Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதில் ரிசர்வ் வங்கி, மத்திய அரசின் பங்கு என்ன?

ரிசர்வ்

ஒரு சாதாரண மனிதனுக்குப் பணம் என்பது பணத்தாளும், நாணயங்களும்தான். ஏனெனில் இந்தியாவில் தொகை செலுத்தும் முறை, குறிப்பாக சில்லறைப் பரிமாற்றங்கள் இன்னமும் பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியவற்றைச் சுற்றியே சுழல்கிறது. எப்படி இருப்பினும் ஒரு சாதாரண மனிதன், தான் நாள்தோறும் கையாளும் பணத்தாள், நாணயம் ஆகியன பற்றி மிகச் சிறிதே அறிந்துள்ளான்.

இந்திய நாணயம் மற்றும் பண  நிர்வாகம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் வினாக்களுக்குப் பதிலளிக்கும் முயற்சி இது. பண நிர்வாகம் பற்றி சில அடிப்படை விஷயங்கள் உங்களுக்காக...

பண நிர்வாகத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன?

ரிசர்வ் வங்கி இந்தியாவில் பண நிர்வாகம் செய்கிறது. அரசு ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின் பேரில் பல்வேறு இலக்க மதிப்புகளை முடிவு செய்கிறது. ரிசர்வ் வங்கி, வங்கி நோட்டுகளை வடிவமைப்பதில் (பாதுகாப்புத் தன்மைகள் உட்பட) அரசுடன் சேர்ந்து பணிசெய்கிறது. இலக்க மதிப்பு வாரியாக தேவைப்படும் பணத்தாள்களின் அளவினை ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு இந்திய அரசின் மூலம் பல்வேறு அச்சகங்களுக்கு தனது தேவைப்பட்டியலை அளிக்கிறது. அச்சகங்களிலிருந்து பெறப்படும் பணத்தாள்கள் வெளியிடப்படுவதுடன் இருப்பும் வைத்திருக்கப்படுகிறது. வங்கிகளிலிருந்தும் பணவறையிலிருந்தும் பெறப்படும் பணத்தாள்கள் பரிசோதிக்கப்படுகின்றன. புழக்கத்துக்குத் தகுதியானவை திரும்பவும் வழங்கப்படுகின்றன. புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளின் தரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு மற்றவை (அழுக்கடைந்தவையும், சேதமடைந்தவையும்) அழிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி பண நிர்வாகப் பணியைப் பெறுகிறது.

பண நிர்வாகத்தில் இந்திய அரசின் பங்கு  என்ன?

 நாணயச் சட்டம் 1906 இன்படி காலத்துக்குக் காலம் அதில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களின் அடிப்படையில் நாணய உருவாக்கம் இந்திய அரசின் பொறுப்பில் உள்ளது. நாணய வடிவமைப்பினையும் பல்வேறு இலக்க மதிப்புகளில் நாணயங்களை அடித்தலையும் இந்திய அரசு மேற்கொள்கிறது.

எவ்வளவு வங்கி நோட்டுகள், அச்சிடப்பட வேண்டும், மற்றும் எவ்வளவு மதிப்பிற்கு என்பதை முடிவு செய்பவர் யார்? எந்த அடிப்படையில்?  

இந்திய ரிசர்வ் வங்கி, எவ்வளவு மொத்த வங்கி நோட்டுகள் மற்றும் எவ்வளவு மதிப்புக்கு என்பதை முடிவு செய்கிறது. எவ்வளவு அச்சிடப்பட வேண்டும் என்பது பெரும்பாலும் புழக்கத்துக்குத் தேவையான வங்கித்தாள்களுக்காக குறிப்பிடப்படும் வருடாந்திர அதிகரிப்பு, அழுக்கடைந்த நோட்டுகளை அகற்றுதல், இருப்புத் தேவைகள் ஆகியவற்றைப்  பொருத்து முடிவு செய்யப்படுகிறது.

எவ்வளவு நாணயங்கள் அடிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்பவர் யார்?

 இந்திய அரசு எவ்வளவு நாணயங்கள் அடிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.

வங்கி நோட்டுகளின் தேவையை ரிசர்வ் வங்கி எவ்வாறு முடிவு செய்கிறது?

 பொருளாதார வளர்ச்சி விகிதம், மாற்றீடு செய்யும் தேவை, இருப்புத் தேவைகள் ஆகியவற்றைப் புள்ளியியல் முறைகளில் கணக்கிட்டு மதிப்பீடு செய்கிறது.

ரிசர்வ் வங்கி நாணயம் / பணத்தாள்களை எவ்வாறு மக்களிடம் சென்றடையச் செய்கிறது?  

ரிசர்வ் வங்கி அகமதாபாத், பெங்களூர், போபால், புவனேசுவர், பேலாபூர் (நவிமும்பை), கோல்கத்தா, சண்டிகார், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, மும்பை (கோட்டை), நாக்பூர், புதுடில்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தனது அலுவலகங்களின் மூலம் பணச் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இந்த அலுவலகங்கள் பணத்தாள்களை அச்சிடும் அச்சகங்களிலிருந்து புதுத்தாள்களை நேரடியாகப் பெறுகின்றன. அதைப்போன்றே கோல்கத்தா, ஹைதராபாத், மும்பை, புதுடில்லி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் நாணயக் கூடங்களிலிருந்து நாணயங்களைப் பெறுகின்றன. இந்த அலுவலகங்கள் அவற்றை மற்ற ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்புகின்றன. பணத்தாள்களும் ரூபாய் நாணயங்களும் பணவறையிலும், சிறு நாணயங்கள் சிறு நாணயக்கூடத்திலும் இருப்பு வைக்கப்படுகின்றன. வங்கியின் கிளைகள் பணவறையிலிருந்தும், சிறுநாணயக்கூடத்தில்  இருந்தும் பணத்தாள்களையும் நாணயங்களையும் பெற்று பொதுமக்களுக்கு வழங்குகின்றன.

நன்றி: ஆர்பிஐ இணையதளம்

தொகுப்பு: சோ.கார்த்திகேயன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ