Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

35 ஆண்டுகளில் 115 நாவல்கள்... தமிழின் முதல் பெண் நாவலாசிரியர் வை.மு.கோதைநாயகி! #BirthdayMemories

பெண் நாவலாசிரியர்

மிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முதல் நாவலை எழுதியவர், வை.மு.கோதைநாயகி. அறியாத வயதில், பால்ய விவாகம் என்னும் குழந்தைத் திருமணக்  கொடுமைக்கு  ஆளானவர். 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று தடை விதித்த காலம் என்பதால், பள்ளிக்கூடம்  போகவில்லை. பெண் குழந்தைகளுக்கு விதிக்கப்பட்டு வந்த சமூகக் கொடுமைகளைத் தானும் அனுபவித்தலாலோ என்னவோ, பல கட்டுப்பாடுகளை  உடைத்தெறியும் வல்லமை கொண்டிருந்தார். சுதந்திரமாக கருத்துகளை வெளியிட மேடைகளையும், செய்தி ஏடுகளையும் களமாகப் பயன்படுத்திக்கொண்டவர். சமூக அக்கறையும் தேசப்பற்றும் கொண்டிருந்தார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றைத் தானே நடத்தியவர். 35 ஆண்டுகளில் 115 நாவல்களை எழுதியவர், கவிஞர், பாடகி எனப் பன்முகத்  திறமைகொண்ட சமூகப் புரட்சி வீராங்கனை, வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீர்வளூர்  என்னும் கிராமத்தில் , 1901-ம் ஆண்டு, டிசம்பர் 1-ல் பிறந்தார். எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும், தன் சிறுவயதுத் தோழிகளுக்குக்  கற்பனையாகவே பல கதைகளைச்  சொல்லி வந்தார். இவர் கதை சொல்லும் அழகில், குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் மயங்கினார்கள். கதை  கேட்கும் ரசிகர்கள் நாளுக்கு நாள் பெருகினார்கள். படித்தவர்களுக்கே  கடினமான தமிழ் உரைநடை, இவர் பேச்சில் கற்கண்டானது.

இவர் சொல்லச் சொல்ல தன் தோழி பட்டம்மாள் எழுதித் தந்த நாவல்தான், 'இந்திர மோகனா'. இவரது மேடைப்பேச்சும்  நாடகப் பிரசங்கங்களும் பலரை எரிச்சலூட்டியதால், எதிர்ப்பு விமர்சனங்கள்  எழுந்தன. அவற்றுக்கெல்லாம் அஞ்சாத கோதை, தன் பணிகளைத் தீவிரப்படுத்தினார். அப்போது, நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்த 'ஜகன் மோகினி' என்ற பத்திரிகையை வாங்கி, தன் கணவரின் உதவியோடு நடத்தி, அதைத்  தமிழகத்தின் முன்னணிப் பத்திரிகையாக்கினார். இவரது முதல் நாவலான 'வைதேகி' என்னும் துப்பறியும் நாவலைத் தொடராக எழுதிப்  புகழ்பெற்றார். தமிழகம் எங்கும்  பத்திரிகை படிப்போரின் நெஞ்சங்களில் நின்றார். கதை மூலமும் மேடைப் பேச்சின் மூலமும் இவர் விதைத்த  கருத்துகள், இருண்ட பெண் மனங்களில்  வெளிச்சம் பாய்ச்சியது.

நாவலாசிரியர்

மேடைப் பேச்சு வேறாகவும் வாழ்க்கையில் வேறாகவும் வாழ்ந்தவரில்லை கோதை. இவர் எழுத்துக்கு ஒரு நூற்றாண்டே பெருமைப்பட்டது. ராஜாஜியின் தலைமையில் நடந்த கூட்டம் ஒன்றில் கோதை பேசியதைக் கேட்ட ராஜாஜி,  தான் பேசும் கூட்டங்களிலெல்லாம் கோதையைப் பேசச் சொன்னார்.

இவர், சில அபூர்வ ராகங்களில் இயற்றிய கிருதிகள், பின்னர் ' இசை மார்க்கம் 'என்ற புத்தகமாக வெளி வந்தது. 1948-ல்  சென்னை, திருவல்லிக்கேணியில் இவர் நிறுவிய மகாத்மாஜி சேவா சங்கத்தின் மூலம், பெண்  குழந்தைகளுக்கு உதவும் பல கலைகள் கற்றுத் தரப்பட்டன.  'ராஜ்மோகன்,' 'அனாதைப் பெண்' ,'தயாநிதி ' ஆகிய இவரது நாவல்கள் திரைப்படங்களாக  வெளிவந்தன. பத்மினி நடித்த 'சித்தி' படம் ஆறுவிருதுகளைப் பெற்றது. அதில் சிறந்த கதையாசிரியர் விருதை, கோதை பெற்றார்.

 பெண் விடுதலை, தேசபக்தி, மதுவிலக்கு, விதவை திருமணம், மத ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்திப் பேசின  இவரது நாவல்கள்.

சுதந்திரத்துக்காக பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றுள்ளார். 1932-ல் வேலூர்  சிறையில் இருந்தபோது, சிறைக்கைதிகளை வன்முறையிலிருந்து திசை திருப்பி, காந்தியப்பாதைக்குக் கொண்டுவர முயற்சிசெய்து, அதிலும் வெற்றிகண்டார். சிறையில் இருந்த நாட்களில் எழுதியதுதான், ‘சோதனையின் கொடுமை’ என்ற நாவல்.

எழுத்திலும் இசையிலும்  புகழ்பெற்ற கோதை நாயகி, இளம் வயதில் இறந்த தன் மகனின் இழப்பினால் மனம்  உடைந்ததனால்...  20.02.1960-ல்  இறந்தார். பத்திரிகை உலகமும் திரையுலகமும் என்றென்றும் நினைவில்கொள்ளவேண்டிய கோதையை வரலாறு பேசிக்கொண்டிருக்கும்.

- கே.ஆர்.ராஜமாணிக்கம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close