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், தன் மகள் சொல்வதை காதுகொடுத்துக் கேட்காமல், தன் வேலையைச் செய்தபடி இருந்தார் அவர்.

இனி அப்பாவிடம் பேசி பிரயோஜனமில்லை என்று புரிந்துகொண்ட சோனாலி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் நேரடியாக தன் அப்பா மீதே புகார் அளித்தார். அதற்கு நடவடிக்கை எடுத்த அவ்வாரியம், சோனாலியின் அப்பாவுக்கு 2,500 ரூபாய் அபராதம் விதித்தது. இதனால் சோனாலியில் வீட்டினர் அதிர்ந்துபோய், அவளைத் திட்டித் தீர்த்தனர். சோனாலியின் அப்பா, அவரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். குடும்பம் மட்டுமல்லாது, கிராமத்தினர் அனைவரும் சோனாலியை வசைபாடினர்.

'அய்யோ... அப்பாவின் மீது புகார் தெரிவித்து தப்பு செய்துவிட்டோமா?!' என்று வருந்தினார் சோனாலி. ஆனால், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சோனாலியின் தைரியத்தையும் பொறுப்பு உணர்ச்சியையும் பாராட்டி, சோனாலி வீட்டினரிடமும் கிராம மக்களிடம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை பற்றி எடுத்துரைத்து, 'நீங்கள் அனைவரும் முன் உதாரணமாகக் கொள்ள வேண்டிய சமுதாய அக்கறை மிக்க பெண் சோனாலி' என்று சொன்னதுடன், சோனாலிக்கு 11,000 ரூபாய் பரிசு வழங்குவதாகவும் அறிவித்தது.

தங்கள் தவறையும், சோனாலியின் புத்திசாலித்தனத்தையும் உணர்ந்த அவர் வீட்டினரும் கிராம மக்களும், இப்போது சோனாலியைப் பாராட்டத் தொடங்கிவிட்டனர். சோனாலியின் அப்பா தன் மகளை மெச்சியதுடன், 'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்கும் செயல்களை இனி செய்யமாட்டேன்' என்று உறுதியேற்றார். கிராம மக்களும் அதை முன்மொழிந்தனர்.

வைக்கோலை தீவைத்து எரிக்கும் பழக்கம் குறித்துச் சொல்கிறார், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மக்கள் தொடர்பாளர் டாக்டர் எம்.ஜெகதீசன்.

''தமிழ்நாட்டைப் பொருத்தவரை அறுவடைக்குப் பிறகு வைக்கோலை எரிப்பதில்லை. அதனை ஆடு, மாடுகளுக்கு தீவனமாகப் பயன்படுத்துகின்றனர். அறுவடைக்குப் பிறகு நிலத்தில் மீதமுள்ள கதிரையும் தீவைத்து எரிக்காமல் கால்நடைகளை மேயவிடுவார்கள் அல்லது அதை அடுப்புக்குத் தீமூட்டப் பயன்படுத்திக்கொள்வார்கள். தமிழகத்தில் கரும்பு அறுவடையில் மட்டும் அறுவடைக்குப் பிறகு எஞ்சும் தட்டைகளை தீவைத்து எரிப்பது வழக்கம். ஆனால் தற்போது அந்தப் பழக்கமும் கைவிடப்பட்டுள்ளது. கரும்பு அறுவடைக்குப் பிறகு நிலத்தில் மீதமிருக்கும்  தட்டைகள், இலைகளைக் கொண்டு மக்கிய உரம், இயற்கை உரம் ஆகியவற்றைச் செய்ய உர தொழிற்சாலைகள் அள்ளிச் செல்வதால், அதற்கும் இப்போது நல்ல டிமேண்டு ஏற்பட்டுள்ளது.

அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கால்நடைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. அதனால் அங்கு வைக்கோலுக்கு பயன்பாடில்லாமல் போய்விட்டதால், தீவைத்து எரிக்கப்படுகிறது. ஆனால் அதனால் காற்று மாசுபடும் என்பதால், அவர்கள் அதை மக்கவைத்து உரமாகப் பயண்படுத்தலாம்."


- என்.மல்லிகார்ஜுனா
படம்: ஜி.பிரபு

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ