Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்ட்டம் எடுத்த மாணவனுக்கே இந்த நிலையா? #மறக்க முடியாத மாணவர்கள்

மாணவர்கள்

ஒலிபெருக்கியில் கரகோஷத்துடன் உதயஷங்கர் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றதாக அறிவித்தார்கள். இன்னும் சிறிது நேரம்கழித்து கவிதைப்போட்டியில் அவனுக்கே முதலிடம். ஒவ்வொரு அறிவிப்பாக வந்தபோதிலும் அவன் பெயர் இல்லாமல் இல்லை. ஒப்புவித்தல், கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுதல், தமிழ் நாடகம், ஆங்கிலம் நாடகம் என்ற எந்தவொன்றிலும் அவன் பரிசு பெறாமல் இல்லை. ஒரு பள்ளியின் மிகச் சிறந்த அடையாளமாக அவன் இருந்தான். பள்ளி மாணவர்கள் மத்தியில் தனி இடம் பிடித்திருந்தான் உதயஷங்கர். யார் அந்த 'உதயஷங்கர்' என்று தேடிக்கொண்டிருந்தவேளையில் என் வகுப்பில் ஒரு மாணவனாக அமர்ந்திருந்தான்.

ஜீவனோபாயத்திற்காக ஒரு பதின்ம பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்திருந்தேன். மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும் பள்ளி என்ற போலியான உருவகம் தரப்பட்ட பள்ளி அது. பள்ளியைச் சுற்றிலும் கார்பரேட் தோட்டங்கள். சாலைகள், படிக்கட்டுகள் என்று பிரமிப்பூட்டும் அம்சங்கள் ஒளிர்கின்றன. இரண்டாவது மாடியில் கடைசி வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, அந்த மாணவனைப் பார்த்தேன். மிக எளிய தோற்றம். கண்கள் ஆழமானவை. நான் நடத்திக்கொண்டிருந்த பாடத்தை அவன் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தான். ஒருகட்டத்தில் அந்தப் பாடத்தை ஒரு கதையாகச் சொல்ல அனுமதிப்பீர்களா? என்றான். மகிழ்ச்சியோடு அனுமதித்தேன். அவன் சொன்ன அந்தக் கதையில் ஓர் உயிரோட்டம் இருந்தது. அவன் முகத்தில் அளப்பரிய ஆவேசமும் தென்பட்டது. மிக வெளிப்படையாகச் சொன்னால், என் பாடத்தை எளிமையாக்கியவன் அவன்.

அவன் மீது அதீதபற்று வரக்காரணம் அந்த நிகழ்வாக இருக்கலாம். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், கால அட்டவணையை மீறி அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  விக்கிரமாதித்யன் கதை, தெனாலிராமன் கதை என்று அந்த வயதில் வாசிக்கவேண்டிய கதைகள் அனைத்தையும் வாசித்திருந்தான். அவனுடைய ரஃப் நோட் முழுவதும் கதைகள் எழுதியிருந்தான். அத்தனையும் ஆங்கிலத்தில். முயல்களும் மான்களும் அவன் பிரதேசத்தில் வந்துபோய்கொண்டிருந்தன. கவிதைகளும் எழுதுவான்; நாடகமும் எழுதுவான். அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று தமிழில் கவிதை எழுதுவதும், ஓவியம் வரைவதும். வாரமலர் பின்னட்டையில் வரும் கவிதைகளை வாசித்து. அதேபோன்ற கவிதைகளை எழுதி வருவான். அந்தக் கவிதைகள் எழுதுவதற்கான பக்குவத்தை அவன் பெற்றிருந்தான்போலும். இருந்தபோதிலும், அவனை ஒரு கவிஞனாகப் பார்க்கும் பார்வையைப் பதின்ம பள்ளி இடம்தரவில்லை. திருட்டுத்தனமாகவே அவனுடைய கவிதைகளை வாங்கி, வாசித்து, திருத்தி, பாராட்டி இருக்கிறேன். இரண்டு வரி நோட்களில் அங்கங்கே அவன் பென்சிலால் படம் வரைந்திருந்தான்.  கற்பனையின் மெல்லிய கோடுகள் அவை. கறுப்பு நிறத்தில் வர்ணங்கள் தாமாகவே உயிர்கொண்டு அலையும்படி வரைந்திருந்தான். அவற்றையும் நான் திருட்டுத்தனமாகவே பாராட்டவேண்டியிருந்தது.

இதற்கிடையில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நிகழ்ந்து. மாணவர்கள் பதட்டத்துடன் இருக்கும் நாள் அது. உதயஷங்கரின் தந்தையும் வந்திருந்தார். அவர் முகத்தில் கோபம் ஒரு சுடராக வீசிக்கொண்டிருந்தது. அந்தக்கோபத்தின் உச்சம், தாளாளரிடம் வெடித்துச் சிதறியது. “என் பையன் எல்லாத்திலயும் பர்ஸ்ட் வர்றான். ஏன் வகுப்பில் செகண்ட் ரேங்க் எடுக்கறான். நீங்க வேணும்மின்னே அவன தாழ்த்தறீங்க.” என்றார். எங்களால் பதில் சொல்ல இயலவில்லை. இந்த நிகழ்வு ஒவ்வொரு மாதமும் நடக்கும். அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் உதயஷங்கர் சோம்பிப்போய் இருப்பான்.  அவன் உடம்பில் சிறுசிறு காயங்கள். அது அவன் தந்தை அளித்த சின்னஞ்சிறு பரிசுகள். வன்மம் மிக்க பரிசுகள். கண்களின் ஓரத்தில் உப்புநீர் தேங்கிக்கிடக்கும். அந்தவேளையிலும் அவன் ஏதாவது ஒரு செடியையோ, ஒரு மரத்தையோ, ஒரு பறவையையோ அவதானித்திருப்பான். அவனுடைய ரஃப்நோட் முழுக்க அவன் மான்களை வரைந்திருப்பான்.  என் பாலி பிரதேசத்தில் மான்களுக்கு இடமில்லை. என்றாலும், அவனுடைய மான்கள் புற்களை மேயாமல், அவற்றைப் பார்த்தபடியே இருக்கும். மான்களின் வால் எப்போதும் அசைந்தபடியே இருக்கும். கொம்புகள் ஒரு மரத்தை ஞாபகப்படுத்தியபடி நோட் புக்கை விட்டுவெளியே துடிக்கும். அக்கறுப்புநிறக் கொம்புகளில் நோஞ்சான்தன்மை குடிகொண்டிருக்கும். அவன் முதுகைத் தடவித் தேற்றத்தான்முடியும். அறிவுரைகளை அவன் அதிகம் பொருட்படுத்துவதில்லை. இரண்டுநாள் கழித்து மிகுந்த உற்சாகத்துடன் பழையபடியே மாறிவிடுவான். பிள்ளைகள் வளர்ப்பில் ஆரோக்கியமான மாற்றங்களை நோக்கி நகர வேண்டியிருக்கிறது என்ற எண்ணங்கள் தோன்றும்.

உதயஷங்கர் அன்று பள்ளிக்கு வரவில்லை. அவனைப் பற்றிய ஒரு மோசமான செய்தி, பள்ளி திறந்த ஒரு மணிநேரத்தில் வந்து சேர்ந்தது. அந்த ஒரு மணிநேரத்தில் எனக்குள் ஒருவிதமான சங்கடம் ஏற்பட்டிருந்தது. இனம்புரியாத பதற்றமும் பயமும் கோபமும் கலந்திருந்தது. என் சக இயற்பியல் ஆசிரியர் கணேஷ் என்னைத் தேற்றியும் அது கட்டுக்கடங்கவில்லை. கணேஷ் இன்னொரு உதயஷங்கர் என்பது வேறொரு கதை. இந்த நிகழ்வுக்கு முன்பான நாளில் வழக்கம்போல பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில் வழக்கம்போல் உதயஷங்கரின் தந்தை என்னசெய்வாரோ அதுவே நடந்தது. வழக்கத்திற்கு மாறாக அன்று மட்டும், தந்தையின் பின்னால் அவன் அடிமையாகச் சென்றுகொண்டிருந்தான். அடுத்தநாள் காலையில் அவன் அறை உடைக்கப்பட்டது.

மின்விசிறியில் உதயஷங்கர் துண்டால் துாக்கிட்டுக்கொண்டான். இந்தச் செய்தி பள்ளியை எட்டுவதற்கு முன்பாகப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுவிட்டது. ஆழ்ந்த துக்கம் ஒரு நிமிடம் மட்டுமே அனுஷ்டிக்கப்பட்டது. பள்ளிக்கதவு அடைக்கப்பட்டுவிட்டது. அவனுடைய மரணம் எங்களுக்கு விடுமுறையாகவே மிஞ்சிவிட்டது. அவனுடைய மரணம் எனக்குள் மௌனமான துக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அவனுடைய உடலைப் பார்க்கவேண்டிச் செல்லும் சடங்குமேல் ஆத்திரம் வந்துவிட்டது. மெல்ல அவனுடைய பள்ளி வாழ்வை அசைபோட்டபடியிருந்தேன். “ஏன் உதயஷங்கர் முதலிடம் பெறவேண்டும்? அவனுடைய மான்களுக்கும் முயல்களுக்கும் கவிதைகளுக்கும் நம்மால் ஏன் பரிசுதர இயலவில்லை?” என்பதுதான் என் கேள்வி. அவனுடைய மரணத்திற்குப் பள்ளியா? தந்தையா? கல்வித்திட்டமா? எது காரணமாகக்கூடும்? என்ற பலகேள்விகளுக்கு இன்னும் எனக்கு விடை கிடைத்தபாடில்லை.? எத்தனை உதயஷங்கர்களை நாம் கொன்றிருக்கிறோம்? எத்தனைப் பள்ளிகள், எத்தனை தந்தைகள் நம்மிள் இன்னும் வாழ்கின்றன என்றும் தெரியவில்லை.  

அவனுடைய சாவு வீட்டிற்குச் சென்றுவந்த ஆசிரியர்கள் சொன்னது வியப்பாக இருந்தது. அவன் அறைச் சுவர்முழுவதும் பறவைகளும் மான்களும் வரையப்பட்டிருந்தனவாம்.  அப் பறவைகளையும் மான்களையும் அவன் எவ்வாறு பார்த்திருப்பான்? அவனையும் சேர்த்து அப்பறவைகளையும் மான்களையும் நாம் எவ்வாறு பார்க்கப்போகிறோம்? சொல்லுங்கள்.

புற்களை மேயாமல் நிற்கும் உதயஷங்கர் உங்கள் பள்ளியில் இருந்தால், உங்கள் வீட்டில் இருந்தால், தயவு செய்து அவனுக்கு இரண்டாம் பரிசு மட்டும் வழங்குங்கள்! தயவுசெய்து பாராட்டுங்ள்! ஏனெனில் நம் பூமிக்கு, இப்போதைக்குத் தேவையான ஒன்று பள்ளியோ, அலுவலகமோ அல்ல.. மான்களும் பறவைகளும்தாம்!

உலகத்தின் ஏதோ ஒரு காட்டில் உதயஷங்கர் ஒரு மானாகவே மீண்டும் பிறந்திருப்பான்.

-இரா.தாமோதரன்

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close