Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பயணங்களால் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் நன்மை தெரியுமா?-செல்லமே செல்லம் #GoodParenting

குழந்தை

அன்பிற்கினிய தோழி மைதிலிக்கு,

இங்கு யாவரும் நலம். அங்கே தோழர், குழந்தை ஆகியோர் நலமா? கடந்த வாரம் சென்னை கிண்டியில் இருக்கும் குழந்தைகள் பூங்காவுக்குச் சென்றிருந்தோம். குழந்தைகள் மான்களையும் பாம்புகளையும் முதலைகளையும் மற்ற விலங்குகளையும் பார்த்து, பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.

அங்கே கவனித்த சில குழந்தை வளர்ப்பு சம்பந்தமான பார்வைகளைப் பகிரவே இந்தக் கடிதம். பாம்பு பண்ணையைப் பார்த்து முடித்துவிட்டு பூங்காவுக்குள் நுழையச் சென்றபோது, அங்கே நீண்ட வரிசை இருந்தது. இவ்வளவு நீண்ட வரிசையில் நின்று போகலாமா, அல்லது வீட்டுக்குச் சென்றுவிடலாமா என்ற கேள்வி  எழுந்த நொடியில், குழந்தைகளின் உற்சாகம் அதனை தூக்கிச் சாப்பிட்டது.

வரிசையில் நின்றோம். வரிசை மெதுவாக நகர்ந்தது. டிக்கெட் கொடுக்கும் இடத்தின் அருகில் இன்னும் அதிகக் கூட்டம். வரிசைக்குள் சிலர் அத்துமீறி நுழைய முயற்சித்தனர். 'வரிசையில வாங்க' என்று அத்துமீறுபவர்களை கூட்டத்தினர் கடிந்தபடி இருந்தனர்.

'டிக்கெட் எடுத்துட்டோம்' எனச் சொல்லி உள்ளே நுழைந்த ஒரு குடும்பஸ்தர், டிக்கெட் கவுன்டருக்கு அருகே உள்ளே நுழைந்து டிக்கெட் எடுக்க கை நீட்டினார். தன் குழந்தைகள் முன்னர் அவர் அனைவரிடமும் திட்டு வாங்கினார்.

இன்னொரு குடும்பஸ்தர் கவுன்டரை நெருங்கும் முன்னர் அங்கே இருந்த பூங்கா அதிகாரியிடம், 'எந்த வயசு முதல் டிக்கெட் வாங்கணும்?' என்று கேட்டார். அதிகாரி 'ஐந்து' என்றார். மேலே பெரிய எழுத்தில் இருந்த அறிவிப்புப் பலகையையும் காட்டினார். டிக்கெட் வாங்கிக்கொண்டு வெளியே வந்ததும் அவர் மகன் அவரிடம், 'அப்பா ஐ எம் சிக்ஸ். எனக்கு ஏன் டிக்கெட் எடுக்கல?' என்று சத்தமாகக் கேட்க, 'கம்முனு வாடா' என அவனை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

மான்கள் இருந்த பகுதியில் அதிகக் கூட்டம். தடுப்புப் பகுதியைத் தாண்டி சில குழந்தைகள் உள்ளே இறங்கி மான்களுக்கு சிப்ஸ், பிஸ்கட்டுகளை கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். 'யாரும் எதுவும் கொடுக்காதீங்க' என பிள்ளைகளை வெளியே வரச்சொன்னேன். அவர்கள் நின்றிருந்த பகுதிக்கு மேலேயே 'Don’t feed Animals' என தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி இருந்தார்கள்.

இங்கே பெற்றோர்களுக்கு நினைவுறுத்த வேண்டிய விஷயம், குழந்தைகள் நம்மை கவனிக்கின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். வரிசையை கள்ளத்தனத்துடன் மீறச் சொல்லிக் கொடுக்கிறோம். ஐந்து ரூபாய்க்காக, வயதினை குறைத்துச் சொல்லி பொய்சொல்லக் கற்றுத்தருகிறோம். அந்த ஐந்து ரூபாயை மிச்சப்படுத்திவிட்டதாக நினைத்துக்கொண்டு, நம் நேர்மையை விலை கொடுக்கிறோம். மிருகங்களை மதிக்க,  துன்புறுத்தாமல் இருக்க கற்றுத்தர வேண்டிய இடத்தில் விதிகளை மீறி குழந்தைகளுக்கு நெகட்டிவ்  எடுத்துக்காட்டாக ஆகிறோம்.

''குழந்தைகள் நீங்கள் சொல்வதைக் கேட்பதில்லை என வருத்தப்படாதீர்கள். அவர்கள் உங்களை கவனித்துக்கொண்டே இருக்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்'' என்பார் ராபர்ட் பல்கம்.

ஆயிரம் முறை ஓர் அறிவுரையையோ விழுமியத்தையோ சொல்லிக்காட்டுவதைவிட, நம் செய்கைகளில் இருந்து குழந்தைகள் அவற்றை உடனடியாகக் கற்றுக்கொள்வார்கள். அதனால் நம் செய்கைகள் எப்போதும் நேர்மையாகவும் நேர்மறையாகவும் இருப்பது அவசியம். பிள்ளைகள் முன்பாக மட்டுமல்ல, எப்பொழுதும் அப்படி இருப்பது சிறப்பு.

பூங்காவில், பின்னர் அங்கிருந்த எல்லா கூண்டுகளையும் பார்த்தோம். அதிலிருந்த பறவைகளின் பெயர்கள், அவை பரவலாகக் காணப்படும் இடம், சாப்பிடும் உணவு, எவ்வளவு முட்டையிடும் என வாசித்து பரவசப்பட்டோம்.

“அப்பாவைவிட நாலு மடங்கு ஹைட்டா வளருமாம்!”

“நிஜமாவாப்பா சொல்றீங்க?!”

குழந்தைகளை உயிரியல் பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகளுக்கு அழைத்துச்செல்லும்போது, 'அந்த குரங்கைப் பார்', 'இந்த மயிலைப் பார்' என்று மட்டும் சொல்லாமல், அது குறித்த தகவல்களையும் தந்து, இந்த இயற்கை எத்தனை பிரமாண்டமானது என்பதை அவர்களை கண்களாலும் மனதாலும் உணரவைக்க வேண்டும். அதன் அழகை ரசிக்கவும், அதில் மெய் சிலிர்க்கவும்  ஆரம்பித்துவிட்டால், வளரும் தலைமுறை எப்பாடுபட்டாவது அதனை அழிவில் இருந்து காப்பாற்றிவிடும். நாம் குழந்தைகளின் மீது கொண்டுள்ள அக்கறை என்பது புதிய விஷயங்களைக் கற்றுக்கொடுப்பதிலும் இருக்கிறது.

நண்பர்களின் குடும்பங்கள் இணைந்து, இதுபோன்ற இடங்களுக்கு அவுட்டிங் சென்றால் எத்தனை ஆனந்தமாக இருக்கும்?! விரைவில் திட்டமிடுவோமா?

அன்புடன்,
விழியன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close