Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு

சாண்டில்யன்

ரலாற்று நாவல்களின் தன்மையை வடிவமைத்த எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பிறந்த நாள் இன்று. 

நாகப்பட்டினம் மாவட்டம்,  திருஇந்தளூரில் 1910 -ஆம் ஆண்டு நவம்பர் 10 -ஆம் தேதி பிறந்தார் சாண்டில்யன். அவரது இயற்பெயர் பாஷ்யம்.  பெற்றோர் பெயர் , சடகோபன் அய்யங்கார், பூங்கோதைவல்லி. 

திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த  சாண்டில்யனுக்கு 1929 -ல் திருமணம் நடந்தது. மனைவி பெயர்  ரங்கநாயகி.  சில வருடங்களில் குடும்பத்தோடு சென்னைக்கு வந்து தி.நகரில் குடியேறினார். சென்னையில் கல்கி, வெ.சாமிநாத சர்மா போன்ற ஆளுமைகளின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு சாண்டில்யனின் வாழ்க்கையை மாற்றியது.  அவ்வப்போது சிறு சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த சாண்டில்யனை 'திராவிடன்' பத்திரிக்கையில் பணியாற்றிய  நண்பர் சுப்பிரமணியன்  சிறுகதை எழுதத் தூண்டினார்.  சாண்டில்யன் எழுதிய முதல் சிறுகதை 'சாந்தசீலன்'. அந்தச் சிறுகதையைப் படித்த பலரும் பாராட்டினார்கள். கதையைப் படித்த எழுத்தாளர் கல்கி  எழுத்து நடையும்., சிறுகதையின் யுத்தியும் வித்தியாசமாக இருந்ததால்   ஆனந்த விகடனில்  சிறுகதைகள் எழுதும் வாய்ப்பை அளித்தார். 'கண்ணம்மாவின் காதலி' , 'அதிர்ஷ்டம்' போன்ற சிறுகதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்தன. எழுத்தார்வம் அதீதமாக, அது சார்ந்த துறையிலேயே பயணிக்க விரும்பிய சாண்டில்யன்,  சுதேசமித்திரன் இதழில் சேர்ந்தார் .  1935 முதல்  1945 வரை  நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்தார். சென்னை உயர்நீதிமன்ற செய்திகளை எழுதும் பணி சாண்டில்யனுக்கு கொடுக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியைப் பேட்டி எடுத்தப் பெருமையும் சாண்டில்யனுக்கு உண்டு. 

சாண்டில்யன்

ழுத்துத் துறையில் இமயம் தொட்ட சாண்டில்யன்,  அதன் தொடர்ச்சியாக திரைப்படத் துறையிலும் கால்பதித்தார். 'அம்மா' 'தியாகய்யா' 'என் வீடு' போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதைகள் எழுதினார். சினிமா சார்ந்த தனது அனுபவங்களை 'சினிமா வளர்ந்த கதை' என்ற பெயரில் எழுதவும் செய்தார்.  தொடக்கத்தில் சமூகக் கதைகளையும், தேசிய உணர்வு, விடுதலைப் போராட்டம் சார்ந்த கதைகளையும் எழுதிய சாண்டில்யன் காலப்போக்கில் சரித்திர நாவல்களின் பக்கம் நகர்ந்தார்.  அவரது சரித்திர கதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவரத் துவங்கின. 

48 வரலாற்று புதினங்களை எழுதியிருக்கிறார் சாண்டில்யன். இதுதவிர, 'புரட்சி பெண்' என்ற அரசியல் புதினத்தையும், நிறைய சிறுகதைகளும் கூட  எழுதியுள்ளார். 'கடல் புறா', 'யவன ராணி' 'கன்னி மாடம்','ராஜ திலகம்', 'ராஜ பேரிகை' போன்ற நூல்கள் இப்பொழுதும் விற்பனையில் முன்னணியில் உள்ளன.   

சாண்டில்யன் 

சாண்டில்யன் எழுத்தின் சிறப்பே, காட்சி நிகழ்விடத்தைப் பற்றிய விவரணை தான். வாசகனை அந்த சூழலுக்கு உள்ளேயே இழுத்துச் செல்லும் சக்தி மிகுந்த எழுத்து அவருடையது. 

கடல் புறாவின் முதல் பாகத்தின் இறுதி அத்தியாயத்தில் வரும் சாண்டில்யனின் வரிகள் இவை.., 

'அந்தத் தூரத்திலும் முரட்டுப் புரவிகளின் கனைப்புக் கேட்டது அவள் காதுகளுக்கு. காவற் படகுகள் பல சங்கமப் பகுதியில் எங்கும் விரைந்து கொண்டிருந்தன. கப்பல் செல்ல முற்பட்டு விட்டதைக் கண்ட காவற்படகுகளின் எரியம்புகள் அந்தக் கப்பலின் மீது சரமாரியாக வரத் தொடங்கின. அவளைச் சுற்றிலும் பறந்தன. அவற்றைச் சிறிதும் அலட்சியம் செய்யாமல் கடற்கரையைப் பார்த்துக் கொண்டே நின்றாள் கடாரத்தின் இளவரசி'.

இந்த வரிகளைக் கடக்கும்போது, ஒரு போர் வீரனாக கடாரத்தின் இளவரசியோடு களம் காணும் உணர்வு வாசகனுக்கு ஏற்படும். 

இந்த யுத்தி தான்  நெடுங்காலம் கடந்தும் சாண்டில்யனின் எழுத்துகளை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 

 
- க. பாலாஜி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close