Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"என்னுடைய இயல்பே, இயல்பிலிருந்து நழுவிக் கொண்டே இருப்பதுதான்!"- அருந்ததி ராய் பிறந்த நாள் பகிர்வு

அருந்ததி ராய்

ணு உலை எதிர்ப்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கான போராட்டங்கள், பழங்குடியினரை காடுகளிலிருந்து வெளியேற்றிவிட்டு இயற்கை வளங்களை கொள்ளையடிக்கத் துடிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்கள் என  சமூகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக தன் எழுத்தை பயன்படுத்தி வருபவர் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்.

1961-ம் ஆண்டு, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் பிறந்தார் அருந்ததி ராய். தந்தை ரஜீத் ராய் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். தாய் மேரி ராய் கேரளத்தை சேர்ந்தவர், பெண்கள் அமைப்பு ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அருந்ததி ராய்க்கு இரண்டு வயது இருக்கும்பொழுது பெற்றோர்கள் பிரிய நேர்ந்ததால் தனது தாயுடன் கேரளா திரும்பி தனது பள்ளிப்படிப்பை கோட்டயத்திலும், தமிழகத்தின் நீலகிரியிலும் நிறைவு செய்தார். பின்னர் டெல்லியில் கட்டடக் கலை பிரிவில் உயர்படிப்பை படித்தார் அருந்ததி ராய். 

நாவல்கள், கட்டுரைகள் எனத் தனது எழுத்துப்பணியையும் தாண்டி தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். அரசுகளுக்கு எதிராக வெளிப்படுத்திய விமர்சனங்களால் பல்வேறு முறை இவரது வீடு தாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் தனது கருத்துகளை சொல்லத் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தியை விமர்சித்து இவர் சொன்ன கருத்துகள் பல்வேறு தளங்களில் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.   

1989-ம் ஆண்டு வெளிவந்த  "In Which Annie Gives it Those Ones" என்ற திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதியதற்காக அருந்ததி ராய்க்கு தேசிய விருது அளிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு அந்த விருதை திருப்பி அளித்துவிட்டு, 

"மது திறமைகள் எப்போதுமே விருதுகளை வைத்து அளவிடப்படுவதில்லை. மனிதர்கள் கொல்லப்படுகின்றனர், எரிக்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர். நாட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் மத சகிப்புத்தன்மை என்ற வார்த்தையை எளிதாக காரணம் காட்டுகின்றனர்.  இத்தகைய வார்த்தையை பயன்படுத்துவதே முதலில் தவறு. நாட்டில் குண்டர்கள் கையிலெடுக்கும் விவகாரமாக மாட்டிறைச்சி ஆகி விட்டது. மாடு எப்படி கொல்லப்படுகிறதோ அது போலவே அவர்கள் மனிதர்களையும் கொல்கின்றனர்." என தனது கருத்தை பதிவு செய்தார். 

1989-ல் சிறந்த திரைக்கதை எழுதியதற்காக தேசிய விருது பெற்று இருந்தாலும். 'பண்டிட் குயின்' என்ற திரைப்படத்துக்கு தனது விமர்சனத்தை பதிவு செய்ததன் மூலமாக பல தரப்பிலும் கவனிக்கப்பட்டார் அருந்ததி ராய்.  
" Broken republic, Capitalism A Ghost Story, The End Of Imagination, War Talk " எனப் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார் அருந்ததி ராய்.

புனைவு இலக்கியத்துக்காக எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் உலகின் உயரிய  விருதான புக்கர் பரிசினை 1997 இல் பெற்றார் அருந்ததி ராய். முதன் முதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர்  புக்கர் பரிசு பெற்ற பெருமையும் இவரைச் சேரும்.'சின்ன விஷயங்களின் கடவுள் (The God of Small Things)' என்ற நாவல் அருந்ததிராய்க்கு புக்கர் பரிசை பெற்றுத் தந்தது. 

"இது ஐந்து நீதிபதிகளின் தீர்ப்பு. ஒருவேளை வேறு ஐந்து பேர் நீதிபதிகளாக இருந்திருந்தால், வேறு ஒரு புத்தகம் தேர்வாகி இருக்கும். அதனால், என் புத்தகம் மட்டும் தான் சிறந்தது என நான் கருதவில்லை." புக்கர் பரிசு வென்ற பொழுது அருந்ததி ராய் சொன்ன வார்த்தைகள் இவை..!!

அருந்ததி ராய்

"குறிப்பிட்ட நாளில் சட்டிஸ்கர் மாநிலம் தான்தேவாடாவில் அமைந்துள்ள தான்தேஸ்வரியம்மா ஆலயத்துக்கு வரவேண்டும். கையில் புகைப்படக் கருவியும், நெற்றியில் பொட்டும், ஒரு தேங்காயும் வைத்திருக்க வேண்டும். உங்களைச் சந்திப்பவர் தலையில் தொப்பி அணிந்திருப்பார். கையில்   'அவுட்லுக்' இந்தி இதழும் சில வாழைப்பழங்களும் வைத்திருப்பார்.  கடவுச் சொல்: நமஸ்கார் குருஜி" மாவோயிஸ்டுகளை அவர்கள் இடத்தில் சந்திக்கச் செல்லும் முன் அருந்ததி ராய் வீட்டுக்கு வந்து சேர்ந்த கடிதத்தின் சுருக்கம் தான் இது. கடிதத்தை தொடர்ந்து மாவோயிஸ்டுகளுடன் பயணம் செய்தவர் ' தோழர்களுடன் ஒரு பயணம் (Walking with The Comrades)' என்ற பெயரில் மாவோயிஸ்டுகளுடனான தனது அனுபவங்களையும், அவர்களது கருத்துகளையும் எழுதினார்.      

படிப்பு வேறு. பின் சினிமா.. அதன்பின் போராட்டாங்கள் என மாறிவரும் தளங்கள் குறித்து ஒருமுறை அருந்ததி ராயிடம் கேட்கப்பட்டது. "என்னுடைய இயல்பே மாறிக்கொண்டிருப்பதுதான்" என்றார் ராய்.

தனது முதல் நாவலுக்கு பிறகு எழுதாமல் இருந்தவர், 2017ல் இரண்டாவது நாவலை பப்ளிஷ் செய்யவிருக்கிறார். நாவலின் பெயர் The Ministry of Utmost Happiness.

ரு நேர்காணலில் அருந்ததி ராயிடம்..,

"இது வரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே சிறந்தவர் என்று யாரைச் சொல்வீர்கள்?" எனக் கேட்கப்பட்டது.
"அப்படி யாரும் இல்லை. ஆனால், மன்மோகன் சிங் மோசமானவர். இந்தியாவை விற்றவர்." எனச் சொன்னார்.

சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் மாவோயிஸ்டுகள் குறித்து அவர் சொன்னது.., 
"மாவோயிஸ்ட்டுகள் ஆயுதம் ஏந்தி போராடுவதை நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால், அவர்களுடைய போராட்டத்தின் நோக்கம் நியாயமானது என்று சொல்வதில் எனக்கு எந்தத்  தயக்கமும் இல்லை." ஆம் அது தான் அருந்ததி ராய்.  தன் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு அவர் எப்போதுமே தயங்கியது இல்லை.

வாழ்த்துகள் தோழர்!!  

- க. பாலாஜி 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close