Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்வியா... செல்வமா..? - தேசியக் கல்வி தின சிறப்புப் பகிர்வு!

 

‘‘இந்தியாவின் செல்வம் வங்கிகளில் இல்லை; ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது"

                                                                                                                                       - அபுல்கலாம் ஆசாத்.

1888-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியா அம்மையாருக்கும் மகனாக, வங்காளத்திலுள்ள மெக்காவில், அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். பாபர் காலத்தில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வந்த அவரது மூதாதையர்,  வங்காளத்தில் உள்ள மெக்காவில் குடியேறினார்கள். பின்னர், அவர்களது குடும்பம் கொல்கத்தாவுக்கு வந்தது. 10 வயதிலேயே குரானை முழுவதுமாகக் கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய மார்க்கங்கள் அனைத்தையும் முழுமையாக கற்று உயர்ந்தார். கெய்ரோவில் உள்ள, அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம், அபுல் கலாம் ஆசாத்துக்கு மார்க்க அறிவையும் உலக அறிவையும் விசாலப்படுத்தியது.

அபுல் கலாமும், அரவிந்தரும் தேசபக்தி அன்பினால் பிணைந்தனர். இருவரும் நாட்டின் விடுதலைக்காக, தீரத்துடன் இணைந்து செயல்பட்டனர். “ரகசிய விடுதலை இயக்க ஸ்தாபனங்களை வங்கத்திலும் பீகாரிலும்தானே நிறுவி இருக்கிறோம்? இந்தியா முழுவதும் இதன் கிளைகளை ஏன் பரப்பக்கூடாது’’ என்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தீரம் மிக்கத் தலைவர்களுடன் வாதிட்டு, இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் சென்று, புரட்சி வீரர்களைத் தொடர்பு கொண்டு, ரகசிய விடுதலை இயக்க அமைப்புகளை உருவாக்கினர். இதுகுறித்த தகவலறிந்ததும் பல மாநிலங்களில் அபுல் கலாம் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

அபுல்கலாம் எகிப்துக்கு சென்றபோது, விடுதலை வீரர் முஸ்தபா கமால் பாட்சாவின் ஆதரவாளர்களோடு அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. அங்கே அவர்கள் நடத்திய வார ஏடு அவரைப் பெரிதும் கவர்ந்தது. ஓர் ஏட்டின் மூலமாக லட்சோபலட்சம் மக்களைப் புரட்சியாளர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. அங்கிருந்து அவர் துருக்கிக்குச் சென்றார். துருக்கியின் ரகசியப் புரட்சித் தலைவர்களைச் சந்தித்து,  அவர்களின் அனுபவங்களை பார்த்தும், கேட்டும் அறிந்து கொண்டார். விடுதலை வேட்கையுடன் 1912-ம் ஆண்டு அபுல் கலாம், தாயகம் திரும்பினர். இஸ்லாமிய சமுதாயத்தை முழுக்க முழுக்க, இந்திய விடுதலை இயக்கத்தின் போர்ப் பாசறைக்கு அழைத்து வர வேண்டும் என்று உறுதிபூண்டு, அதற்கான பணிகளை தீவிரபடுத்தினார். 

இதற்காக அவர், ‘அல்ஹிலால்’ என்ற உருது வார ஏட்டைத் தொடங்கினார். ஒவ்வொரு இதழும் புரட்சிகரமான கருத்துக்களோடு வெளிவந்தன. மூன்றே மாதங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் பரபரப்பையும், துடிதுடிப்பையும் ஏற்படுத்தினார். இஸ்லாமிய இளைஞர் சமுதாயம் அல்ஹிலாலுக்கு மகத்தான வரவேற்பு அளித்தது. இந்த ஏட்டில், ஆசாத் என்ற புனைப் பெயரில் எழுதியவர் நமது அபுல்கலாம்தான். ஆசாத் என்றால் விடுதலை அல்லது சுதந்திரம் என்று பொருள். 1915-ம் ஆண்டு வெள்ளையர் அரசாங்கம், ஆசாத்  அச்சகத்தையே பறிமுதல் செய்தது. ஆனாலும், ஆசாத் துணிந்து செயல்பட்டார். கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். ஐந்தே மாதங்கள் இடைவெளியில் அபுல்கலாம்,  ‘அல் பலாக்’ என்ற மற்றொரு வார ஏட்டைத் தொடங்கினார். இப்போது ஆங்கிலேய அரசாங்கம்,  தனது கடைசி ஆயுதத்தை வீசியது. 1916-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்,  'அபுல்கலாம், வங்காள மாநிலத்தை விட்டுவெளியேற வேண்டும்' என்று உத்தரவிட்டது. ஏற்கெனவே, அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் அடியெடுத்து வைக்கக்கூடாது என்று மும்பை, பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்கள் அவருக்குத் தடை விதித்திருந்தன. எனவே அவர், பீகார் மாநிலம் ராஞ்சிக்குச் சென்றார். ஆறு மாதங்களுக்குப் பின்னர்,  அவர் அங்கே கைது செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 

1920-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி விடுதலை செய்யப்பட்ட அவர், அந்த ஆண்டில்தான் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. காந்தியடிகள், 'கிலாபத்' இயக்கத்தைத் தொடங்கினார். முஸ்லிம் லீக் கட்சி, காந்தியின் உண்ணாவிரதத்தைப் புறக்கணித்தபோது, காந்தியுடன் ஆசாத் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார். 35வது வயதில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே.1942-ம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு’’ போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946-ம் ஆண்டு நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சுவார்த்தைகளிலும் முக்கியப் பங்காற்றினார். 

காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தபோது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ஆசாத், இந்தியாவின் முதல்  கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். 

1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி, லலித் கலா அகாடமி, கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை உருவாக்கிய பெருமை ஆசாத்தையே சேரும். ஆங்கிலேய ஆட்சியில் இந்தியக் கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய, மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப் பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என அக்காலத்திலேயே வலியுறுத்தினார். அவருடைய கனவு தற்போது நிறைவேறியுள்ளது.

‘பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்பக் கல்வி’ உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரை செய்தார்.‘‘பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது’’ என்று கூறினார். இந்தியாவின் கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு, ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி,  அதற்காக பாடுபட்டார்.

உயர் கல்வி மேம்பாட்டுக்காக பல்கலைக்கழக மானியக் குழுவை உருவாக்கினார். தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். கராக்பூரில் இந்தியத் தொழில்நுட்பப் பயிலகம்  (ஐ.ஐ.டி) இவரது பதவிக் காலத்தில் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், டெல்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. டெல்லியில் 1955-ல் திட்டமிடுதல் மற்றும் கட்டட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. 

‘‘மதவாதத்தை ஒரேடியாகக் குழி தோண்டிப் புதையுங்கள்’’ என்பதுதான் ஆசாத், மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாக இருந்தது. "மாணவர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் போராட்டங்களில் ஈடுபடுவது, அவர்களின் எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல. இன்றைய மாணவர்களே நாளைய அரசியல் தலைவர்கள். அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்கா விட்டால், தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும்" என்ற கருத்தினைக் கொண்டிருந்தார். இந்தியாவின் கல்வி மேம்பாட்டிற்கு முக்கியக் காரணமாக விளங்கியதுடன், உயர்கல்வி தரத்தை மேம்படுத்தியதிலும் முக்கியப் பங்காற்றிய அபுல் கலாம் ஆசாத்,  தனது 70-வது வயதில் 1958-ம் ஆண்டு காலமானார். 

1992-ம் ஆண்டு,  இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது. தனது வாழ்வின் இறுதிநாள் வரை, இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டார்.

"கல்விதான் உண்மையான செல்வம். அதனை நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் பெறவேண்டும்" என்று உழைத்த பெருமைக்குரியவர். ‘கல்விதான் சமூகத்தை மாற்றும் ஆயுதம்’ என்ற அவரது தொலைநோக்குப் பார்வை விசாலமானது. 2007-ம் ஆண்டு முதல்,  அபுல்கலாம் பிறந்த தினமான நவம்பர் 11-ம் தேதியை, கல்வி நாளாக பீகார் மாநிலம் முதல் முதலில் கொண்டாடியது. அதன்பிறகு, 2008-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு, தேசியக் கல்வி நாளாக அறிவித்து ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.  

- எஸ்.முத்துகிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ