Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் குழந்தைக்கு இந்த ஆச்சர்யங்களைப் பரிசளிக்கத் தயாரா? #WeekendSurprise

 

குழந்தை

குழந்தைப் பருவத்தின் நினைவுகளைச் சொல்லும், இந்த வசனங்களைச் சொல்லி இருப்பீர்கள் அல்லது பெரும்பாலானவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

‘நான் குழந்தையா இருக்கறப்ப,  சின்ன வயசுல எங்க மாமா வீட்டுக்கு வர்றப்பல்லாம் ஒரு சாக்லேட் வாங்கிட்டு வருவாரு. அதுக்காகவே அவரு எப்படா வருவார்னு காத்துட்டிருப்பேன்’

‘சின்ன வயசுல எங்க பாட்டி வீட்டுக்குப் போறதுன்னா அவ்ளோ குஷியாய்டுவேன்.. அங்கதான் எனக்குப் பிடிச்சதெல்லாம் சமைச்சுக் குடுப்பாங்க’

‘சின்ன வயசுல் பக்கத்து வீட்ல குமார்னு ஒருத்தன் இருந்தான். அவனும் நானும் சேர்ந்தாலே செம லூட்டியா இருக்கும்... ப்ச்.. எங்க இருக்கான்னு தெரியல இப்ப..’

-இப்படி உங்கள் மனதில் நிழலாடும் மகிழ்ச்சியான தருணங்களை ரீ - ப்ளே செய்து பார்ப்பதிலேயே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உங்களுக்கு இருக்கும். 

ஆனால், இவற்றை உருவாக்கிக் கொண்டது நீங்களா? மாமா வந்தால் ஒரு மகிழ்ச்சி என்றால், அவராகத்தானே உங்களுக்காக உங்கள் வீட்டுக்கு வந்திருப்பார்? நீங்களாகவா பாட்டி வீட்டுக்குப் போயிருப்பீர்கள்? அப்பாவோ, அம்மாவோ அழைத்துப் போயிருப்பார்கள்? உங்களை நண்பர்கள் வீட்டுக்கு அனுமதித்ததிலோ, நண்பர்களை உங்கள் வீட்டுக்கு அனுமதித்ததிலோ உங்கள் பெற்றோரின் பங்கு நிச்சயம் இருந்திருக்கும்... இல்லையா? 

ஆனால், இன்று நம் குழந்தைகளுக்கு இந்த மாதிரியான என்ன பொக்கிஷ நினைவுகளைக் கொடுத்திருக்கிறோம்?
நாளை அவர்கள் பெரிதானால் என்ன பேசிக் கொள்வார்கள்?

 ‘எங்கப்பா ஃபோனை எடுத்தார்னா, எங்கம்மா கோச்சுப்பாங்க’

‘சின்ன வயசுல ஒரு ஆங்க்ரி பேர்ட்ஸ்னு  ஒரு வீடியோ கேம்.. செம்மயா இருக்கும்..’

‘எங்கம்மா எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா? எப்பயும் பிஸியா வேலை செஞ்சுட்டே இருப்பாங்க. நான் டிவில டோரா பார்த்துட்டிருப்பேன்’

 நேற்று வெளியான ‘டியர் ஜிந்தகி’ படத்தில் ஒரு காட்சி. ஷாருக் கான், அவரது அப்பா குறித்துச் சொல்லும்போது ‘எங்கப்பா பீச்சுக்குக் கூட்டிட்டு வருவாரு.. அலைகள் கூட கபடி விளையாடுவோம். இப்பவும் விட்டா நாள் முழுக்க விளையாடுவேன். என் சின்ன வயசுன்னாலே எனக்கு அதுதான் ஞாபகம் வரும்’ என்று பின்வாங்கும் அலைகளை, கபடிக் கபடி என்று துரத்திச்சென்று, அது திரும்ப வரும்போது தொட்டுவிட்டு, கரைக்கு ஓடி வருவார். 

அலியா பட்டிடம், ‘உனக்கு அப்படியேதும் நினைவுகள் உள்ளதா?’ என்று கேட்க அலியா பட் ‘எனக்கு சாய்ராதான் துணை’ என்பார். சாய்ரா என்பது அவரது டெடி பியர் பொம்மை. அதிலிருந்தே அவர் பெற்றோர், அவருக்கான நேரம் ஒதுக்காததைப் புரிந்து கொள்ளலாம். 

நம் குழந்தைகளுக்கும் பொம்மை நினைவுகளையும், வீடியோ கேம், டிவி நினைவுகளையும்தான் அவர்களது Childhood Memories ஆக்கப் போகிறோமா? 

என்னதான் செய்ய வேண்டும் நான் என் குழந்தைக்காக? 


அந்தப் படத்தில் வந்தது போல, அலையோடு கபடி விளையாடுதலை, உங்கள் வாரிசுக்கு என்ன வயதாக இருந்தாலும் செய்யலாம். 2 ஆனாலும் சரி, 25 ஆனாலும் சரி. அவர்கள் பெற்றோருக்கு குழந்தைகள்தானே?

Weekend Tips

உங்கள் குழந்தையின் வயது என்னவாக வேண்டுமானலும் இருக்கட்டும். கீழே உள்ள டிப்ஸ்களைப் படியுங்கள். உங்கள் குழந்தையின் வயதுக்கேற்ப  ஒன்றை இந்த வாரம் ஆரம்பியுங்கள். மாதம் இரண்டு வாரங்களாவது இவற்றில் எவற்றையாவது செய்யுங்கள்.

* வீட்டில் உள்ள பழைய ஃபோட்டோக்களை எடுங்கள். அல்லது உங்கள் கம்ப்யூட்டர் / லேப்டாப்பில். செலக்டீவாக அவற்றில் 25 அல்லது 30 ஃபோட்டோக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் உங்கள் வாழ்க்கையில் இடம் பெறும் முக்கியமானவர்கள் பலரும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாரிசை உட்காரவைத்துக் கொண்டு, அப்பா-அம்மா இருவரும், அந்த ஃபோட்டோ எடுக்கப்பட்ட தருணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கசப்பான அனுபவத்தை நினைவுபடுத்தும், தர்மசங்கட ஃபோட்டோக்களுக்கு ஸ்டிரிக்ட் தடா!

* வீட்டில் வேலையாளோ, அம்மாவோ யார் சமைக்கிறார்களோ.. ஒரு வேளை உணவுக்கு நாங்க ஹெல்ப் பண்ணுவோம்’ என்று வாரிசோடு களம் இறங்குங்கள்.

* அருகிலுள்ள ஏதேனும் அரசு சார்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அப்படி என்றால்? போஸ்ட் ஆஃபீஸ், போலீஸ் ஸ்டேஷன், ஃபயர் சர்வீஸ், சப் ரெஜிஸ்ட்ரார் ஆஃபீஸ், அரசு மருத்துவமனை, ரேஷன் கடை.. இப்படி. அவற்றின் செயல்பாடுகளை அவனுக்கு / அவளுக்கு விளக்குங்கள். தீயணைப்பு நிலையம் என்றால் தைரியமாக உள்ளே சென்று அதிகாரியிடமே ‘என் மகளுக்காக வந்தேன். உங்கள் வேலையப் பற்றி விளக்க முடியுமா?’ என்று கேட்பீர்களானாலும் இன்னும் சிறப்பு. அவர்களுக்கு அந்த சம்பவம் நன்றாக மனதில் பதியும். அவர் ஒருவேளை ‘அதெல்லாம் முடியாது வெள்ல போ’ என்றால், நீங்கள் வெளியே வரும்போது ‘அங்க நிக்கிதுல்ல.. அந்த ஃபயர் சர்வீஸ் வண்டிய பாத்துக்க சொல்றேன்’ என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்து, அந்தக் கட்டடத்துக்கு எதிரிலேயே நின்று கொண்டு விளக்கலாம். காலத்துக்கும் அவர்கள் நினைவில் நிழலாடும். பெரிய பயணம் மேற்கொளவது நல்லதுதான். அது வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ முறைதான் முடியும்... இந்த மாதிரி இடங்களுக்கு  மாதத்துக்கு இரண்டு இடங்களுக்குக் கூட்டிச் செல்லலாம். 

* சும்மா உங்கள் வீடிருக்கும் வீதியில் அவர்களோடு நடங்கள். ஃபோன் வீட்டில் இருக்கட்டும். பேசிக்கொண்டே நடந்து போய், வாருங்கள். இதிலென்ன ஞாபகம் வைத்துக் கொள்ள இருக்கும் என்று நினைத்தால், ஒரு சின்ன ஆக்டிவிடியை இணைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, வீட்டிலிருந்து புறப்படும்போது ஒரு சின்ன கல்லை ஐந்தாறு அடி தூரத்துக்கு உதைத்து, அடுத்தது அவனை உதைக்கச் சொல்லுங்கள். அந்தக் கல்லை உதைத்துக் கொண்டே நடந்து போய் அதை ஆரம்பித்த இடத்திலேயே விடவேண்டும் என்று பேசிவைத்துக் கொண்டு ஆரம்பியுங்கள்.

*  வீட்டிற்கு கொஞ்சம் வெளியிலும், வீட்டிற்குள்ளுமாக ஒரு Treasure Hunt விளையாட்டை விளையாடுங்கள்.

* நிறைய கடைகளில் குட்டிக் குட்டி மேஜிக் செய்வதற்கானா கிட் கிடைக்கிறது. ஒரு சண்டேவின் ஒரு பொழுது, அவர்களுக்கு மேஜிக் செய்து காட்டுங்கள்.

* உங்கள் Guide / Philosopher / God Father /குரு என்று யாராவது இருப்பார்களே.. அவரை வீட்டுக்கு வரவழையுங்கள். அல்லது அவர் வீட்டுக்கு நீங்கள் செல்லுங்கள்.

* எழுத்து, பேச்சு, ஓவியம் என்று அவர்களுக்கு எதில் திறமையோ அதைப் பற்றி கூகுள் செய்து, மொட்டை மாடியிலோ, பார்க்கிலோ அமர்ந்து அதை அவனோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 இவை, சும்மா சேம்பிள்தான். இவற்றைப் போல எத்தனையோ செய்யலாம். மொத்தமாக வார இறுதியில் 10 மணி நேரமாவது நாம் வீட்டில் இருப்போம். இவற்றில் இருப்பவற்றிற்கு 2 - 3 மணிநேரங்கள் ஒதுக்கினால் போதும். அவர்களுக்கு இது ஒரு நல்ல நினைவைத் தரும். 

அதற்கு ஒன்றே ஒன்றுதான் வேண்டும். மனம்!

-பரிசல் கிருஷ்ணா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close