Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"சேலைங்கிறது பெண்களுக்கு மட்டுமானதில்லை" - 'சாரி மேன்' ஹிமான்ஷு!

பெண்

ஹிமான்ஷு வர்மாவை பார்க்கிற யாருக்கும் முதலில் உறுத்தலாகத் தான் இருக்கும். அவரது நெற்றித் திலகத்தையும் மையிட்ட விழிகளையும் தாண்டி, பார்க்கிற யாரையும் உறுத்துகிற விஷயம் சேலை. யெஸ்... டெல்லியைச் சேர்ந்த ஹிமான்ஷுவின் அடையாளமே saree man என்கிற பட்டம்தான். தன்னைத் திருநங்கையாகக் காட்டிக் கொள்ள நினைப்பவர்கள் பெண் உடையில் வலம் வருவதில் ஆச்சர்யமில்லை. தினம் தினம் சேலை கட்டிக் கொள்கிற ஹிமான்ஷுவோ தன்னை 'ஆம்பிளை' என்றே அறிவிக்கிறார் அழுத்தமாக.

''இந்த உலகத்துலயே ரொம்ப அழகான உடைன்னா அது சேலைதான். சேலை கட்டற விதத்துலயும் சரி, சேலைகளோட டிசைன்கள்லயும் சரி... எத்தனை வெரைட்டி... அதை வேற எதுலயும் பார்க்க முடியாது. உங்க தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவோட அம்மா, ஜெயலலிதா கைக்குழந்தையா இருந்தபோதே ஷூட்டிங் கூட்டிட்டுப் போவாங்களாம். பிரேக் டைம்ல குழந்தையை தன்னோட சேலைக்குள்ள வச்சுக் கட்டி அணைச்சுப்பாங்களாம். அம்மாவோட சேலையும் அந்த வாசனையும் எல்லாக் குழந்தைங்களுக்குமே ஸ்பெஷல் இல்லையா? எனக்குமே அப்படி எங்கம்மாவோட சில சேலைகள் மேல சென்ட்டிமென்ட்ஸ் உண்டு. அதைத் தாண்டி அம்மாவோட சேலைகள் ஒவ்வொண்ணுலயும் அன்பின் வாசனை தூக்கலா இருக்கும்...'' சேலை கட்டும் பெண்ணின் வாசம் பற்றிப் பேசுகிற ஹிமான்ஷு வர்மா, டெல்லியைச் சேர்ந்த கலை ஆர்வலர்.  

தான் நடத்துகிற சேலைத் திருவிழாவுக்காக சென்னை வந்திருந்த ஹிமான்ஷுவிடம் பேசினோம்.

''நான் நடத்தற ஆர்ட் ஆர்கனைசேஷன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி....  சேலை கட்டிக்கிட்டா என்னனு தோணினது. சும்மா ட்ரை பண்ணிப் பார்க்கலாமேனு சேலை கட்டிக்கிட்டேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.  முதல் முறை சேலை கட்டினப்ப பலவிதமான விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனா அடுத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்றதை நான் என்னிக்குமே ஒரு பொருட்டா எடுத்துக்கிட்டதில்லை. எனக்குப் பிடிச்சிருக்கு... செய்யறேன்... அவ்வளவுதான்... 2005ல ஆரம்பிச்ச சேலை கட்டற பழக்கம், இன்னி வரைக்கும் தொடர்ந்திட்டிருக்கு...'' என்கிற ஹிமான்ஷு சேலைகளைப் பற்றி பி.ஹெச்டியே செய்தவர் ரேஞ்சுக்கு  ஏராளமான தகவல்களை அள்ளி வீசுகிறார்.

''150 வருஷங்களாதான் நாம சேலைனு சொல்லிட்டிருக்கோம். அதுக்கு முன்னாடி இதை தாகூர்பாரி டிரேப்னு தான் சொன்னாங்க. பல வருஷங்களுக்கு முன்னாடி சேலைங்கிறது ஆண்கள், பெண்கள்னு ரெண்டு பேரும் உடுத்தற உடையாதான் இருந்திருக்கு. ஆண்கள் வேட்டியைக்கூட சேலையோட ஒரு வடிவமாதான் பார்த்தாங்க. அதனாலதான் பாதி நாள் சேலையும் பாதி நாள் வேட்டியும் உடுத்தினாங்க. ஆனா காலப் போக்குல சேலை பெண்கள் உடையா மாறிடுச்சு. ஆண்களும் சேலை அணியலாம்னு சொல்லத்தான் நான் சேலை கட்டிக்கிறேன். சேலை உடுத்தறதால நான் யாருங்கிற கேள்வி மத்தவங்களுக்கு வர்றதும் சகஜம்தான். அவங்களுக்கெல்லாம் என்னோட பதில்...  நான் ஆம்பிளைதான்...'' 'அவனா நீ' கேள்விக்கு அதிரடியாக பதில் வைத்திருக்கிறார் ஹிமான்ஷு.

சேலைப் பாரம்பரியத்தைப் பிரபலப்படுத்துவதில் தீவிரமாக இருக்கும் ஹிமான்ஷுவின் இன்னொரு முயற்சி சேலைத் திருவிழா. ஒவ்வொரு வருடமும் ஒரு மாநிலத்தில் இதை நடத்துகிற ஹிமான்ஷு, இந்த வருடம் சென்னையில் நடத்தி கவனம் ஈர்த்தார்.

''சேலைங்கிறது பெண்களுக்கு மட்டுமானதில்லைங்கிறதைப் பிரகடனப்படுத்தறதுதான் இந்தத் திருவிழாவோட முக்கிய நோக்கம். 

சேலை உடுத்தறதைப் பிரபலப்படுத்தற விஷயங்களும் நடக்கும். சேலையை  வெறும் ஒரு உடையா பார்க்காம, அதை ஓவியம், நடனம், இலக்கியம்னு கலைகளோட தொடர்புப்படுத்திப் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியாகவும் இதை செய்யறோம். பல மாநிலங்களைச் சேர்ந்த சேலை வடிவமைப்பாளர்களும் நெசவாளர்களும் இதுல கலந்துப்பாங்க. விதம் விதமா சேலை உடுத்தறது எப்படிங்கிற வகுப்புகளும் நடக்கும்...'' சேலைத் திருவிழா பற்றிப் பேசுபவரிடம், கைத்தறி சேலை முதல் டிசைனர் சேலை வரை ஏகப்பட்ட கலெக்ஷன் உண்டு. ஒவ்வொரு சேலைக்கும் மேட்ச்சிங்கான ஷர்ட், பெல்ட் என அது தனி கலெக்ஷன்.

ஹிமான்ஷுவின் ஃபோட்டோக்களில் சிலதில் கிளீன் ஷேவ் லுக்கில், நீளமான திலகத்துடனும் சிரிக்கிறார். சிலதில் மழிக்கப்படாத மீசை, தாடியுடன் மிரட்டுகிறார்.

''அதெல்லாம் என் மூடைப் பொறுத்தது. சேலை கட்டினா பெண்மையோட நளினமாதான் தெரியணும்னு அவசியமில்லையே... ஆண்மையோடவும் அசத்தலாம்னு காட்டத்தான் அப்படியும் சில நாள் இருப்பேன்...'' என்கிறார்.

விசேஷ நாட்களில்.... விருப்பமான நாட்களில்.... சேலை உடுத்த ஏதுவான நாட்கள் என பெண்களுக்கே ஒரு கேலண்டர் இருக்கும். ஆனால் ஹிமான்ஷுவுக்கு தினமுமே சேலை தான் பிடித்த உடையாம். எப்போதாவதுதான் வேட்டிக்கும், பைஜாமாவுக்கும் மாறுவாராம். இவரது வார்ட்ரோபில் ஜீன்ஸுக்கு தடா.

''சேலை உடுத்தறதுக்குனு  நாளும் காரணமும் தேவையா என்ன? சேலை உடுத்தறதே ஒரு ஸ்பெஷல் கொண்டாட்டம்தானே...'' என்கிறார் இந்தப் புடவைக்காரர்.

- ஆர்.வைதேகி

எடிட்டர் சாய்ஸ்