Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த 90 வயது பாட்டி தினம் எவ்வளவு தூரம் சைக்கிள் ஓட்டுகிறார் தெரியுமா?

பாட்டி

வ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும், குறிப்பிட்ட வயதில் ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒரு சிலரோ, இனிமேல் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்து வீட்டிலேயே முடங்கிக்கிடப்பார்கள். 70 வயதுக்கு மேல் கண்கள் சரிவர தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவார்கள். வயது  முதுமையால், தாத்தா பாட்டிகள் வீட்டைவிட்டு வெளியில் எங்கும் செல்ல பயப்படுவார்கள்.

ஆனால், சிலி நாட்டில் வசித்துவரும் 90 வயது பாட்டியைப் பார்த்து எல்லோரும் 'வாவ்' என்று வாயைப் பிளக்கிறார்கள். சிலியில் உள்ள செரிலாஸ் பகுதியில் வசிக்கும் இந்தப் பாட்டியின் பெயர், எலினா கால்வேஜ், சோர்வு இல்லாமல் சைக்கிள் ஓட்டுகிறார். இவரைப் பார்த்து, அப்பகுதியில் உள்ள மக்கள் அசந்துபோகிறார்கள். தினமும் 30 கி.மீ தூரம் சைக்கிள் ஓட்டிச் சென்று,  பால், முட்டை போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்று, அதில் வரும் பணத்தைக்கொண்டே தன் வாழ்க்கையை நகர்த்துகிறார்.

ஒரு சிறிய பண்ணையில் தனியாக வாழ்ந்துவரும் இந்தப் பாட்டி, கோழிகள், மாடுகளை வளர்த்துப் பாராமரித்து வருகிறார். கோழிகள் இட்ட முட்டைகளையும் மாடுகள் தரும் பாலையும் விற்பதே இவரது தினசரி வேலை. 43 வருடங்களாக கொஞ்சமும் அசராமல் தொடர்ந்து செய்துவருகிறார் இந்த ஆக்டிவ் பாட்டி. இதனால், வாரத்துக்கு நூற்றுக்கணக்கான கி.மீ தூரம் சைக்கிள் மிதித்து தன் வாழ்க்கையைத் தானே பார்த்துக்கொள்ளும் இவரைப் பார்த்துப் பலர் புருவம் உயர்த்துகிறார்கள்.

90 வயதிலும் சைக்கிள் ஓட்டும் பாட்டியின் வீடியோ:

'வயது 90 ஆனாலும், மன உறுதி இருந்தால் எதையும் சாதித்துவிடலாம்' என்று கூறும் இந்த சைக்கிள் பாட்டி, 'எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. நான் இந்த சைக்கிள்தான் எனக்கு நண்பன். மற்றவர்களைப் போல ஆக்டிவாக இருப்பதுக்குக் காரணம், தினமும் சைக்கிள் ஓட்டுவதால்தான்' என்று கூறுகிறார்.

இந்தத் தள்ளாத வயதிலும் பாட்டியின் உழைப்பைப் பார்த்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித் திரிகிறார்கள். அது மட்டும் அல்ல, பக்கத்துத் தெருவுக்குப் போவதற்கே இளைஞர்கள் பைக்கில்தான் செல்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், இந்தப் பாட்டியின் உழைப்பைப் பார்த்தாவது திருந்த வேண்டும்'' என்கிறார்கள். உண்மைதான் பேரன் பேத்திகளோடு இருக்கவேண்டிய வயதில், தினமும் பல கிலோ மீட்டர்கள் தன் வாழ்வாதாரத்துக்காக சைக்கிள் ஓட்டுகிறார் என்றால் பாட்டியின் தன்னம்பிக்கை பாராட்டக்குரியது!

- என்.மல்லிகார்ஜுனா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ