Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் 6 பேரில் ஒருவர் இந்தியர். அந்த 6 ல் ஒருவருக்கு சர்க்கரை நோய்!

சர்க்கரை நோய்

ருகாலத்தில், வயதானவர்களுக்கு வரும் நோயாக மட்டுமே இருந்துவந்த சர்க்கரை நோய் இன்று குழந்தைப் பருவத்திலேயே தாக்குகிறது. இந்த அபாயத்தை உணர்த்தும் வகையில்தான் இப்படியொரு நாள் அமைந்ததோ என்னவோ...!

உலகின் 6 பேரில் ஒருவர் இந்தியர். அந்த 6 ல் ஒருவருக்கு சக்கரை நோய். உலகிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதுவும் நம் இந்தியாவில்தான். அதனால், சர்க்கரை வியாதியின் தீவிரத்தைக் குறைக்கும் மருந்து வகைகளுக்கு இந்தியாவில் எப்போதும் ஏக டிமான்ட்!

இந்த நிலையில், சர்க்கரை நோய் குறித்துப் பயப்படத் தேவையில்லை. சுயக்கட்டுப்பாட்டுடன் வாழப் பழகிக்கொண்டால், இனிய வாழ்வு வாழலாம்' என்கிறார் சர்க்கரை நோய் நிபுணரான டாக்டர் கருணாநிதி,''பொதுவாக நோய் acute & chronic என இரண்டு வகையாக இருக்கின்றன. காய்ச்சல் போன்று திடீரென வந்து போகிற நோய் acute வகை. chronic என்பது நமது வாழ்நாள் முழுவதும் உடலில் இருந்துகொண்டிருப்பது. சர்க்கரை நோய் என்பது இதில் இரண்டாவது வகை. 

ஒருவருக்கு சர்க்கரைப் பாதிப்பு இருப்பது உறுதியாகிவிட்டால், வாழ்க்கையே இனி அவ்வளவுதான் என கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்துவிட வேண்டாம். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாடாக வைக்கத் தெரிந்துகொண்டால் போதும், இந்நோயை எளிதாக சமாளிக்கலாம். 

பொதுவாக சர்க்கரைப் பாதிப்பு வந்துவிட்டால், நினைத்ததை சாப்பிட முடியாது, நினைத்த நேரத்திலும் சாப்பிட முடியாது. அடிக்கடி மருத்துவரை ஆலோசித்து, ரத்தப் பரிசோதனை செய்துகொண்டு சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதனால், பணச் செலவு, காத்திருப்பு, மன அழுத்தம் என கவனம் முழுவதும் ஆரோக்கியம் நோக்கியே திரும்பிவிடும்.

இந்தியாவைப் பொருத்தவரை, முந்தையக் காலங்களில் 60, 70 வயதுகளில்தான் இந்நோயின் தாக்கம் தென்படும். ஆனால், இப்போது, குழந்தைகளில் ஆரம்பித்து இளைஞர்கள் வரை பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய்த் தாக்கம் இருக்கிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களிடம் நீரிழிவுப் பிரச்னை அதிகமாகவே காணப்படுகிறது. கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க ஒரு வழியும் உள்ளது; உடலில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் சுயக் கட்டுப்பாடுதான் அது! இப்படியொரு வழி இருப்பதால்தான் சர்க்கரைக் குறைபாட்டை மருத்துவர்கள் 'நல்ல வியாதி' என்று செல்லமாக குறிப்பிடுவதுண்டு. ஆனால், பெரும்பாலானவர்கள் நோய் பற்றிய புரிதல் இல்லாமல், அலட்சியமாக நடந்துகொள்கின்றனர். இது நல்லதல்ல.... ஏனெனில், சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், நாளடைவில், அது உடல் உள்ளுருப்புகளையும் பாதிக்கச் செய்யும் (கண், இதயம், சிறுநீரகம் மற்றும் கால்கள்). அதனால், கவனத்துடன் இந்நோயைக் கையாண்டால் எந்தவிதப் பிரச்னையும் இல்லை.

 

சர்க்கரை நோய்

சரி... இந்த சுயக் கட்டுப்பாடு என்பது என்ன? 

அளவான உணவு, சீரான உடற் பயிற்சி, தொடர் மருத்துவ ஆலோசனை - பரிசோதனைகளை மேற்கொள்வதோடு நோய் பற்றிய விவரங்களையும் படித்துத் தெரிந்துகொண்டால், நிம்மதியான வாழ்க்கை வாழலாம்! சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் இதனைக் கடைப்பிடிப்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். கொஞ்ச நாள் இந்தக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால் அப்புறம் தானாகப் பழக்கத்துக்கு வந்துவிடும்.

நீரிழிவுப் பிரச்னையைப் பொருத்தவரை மற்ற நோய்கள் மாதிரி சிகிச்சையளித்து ஒரேயடியாகத் தவிர்த்து விட முடியாது; பின்விளைவுகளைத் தள்ளிப் போட மட்டுமே முடியும். அதாவது, இதற்கான மருத்துவ சிகிச்சைகள் இரண்டு நிலைகளாக உள்ளன. சிகிச்சையின் முதல் கட்டத்தில், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காக மாத்திரைகள் கொடுக்கப்படும். நாளடைவில் நோயின் தாக்கம் அதிகரிப்பதால், மாத்திரைகளின் செயல்திறன் குறைந்துபோகும். அடுத்தக்கட்டமாக இன்சுலின் எனும் திரவ நிலை மருந்தானது ஊசி மூலமாக நேரடியாக உடலுக்குள் செலுத்தப்படுகிறது.

நம்மிடம் அளவான உணவுப் பழக்கம், உடற் பயிற்சி, நோய் பற்றிய புரிதல் இருந்தால், முதல்கட்ட மாத்திரை சிகிச்சையிலேயே  5-லிருந்து 10 வருடங்கள் வரைத் தொடரமுடியும். அதன்பின்னர் மெதுவாக இன்சுலின் சிகிச்சைக்கு செல்லலாம். ஆனால், நோய் வந்த பிறகும்கூட அதுகுறித்தப் புரிதல் இன்றி கவனக் குறைவுடன் இருந்தாலும், உரிய சிகிச்சை முறைகளைக் கடைப்பிடிக்காமல் மனம்போன போக்கில் நடந்துகொண்டாலும் ஒரே நாளில், 2, 3, 4 முறைகூட இன்சுலின் எடுத்துக்கொள்ளக்கூடிய நிலை ஏற்படலாம். உலக சுகாதார நிறுவனம், 'இன்சுலினை' உயிர் காக்கும் மருந்துப் பட்டியலில் வைத்துள்ளது.

 'விலை குறைவான மருந்துகள் தரமற்றவை, அதிக விலையுள்ள மாத்திரைதான் சக்தி வாய்ந்தது; நல்ல பலன் அளிக்கும்' என்ற கண்ணோட்டம் மக்களிடையே இருக்கிறது. அது தவறு. 2 ரூபாய் மாத்திரை என்னவிதமான பலனைத் தருமோ அதே பலனைத்தான் 40 ரூபாய்க்கு விற்கப்படும் மாத்திரையும் அளிக்கிறது. அதேபோல், 100 ரூபாயில் ஆரம்பித்து 1000 ரூபாயைத் தாண்டியும் இன்சுலின் மருந்துகள் விற்கப்படுகின்றன. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகளில், இலவசமாகவே இன்சுலின் வழங்கப்படுகிறது. 

சுயகட்டுப்பாட்டுடன் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருந்தால் நோயின் தொந்தரவின்றி நிம்மதியான வாழ்க்கை வாழலாம். மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டாலும் பயப்படத் தேவையில்லை.... சர்க்கரை நோய் நிபுணர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற்று வாருங்கள் ஆரோக்கியம் நிச்சயம்!'' என்கிறார்.

நவம்பர் 14  - குழந்தைகள் தினமான இன்றுதான் உலக சர்க்கரை நோயாளிகள் தினமும்கூட! 


- த.கதிரவன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close