Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமகமக்கும் கடாய் சிக்கன்! #WeekendRecipes

                                                           கடாய் சிக்கன்          

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான கடாய் சிக்கன் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறையின் பேராசிரியர் கெளசிக்.

தேவையானவை:
சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 100 கிராம்(வேகவைத்து தண்ணீர் இல்லாமல் அரைத்தது) 
தக்காளி - 100 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்  
பச்சை மிளகாய்(கீறியது) - 4
கசூரி மேத்தி(காய்ந்த வெந்தயக்கீரை) - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10 கிராம்
முழுமல்லி(தனியா) - 20 கிராம்    
குடமிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம்(இதழ்களாக நறுக்கியது) - ஒன்று
கொத்தமல்லித்தழை(பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அடுப்பில் வாணலி வைத்துச் சூடானதும் எண்ணெய் விடாமல், காய்ந்த மிளகாய் மற்றும் முழுமல்லி(தனியா) சேர்த்து வறுத்து எடுத்து ஆறவைத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். தக்காளியை வெண்ணீரில் சேர்த்து, தோலுரித்து, தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும். 

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெங்காய விழுது, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும். இதனுடன் கசூரி மேத்தி, கீறிய பச்சைமிளகாய், அரைத்த காய்ந்த மிளகாய் - முழுமல்லி பொடி, உப்பு, சிக்கன் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணிர் சேர்த்து வேகவிடவும். பின்பு இதனுடன் கரம் மசாலாத்தூள் சேர்த்து கலக்கிவிடவும்.

அடுப்பில் மற்றொரு வாணலி வைத்து சிறிது எண்ணெய் சேர்த்துச் சூடானதும் இதழ்களாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அதை சிக்கன் கிரேவியுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி, கடாய் சிக்கனை சூடாகப் பரிமாறவும்.

கடாய் சிக்கன், சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்

- கு.ஆனந்தராஜ்
படம்: த.ஶ்ரீநிவாசன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ