Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் அறிவிப்பும்... அமீரின் 400 ரூபாய் கடனும்!

அமீர்

திரைத்துறையில் இருப்பவர்கள் பொதுவெளியில் கருத்துகளை பகிர்வது எப்போதாவது நடைபெறும். அதிலும் சமூக கருத்துகளையும், நடப்பு பிரச்னைகளைப் பற்றியும் திரைத்துறையினர் பேசுவது என்பது அரிதிலும் அரிது.  தமிழ்த் திரையுலகில்  விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே பொதுவான பிரச்னைகளில் துணிந்து தங்களது கருத்துகளைச் சொல்வார்கள். அவர்களில் ஒருவர் இயக்குநர் அமீர்.  ஈழத் தமிழர் பிரச்னை முதல் தமிழ்நாட்டு மக்களின்  பல்வேறு அன்றாடப் பிரச்னைகள் வரை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது கருத்துகளை தொடர்ந்து பதிய வைப்பவர்.

நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் அன்றாடம் மக்கள் காத்திருந்து புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுச் செல்கிறார்கள். அவர்களின் சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

பிரதமர் மோடியின் அறிவிப்பால், நாடு முழுவதும் எழுந்துள்ள பணத் தட்டுபாடு குறித்து, சமீபத்தில் தனது கருத்தினை தெரிவித்திருந்த அமீர், மோடியின் இந்த அறிவிப்பு பற்றி விஜய் கூறிய கருத்தையும் வரவேற்று இருந்தார்.  மோடியின் அறிவிப்பால் நானூறு ரூபாய்க்கு நானே திண்டாடி விட்டேன் என்று கூறுகிறார் அமீர்.

“இந்த அறிவிப்பு சர்வாதிகார நாட்டில் திடீர் என நடக்கும் அறிவிப்புபோல எனக்குப் பட்டது. நான் கையில் பணத்தோடு கடைக்குச் சென்று கொண்டிருக்கும்போது தான், இந்த அறிவிப்பு வந்தது. என் கையில் இருந்த ரூபாய் எல்லாம் ஆயிரம், ஐநுாறு நோட்டுகள்தான். அவை அனைத்தும் திடீர் என செல்லாது என்றால், என்ன மனநிலைக்கு நாம் வருவோம்? என்பதை நான் அன்றுதான்  உணர்ந்தேன். உண்மையில், நான் நானுாறு ரூபாய் கடன் வாங்கினேன் என்று சொன்னால் நம்புவீர்களா?  என்னிடம் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு இருக்கிறது. நல்லவேளை அதைவைத்து ஹோட்டலில் சாப்பிட முடிந்தது. பொருட்கள் வாங்க முடிந்தது. ஆனால், வீட்டுக்கு காய்கறி வாங்க பணம் இல்லாமல், எனக்கு தெரிந்தவரிடம் நானுாறு ரூபாய் பணம் கடனாக வாங்கவேண்டிய நிலைக்கு அன்று எனக்கு ஏற்பட்டது.

பழைய ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப் போவதாக அரசு முடிவு செய்தால், அதற்கு ஈடான தொகையை இவர்கள் முன்கூட்டியே அடித்து வைத்துக்கொண்டுதான், இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும்.  அதைச் செய்யாமல் பற்றாக்குறையாக பணத்தை வைத்துக்கொண்டு, இப்படி அறிவித்தது அறிவான அரசிற்கு அழகல்ல. அலுவலக வேலைக்கு போகிற மாதிரி இப்ப மக்கள் தினமும் காலை நேரத்தில், வங்கிகளில் போய் வரிசையில் நிற்பதைப் பார்க்கும்போது, மோடிக்கு இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார ஆலோசனை வழங்கியவர்கள் யார்? என்று பார்க்கும் ஆவல் எழுந்துள்ளது. அவர்கள் தந்த அதீத ஐடியாவை மோடியும் இப்படி செயல்படுத்தி விட்டார்.  ஆனால் எனக்குத் தெரிந்து எந்த கோடீஸ்வரனும் நோட்டை மாற்றியது மாதிரி தெரியவில்லை. அன்றாடப் பிழைப்புக்கு கஷ்டப்படும் மக்கள்தான், ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். கறுப்புப் பணம் ஒழியும் என்கிறார்கள். அதற்கும் சாத்தியம் குறைவு” என்கிறார் அமீர்.

எல்லா வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் பெண்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், மேலும் சில தினங்களுக்கு காத்து நின்றுதான் தங்களது பணத்தைப் பெற்றுச் செல்லும் நிலை உள்ளது. இந்த நிலை தொடர்கதையாக தொடராமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

- அ.சையது அபுதாஹீர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ