Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கங்கையை சிவன் சுத்தப்படுத்துகிறார் என்பதே என் ஓவியம் - அபிஷேக் சிங் #VikatanExclusive

அபிஷேக்

அபிஷேக் சிங்கின் ஆல்பம் காண இங்கே க்ளிக் செய்யவும்

" இந்த இவன் நானில்லை என்றால், நான் யார்?

 நான் பேசவில்லை என்றால், பேசுவது யார்?

 இந்த இவன் வெறும் அங்கி தான் என்றால்,

 பின்பு, நான் யாரைத் தான் உள்ளடக்கி உள்ளேன்? "

நீங்கள் யார் என்ற கேள்வியை நாம் தொடங்கும் போதே,  துருக்கி நாட்டைச் சேர்ந்த "இஸ்லாமிய"  கவிஞர் ஜலாலதின் ரூமியின் கவிதையை வாசித்துக் காட்டுகிறார், "இந்து"ப் புராணக் கதாபாத்திரங்களை தன் ஓவியங்களில் நிரப்பி வைத்திருக்கும் அபிஷேக் சிங். நம் பேனாவின் கேள்விகளுக்கு, அந்தத் தூரிகை பதில் சொல்லத் தொடங்கியது...

நீங்கள் யார் ? இன்று நீங்கள் அடைந்திருக்கும் இடத்தை எப்படி கைப்பற்றினீர்கள்?

" மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் வளர்ந்து வந்தேன். என் பாட்டியின் மூலம் சின்ன வயதிலிருந்தே கிராமிய, புராணக் கதைகளைக் கேட்டபடியும், காமிக் புத்தகங்களைப் பார்த்தபடியும் வளர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அந்த வடிவங்களின் மீது பெரும் காதல் கொண்டிருந்தேன்.  சுவற்றில் மணிக் கணக்கில் நான் வரைவதைப் பார்த்த என் அப்பா, ட்ராயிங் புத்தகத்தையும், ஸ்கெட்ச் பென்சில்களையும் வாங்கிக் கொடுத்தார். அன்று தொடங்கிய பயணம், இன்று வரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

நான் கைப்பற்றியுள்ள இந்த இடம்... இதை நான் பெற்றதாகவே நினைக்கிறேன். கைப்பற்றியுள்ளேன் என்றால், அதன் பொருள் நான் தொடர்ந்து கடுமையாக உழைத்தேன் என்பது தான்..."

இந்தக் கலையின் மீதான ஆர்வம் ஏற்பட்டது எப்படி? 

" குழந்தைப் பருவத்திலேயே என்னுடைய "உள்" உலகம் என்னைப் பெரிதும் ஈர்த்தது. பிறவியிலேயே நமக்குள் எழும் அந்த சுத்தமான உள்ளுணர்வுகள், என்னுடைய கலை வெறும் சில கோடுகளின் இணை மட்டுமேயில்லை என்பதை உணர்த்தியது. அதை நான் தொடர்ந்து செல்ல வேண்டுமென்பதையும் தீர்மானித்தேன். இடையில் மருத்துவராக, விளையாட்டு வீரனாக ஆக வேண்டும் என்ற எண்ணங்கள் வந்தாலும் வரைவதை நான் ஒருபோது நிறுத்தியதில்லை. 

சின்ன வயதில் என் விடுமுறை தினங்களில் ராஜ் காமிக்ஸில் பணிபுரியத் தொடங்கினேன். அங்கு பல சிறந்த கலைஞர்கள் வரையும் படங்களில் இருக்கும், பென்சில் கோடுகளை அழிக்கும் பணி எனக்கு . அதை உற்சாகமாக செய்து வந்தேன். காரணம் அந்த அற்புத கலைஞர்களின் படங்களைக் காண எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை என் வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்து இது தொடர்பான படிப்புகளைப் படித்தேன். இதையெல்லாம் முடித்த பின்பு எனக்குள் ஒரு பெரும் கேள்வி எழுந்தது. என் படைப்புகளில் எங்கிருக்கிறது இந்தியத் தன்மை?...

இதற்கான விடை காண பயணிக்கத் தொடங்கினேன். பயணங்களின் வழி நிறையக் கதைகள் கிடைத்தன. நிறைய ஆராய்வுகளை மேற்கொண்டேன். சமூக, கலாச்சார வழிகளைப் படித்தேன். கடுமையான, வாழ்வின் வலியான உண்மைகளையும் உணர்ந்தேன். இதன் காரணமாகத் தான் என் படைப்புகள் பெரும்பாலும் அண்டவெளியைப் பொருளாகக் கொண்டிருந்தாலும், எளிய மனிதர்களின் போராட்டங்களையும் உள்ளடக்கியே இருக்கின்றன." 

காமிக்ஸிற்கும், கிராஃபிக் நாவலுக்குமான வித்தியாசம் என்ன ?

" இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றே நினைக்கிறேன் . 1978யில் வில் எய்னர் (Will Eisner) என்ற கலைஞர் கருப்பு, வெள்ளையில் நம் அன்றாட வாழ்வின் விஷயங்களை காமிக் கதையாகக் கொண்டு வந்தார். அதிலிருந்து தான் "கிராஃபிக் நாவல்" என்ற வார்த்தை பிரபலமானது. மேலும், காமிக்ஸ் மாதத்திற்கொரு முறை என்ற கால அளவைப் பின்பற்றுகிறது. கிராஃபிக் நாவலுக்கு அது கிடையாது. அதை உருவாக்க கலைஞர்கள் வருடக் கணக்கில் வேலை செய்வார்கள்."

இந்தியப் புராணங்கள் குறித்து நிறைய ஆராய்வுகளை மேற்கொண்டுள்ளீர்கள். இது உங்கள் பணியின் காரணமாகவா அல்லது இதன் மீதான ஆர்வம் தான் உங்களின் படைப்பில் வெளிப்படுகிறதா?

" இந்தக் கதைகளைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ள கலை வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதே சமயத்தில் யாரும் சொல்லியிராத, எங்கும் கண்டிராத சில பார்வைகளை கலை வெளிப்படுத்தும். அது அந்தக் கலைஞனின் உணர்வில் இருந்து உருவாகுபவை"

இந்துப் புராணங்கள் குறித்தும் இன்றைய இந்து நம்பிக்கைகள் குறித்தும் உங்கள் பார்வை என்ன?

" இது ஒரு மிகப் பெரிய கேள்வி. எளிமையாக சொல்ல முயற்சிக்கிறேன். முதலில், இதில் எனக்கு மிகப் பிடித்த ஓர் விஷயம், இயற்கையை வழிபடுதல். ஆறுகளையும், மலைகளையும், காடுகளையும் தெய்வமாக வழிபடுகிறோம். நம் தெய்வங்கள் பல அழகான மிருகங்களில் பயணிக்கிறார்கள். 

எனக்குப் பிடிக்காத ஓர் விஷயம்... நாம் வழிபடும் கடவுளையே நாம் அசுத்தப்படுத்துவது தான். கங்கை ஆற்றை, கங்கைத் தாயாக வழிபடுவோம் அதே சமயத்தில் அந்த ஆற்றை நம்மால் முடிந்தவரை அசுத்தப்படுத்துவிட்டுத் தான் நகர்வோம். இந்த இடைவெளியைத் தான் கலையால் மாற்ற முடியுமென்று நான் நம்புகிறேன். வாரணாசியில் கங்கையின் அருகிலேயே, சிவன் விஷத்தைக் குடிப்பது போன்ற ஓவியத்தை வரைந்தேன். கங்கையை சுத்தப்படுத்துவது எவ்வளவு முக்கியமென்பதை அதில் சுட்டிக் காட்டியிருந்தேன். அங்கு வந்தவர்களின் மனங்களில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது."

உங்களின் எதிர்காலத் திட்டங்கள்?

" ஒரு அனிமேஷன் படத்தை இயக்குகிறேன். இது என் பல நாள் கனவு. இப்போதைக்கு தொடக்க நிலையில் தான் இருக்கிறது."

வரைகலைப் பார்வையில் எந்தக் கடவுள் அழகாக இருக்கிறார்?

" என்னைப் பொறுத்தவரை எல்லா கடவுள்களுமே அழகு தான் " என்று சொல்லி சிரிக்கிறார் . அவர் பின்னணியில் கருப்பு - வெள்ளை காளியின் படம் ஒன்று இருக்கிறது. பென்சில் கோடுகளால் ஆன ஒரு ஓவியம். அந்தக் கோடுகள் பல கதைகள் பேசுகின்றன... சிங்கம் கம்பீரமாய், கோபமாய் சீறுகிறது. காளியின் கையிலிருக்கும் வாளும் கூட அந்தக் கோபத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்துகிறது. இதையெல்லாம் கடந்து காளியின் முகத்தில் அப்படியொரு அமைதி தெரிகிறது... இப்பொழுது அபிஷேக் சிங்கின் அந்த சுருள் முடியும் கூட கோட்டோவியமாகத் தெரிகிறது. 

அபிஷேக் சிங்கின் ஆல்பம் காண இங்கே க்ளிக் செய்யவும்

-கார்க்கிபவா, இரா.கலைச்செல்வன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close