Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“நாங்கள்லாம் தமிழ்நாட்டு அர்னால்டு ப்ரோ” - பெளன்சர்களின் பெர்சனல் பக்கங்கள்

பெளன்சர்

" 'என்னை அறிந்தால்' படம் ஈ.சி.ஆர்ல ஷூட்டிங். அதுல நான் ஒரு போலீஸ் வேடத்துல நடிச்சிருந்தேன். செம வெயில்... நாங்க எல்லாம் ஓரமா நின்னுட்டிருந்தோம். அப்போ தான் தல வந்தாரு... எங்களுக்குப் பக்கத்துல வந்து நின்னார். உடனே. கெளதம் சார் அவருக்கு குடை பிடிக்க ஆள் அனுப்பினாரு. ஆனால் தல...'இவங்கெல்லாம் அப்படியே தான் இருக்காங்க... என்னையும் அப்படியே விடுங்க பரவாயில்ல'ன்னு சொல்லிட்டு எங்கக் கூட வெயில்லயே நின்னாரு...பெரும்பாலும் அவர் ஷூட்ல சும்மா போய் உட்காரவே மாட்டாரு. அதே மாதிரி, கூட நடிக்குறவங்க  எல்லாரும் சாப்பிட்டாங்களாங்கறத உறுதிபடுத்திட்டுத் தான் நடிக்க வருவாரு... தல...தல தான்..." என்று அல்டிமேட் ஓப்பனிங் தருகிறார் ஆபு என்கிற ஆபிரஹாம். 

"தல கூட மட்டுமா தளபதியோட கூடத்தான் நடிச்சிருக்க..." என்று "குட்டி" ஜான் தொடங்க... " அப்படியா... தளபதியோடவும் ஒரு படமா? " என்று நாம் ஷாக்காக, " சார்... கத்தியில நம்மாளுதான் மாஸ் பெர்பாமன்ஸே... ஒரு சீன்ல விஜய் சில்லரைகள வச்சு சண்ட போடுவார். கரண்ட் ஆஃப் பண்ணி ஆன் பண்ணும் போது எல்லாரையும் காலி பண்ணுவாருல்ல... அப்போ கரண்ட் ஆஃப் பண்றதுக்கு முன்னாடி ஒரு ஃப்ரேம்ல நம்மாளு தெரிவாரு... இவன் அலப்பறை இருக்கே..." எனத் தொடங்கும் ஜானை டம்பிள்ஸ் எடுத்து அடிக்கத் துரத்துகிறார் ஆபு. அவர்களைத் தடுக்க ஓடும் ரவி, ராஜ்,செந்தில் என... அவர்கள் விளையாடுவதே 300 படக்காட்சி போல் இருக்கிறது. இவர்கள் அனைவருமே "ஸ்பார்டன்ஸ் வாரியர்ஸ்" குரூப்பின் பிரதான  பௌன்சர்ஸ்... 

கிரேக்கர்கள் காலத்தில் "ஒஸ்டியேரியஸ்" என்று இவர்களுக்குப் பெயர். சர்ச்சில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, பிரச்னைகள் ஏற்படுத்துபவர்களை அங்கிருந்து நீக்குவது என்பது இவர்களின் பிரதான வேலை. இதன் மாடர்ன் வெர்ஷன் தான் பௌன்சர்கள். அதுவும், சமீபகாலங்களில் பல்வேறு துறைகளில் பெளன்சர்களின் தேவை அதிகரித்திருக்கிறது. விஐபிகளுக்கு, அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு, பொது நிகழ்ச்சிகளுக்கு,ஹோட்டல் மற்றும் பப்களுக்கு, கோவில் திருவிழாக்களுக்கு என இவர்களின் தேவை எங்கும் இருக்கிறது. பெரும்பாலும், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என உடலை ஃபிட்டாக வைத்திருப்பவர்கள் இதில் பார்ட் டைம்மாக வேலை செய்கிறார்கள்.

"எங்களோட குழுவ பொறுத்தவரைக்கும் ஃபிட்னெஸ் ட்ரெய்னர், டெக்னீஷியன், அக்கவுண்டன்ட்ன்னு ஆளுக்கொரு வேலை பார்க்கிறோம். பெளன்சர்களாகப் போறது ஒரு பார்ட் டைம் வேலை மாதிரி தான். இதுல எங்களுக்கு ஒரு நாள் சம்பளமா ஆயிரத்துக்கும் குறைவாகத் தான் கிடைக்கும். ஆனா, எங்க உடம்ப பிட்டா மெயிண்டெயின் பண்ண, ஜிம்மிங், டயட் போன்ற விஷயங்களுக்கே எங்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை செலவாகும்... இருந்தாலும் இது எங்களுக்கான ஒரு அடையாளத்த, எங்க உடம்ப பிட்டா வச்சிருக்குறதுக்கான ஒரு அங்கீகாரத்த கொடுக்குது" என்று சொல்லும் ராஜ் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்து வருகிறார். 

"அதிக அலைச்சல், சரியான சாப்பாடு கிடைக்காது, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்போது ஏற்படும் பிரச்னைகள் என உடல் வலிமையோடு, மன வலிமையையும் அதிகம் சோதிக்குற ஒரு வேலை இது. பப்பில் இருக்கும்போது போதையாகி பலரும் பல பிரச்னைகளை இழுப்பார்கள், சில பெண்களிடம் தவறாக நடந்து கொள்வார்கள்... சமயங்களில் போதை தலைக்கேறிய நிலையில் சில பெண்கள் எங்களிடமே தவறாக நடந்துக் கொள்ள முயற்சிப்பாங்க... இதயெல்லாம் தடுக்க ஒரு பெளன்சருக்கான முக்கியத் தேவை ஒழுக்கம். ஒரு தடவை, தமிழ் சினிமாவோட முக்கிய ஹீரோ ஒருத்தர்... கூட்டத்த தடுக்கும்போது தெரியாமல் அவர் மீது என்னோட கை பட்ருச்சு. கோபமடைந்த அவர் என்னை பளார்னு அறைஞ்சுட்டார்...இப்படி நிறைய பிரச்னைகளை, சமயங்கள்ல அவமானங்களையும் கூட சந்திக்க வேண்டியிருக்கும்" என்கிறார் "பெரிய" ஜான்.

"பெரும்பாலும் நட்சத்திரங்களோடு தான் நாங்கள் அதிகம் இருப்போம். அவர்கள் எங்களைக் கண்டு செய்யும் ஒரு புன்னகை தான் எங்களுக்கான அதிகபட்ச அங்கீகாரம். "லிங்கா" பட வேலைகளின் போது எங்களின் சீனியர் பெளன்சர் ஒருத்தரை பார்த்து ரஜினி சார் கைகுலுக்கி நன்றி சொன்னார்... அப்புறம் வெளியில் போகும்போது எங்கள் உடலைப் பார்த்து சின்னக் குழந்தைகள்  எங்களை ஹீரோ மாதிரி பார்ப்பாங்க...இதெல்லாம் தான் எங்களின் சின்னச் சின்ன சந்தோஷங்கள்..." என்று சொல்லும் செந்தில் தனியாக ஒரு ஜிம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

"இது எதிர்காலத்துல ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலா மாறினா எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கும். இல்லாத பட்சத்துல, இத இதே மாதிரி தொடர்ந்து செஞ்சுட்டு வேற வேலைகளையும் செய்துட்டே இருப்போம். ஒரு 20 வருடங்கள் கழித்து வாழ்க்கைய திரும்பி பார்க்கும் போது மனசுல நல்ல அனுபவங்கள் நிறைஞ்சு இருக்கணும், அதே சமயத்துல எங்க உடம்பும் நல்ல தெம்பா இருக்கணும். ஏன்னா, எங்க உடம்பு தான் எங்களுக்கான அடையாளம், முதலீடு எல்லாமே..."  என்றபடியே உடற்பயிற்சிக்கு கிளம்பினார்கள். இவர்களின் முதலீடு நிச்சயம் பலமானது தான் !!!

- இரா. கலைச் செல்வன்
- ப.சரவணகுமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close