Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாணி ஜெயராமின் இந்த க்ளாஸிக்குகளை கேட்டிருக்கிறீர்களா? #HBDvanijayaram

வாணி ஜெயராம்

பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்தவர் இவர். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வேலூரில் பிறந்து வளர்ந்த இவர், வேலை பார்த்தது வங்கி ஊழியராக... வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்ற இவரது திறமையை அடையாளம் கண்டு கொண்டது ஹிந்தி திரையுலகம். பின்பு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி,மராத்தி, ஒடியா என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பாடிய பல மொழிகளில் அம்மாநிலத்தின்  உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார்.

கிராமிய பாடலாக இருந்தாலும் சரி, கர்நாடக பாடலாக இருந்தாலும் சரி, பாடலின் நயங்களால் மக்களை அந்த இடத்திலிருந்தே உணர வைப்பதில் வல்லவர். தமிழக இசை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர். காதல் பாடலாக இருந்தாலும், பெண்களின் மனதை வெளிப்படுத்தும் பாடலாக இருந்தாலும் , டூயட்  பாடலாக இருந்தாலும், அந்த காதாபாத்திரமாகவே மாறி பாடக்கூடியவர். இந்நாளில் அவருடைய  சிறந்த பாடல்கள்  சிலவற்றை பார்ப்போம்.

நித்தம் நித்தம் நெல்லு சோறு!

 

தமிழ் ரசிகர்களால் மறக்கவே முடியாத பாடல் இது. பாடல் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை அப்படியே ஒரு கிராமத்து பெண் பாடுவது போலவே பாடி  முடித்திருப்பார். இந்தப்பாடலை கேட்டு முடித்த பிறகும்  அதிலிருந்து மீண்டு வர சில நேரம் ஆகும். அப்படியான  இசையும், குரலும், வரிகளும் பின்னிப் பிணைந்து இருக்கும். 

"பச்சரிசி சோறு.. உப்பு கருவாடு...

சின்னமனூரு வாய்க்கா செலு கொண்ட மீனு

குருத்தான மொல கீற வாடாத சிறு கீற

நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது

அள்ளி தின்ன ஆச வந்து என்னை மீறுது"

என இளையராஜாவின் இசையில்,  கங்கை அமரனின் வரிகளில் மனதை மயக்கும் பாடல் இதோ!

 

மல்லிகை என் மன்னன் மயங்கும்....

 

 

 

கணவனுக்கு பிடித்த மல்லிகை பூவை சூடிக்கொள்ளவா ? என மனைவி கேட்டு பாடும்  பாடல் இது.

"குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி

கொஞ்சிப்  பேசியே அன்பை பாராட்டுது

என் கண்ணன் துஞ்சத்தான்

என் நெஞ்சம் மஞ்சம் தான்

கையோடு நான் அள்ளவோ"

என மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் கவிஞர் வாலி எழுதிய பெண்களின் மனம் கவர்ந்த பாடல் இதோ!

 

என்னுள்ளில்  எங்கோ ஏங்கும் ஜீவன்...

 

 

ஒரு பெண் காதல் வயப்படும்போது உணரும் உணர்ச்சிகளை குரலிலேயே தந்து அசத்தியிருப்பர் வாணி ஜெயராம். ரோசப்பூ  ரவிக்கைக்காரி படத்தில் வரும் இப்பாடல்  காட்சிக்கு பின்னே ஓடும். ஆனால்  கதாநாயகியின் உணர்ச்சிகளை பாட்டு வெளிப்படுத்தும்.

"என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம்

ஏன் கேட்கிறது ஏன் கேட்கிறது

ஆனால் அதுவும் ஆனந்தம்"

என தொடங்கும் இப்பாடல் கவிஞர் புலமைப்பித்தன் எழுதி இசைஞானி இளையராஜா இசையமைத்ததாகும்.

 

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!

 

 

வாணி ஜெயராம் அவர்கள்,  இந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். அபூர்வ ராகங்கள் படத்தின் டைட்டில் சாங் இது. இந்த பாடல் தவிர்த்து, கேள்வியின் நாயகனே பாடலும் வாணி ஜெயராம் பாடியதுதான். படத்தின் முதல் பாடலையும்  இறுதிப் பாடலையும் வாணி ஜெயராமிடம் இயக்குநர் ஒப்படைத்திருக்கிறார் என்றால் பாருங்கள், அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் அளவுகோலை!  இந்த பாடலை  தத்துவப் பாடல் என்றே  சொல்லலாம். கவிஞர் கண்ணதாசனின்,

"ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்

பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்"

என்ற வரிகளில், எம்.எஸ்.விசுவநாதன் இசையில் அந்த பாடல் இதோ!

 

என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்!

 

 

 

காதலனை பார்த்து உருகி பாடும் பாடல் இது. காதலை கூறும்போது வெட்கத்துடன் நளினத்துடன் கூறுகிறாள் இந்த நங்கை. அது வேறு யாருமல்ல நம் பாடகி தான்.

"உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்

உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ

சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு

மாலையும் அதிகாலையும் நல்ல சஙீதம் தான்………"

என இளையராஜாவின் இசையில்  நனைந்திட அப்பாடல்  இதோ!

 

வேறு இடம் தேடி போவாளோ?

 

 

பாடல்களில் பல்வேறு உணர்ச்சிகளை கொடுப்பவர் வாணி ஜெயராம்  என்று முன்பே கூறியதற்கு உதாரணம் இப்பாடல். இயலாமையில், வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் பெண்ணின் மனக்குரலை பதிவு  செய்திருக்கிறார். உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் மனதை கணமாக்கும்.

"சிறு  வயதில் செய்த பிழை

சிலுவையென சுமக்கின்றாள்

இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ

மலரெனவே முகிழ்ப்பாளோ"

என்ற ஜெயகாந்தனின்  கனத்த வரிகளோடு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அந்த பாடல் இதோ!

தனிப்பாடல்கள் தவிர டூயட் பாடல்களை முன்னணி பாடகர்களோடு பாடியிருக்கிறார். "ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்", "பாரதி கண்ணம்மா", "பூந்தென்றலே...", "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்" என இவர் பாடிய ஒவ்வொன்றும் முத்து முத்தனாவை. இவ்வளவு சிறந்த பாடல்கள் பலவற்றை கொடுத்த வாணி ஜெயராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

அ .அருணசுபா  

மாணவ பத்திரிகையாளர் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close