Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா இருவரின் கார் என்ன... எவ்வளவு விலை வித்தியாசம் தெரியுமா? #OPSvsSasikala #VikatanExclusive

இப்போதைக்கு ஓபிஎஸ்-ஸும், விகேஎஸ்-ஸும்தான் (அதாங்க.. வி.கே. சசிகலா) ட்ரெண்ட்! இந்த நேரத்தில் ரஜினியின் ‘எந்திரன் 2.0’ படம் டீஸர் ரிலீஸானால்கூட நெட்டில் வைரல் ஆகாதுபோல! 

 

சசிகலா கார்

சிரித்துக் கொண்டே இருக்கிறார்; பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்; எளிமையாக இருக்கிறார் என்று முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தைப் பற்றி பாஸிட்டிவ் கமென்ட்கள் வருவதுபோல், கார் விஷயத்திலும் எளிமையாகவே இருக்கிறார் ஓபிஎஸ். சாதாரண கவுன்சிலர்களெல்லாம் படா படா ஃபார்ச்சூனர், எண்டேவர் கார்களில் வரும்போது, இனோவா கிரிஸ்டாவைப் பயன்படுத்துகிறார் ஓ. பன்னீர் செல்வம். 

இந்த இனோவா, ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக இருந்தபோது வாங்கியது. ஜெயலலிதா ஆவடிக்கு வருகிறார் என்றால், அடையாறில் இருந்தே கான்வாய் கார்கள் ஊர்வலமாக வர ஆரம்பித்துவிடும். ஓ. பன்னீர் செல்வத்தின் இனோவாவைச் சுற்றி, சொற்பமான கார்கள் மட்டுமே கான்வாயாக வர, ஆளுநரைச் சந்தித்து விட்டு வந்தார். 

 

சசிகலா கார்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இதற்கு நேர்மாறு; தாறுமாறு! ஜெயலலிதா போலவே கைகூப்பி, ஜெ. போலவே சேலை உடுத்தி, ஜெ.போலவே கையசைத்து என்று முழுசாக ஜெயலலிதாவாகவே மாறிவிட்ட சசிகலாவின் நடவடிக்கைகள் நாமறிந்ததே! ஜெ. இறந்த பிறகு போயஸ் கார்டனில் ஆஃப் ஆகிக் கிடந்த அவரின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிரேடோ கார், இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்து ‘வ்வ்ர்ர்ரூம்’ என மெரீனா பீச் போகிறது; ஆளுநரைச் சந்தித்துவிட்டு வருகிறது; மன்னார்குடி செல்கிறது.

7 சீட்டர் காரான இதில், தனது தோழி உயிருடன் இருந்தபோது பின் பக்க சீட்டில் பவ்யமாக அமர்ந்து வந்த சசிகலா, இப்போது ஜெயலலிதா அமர்ந்த அதே முன் சீட்டில், மக்களுக்கு... ஸாரி.. தொண்டர்களுக்கு... ஸாரி... அமைச்சர்களுக்குக் கைகாட்டியபடி முழு சந்திரமுகியாகவே மாறிவிட்டார். ஜெ.வின் பொதுச் செயலாளர் பதவி, முதல்வர் பதவி, போயஸ் கார்டன், கொடநாடு என்று எல்லாம் தனக்குத்தான் என்று இருக்கும் சசிகலா வசம்தான்... ஜெ.வின் பிரேடோ காரும்!

இரவு 7.30 மணிக்கு ஜெ.வின் அதே லேண்ட்க்ரூஸர் பிரேடோவில் ஆளுநரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் சசிகலா. இனிமேல் பொதுப் பிரச்சாரங்கள் மற்றும் கட்சிப் பணிகளுக்கும் (!?) இதே பிராடோதான் பலிகடா! சரி; இந்த காரின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு சின்ன ட்ரெய்லர்!

* கம்பீரம்தான் இந்த லேண்ட்க்ரூஸர் பிரேடோ காரின் ப்ளஸ். சண்டைக்குத் தயாராகும் WWF வீரனைப்போல் புஜபல பராக்கிரமசாலி போலவே இருக்கும் இந்த டிஸைன் ஜெயலலிதாவுக்கு ரொம்பவும் பிடித்துப்போய் விட்டதாம். ‘கொழுக் மொழுக்’ டிஸைனில் இருக்கும் செடான் கார்களைவிட, ரஃப் அண்ட் டஃப்பான எஸ்யூவிக்கள்தான் ஜெ.வின் ஃபேவரைட். அவரின் கம்பீரமான தோற்றத்துக்காகவே இந்த கம்பீரமான கார் செலெக்ட் செய்யப்பட்டதாம்.

 

ஜெயலலிதா கார் சசிகலா வசம்

 

* இதன் கட்டுமானம், நிச்சயம் வேறு எந்த கார்களிலும் இல்லாதது. ஹோட்டல்களில் உயர்தர சைவம்/அசைவம் எப்படியோ, அதேபோல் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது அனைத்தும் உயர்தர உலோகம். ஹம்மர் போன்ற கார்களில் இருப்பதுபோன்ற கட்டுறுதியான லேடர் சேஸி ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கிறது பிராடோ. கிட்டத்தட்ட 2990 கிலோ (கிராஸ்) எடை கொண்ட இதை வைத்து, லாரியையே நெட்டித் தள்ளும் அளவுக்கு இதன் பில்டு குவாலிட்டி அத்தனை ஸ்ட்ராங். 

* ஏற்கெனவே இந்த காரில் மிக்ஸி, கிரைண்டர் தவிர அத்தனை வசதிகளும் உண்டு. இது முதல்வரின் கார் என்பதால், எக்ஸ்ட்ராவாக புல்லட் புரூஃப் கண்ணாடியும் பாடி பேனலும் பொருத்தப்பட்டு பீரங்கிபோல் வடிவமைத்திருக்கிறார்கள். மேலும் இந்த காரில் அடிப்படைப் பாதுகாப்பு வசதிகளான ABS, டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், (மலை ஏற்றத்தில் கார் கீழே இறங்காமல் அப்படியே நிற்கும்) 7 காற்றுப் பைகள், ESP போன்றவை கொண்ட இது, 4 வீல் டிரைவ் கார். 4 வீல்களுக்கும் பவர் கொப்புளிக்கும் இந்த காரில் மலையேறுவது, சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆவது மாதிரி ரொம்ப ஈஸி.

* 3000 சிசியும், 4 சிலிண்டரும் கொண்ட காரான இதில் 171bhp பவர், 41kgm டார்க், 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ், (காரின் அடிப்பாகத்துக்கும் தரைக்கும் உண்டான இடைவெளி) 220 மிமீ. மேடு பள்ளங்கள், ஸ்பீடு பிரேக்கர்களில் கார் தட்டுவதெல்லாம்... சான்ஸே இல்லை!

* எஸ்யூவிக்கள் உயரமாக இருக்கும் என்பதால், ஏறி இறங்க வசதியாக காரின் பக்கவாட்டில் ஃபுட் கிளாடிங் இருக்கும். இது முன்னாள் முதலமைச்சர் காராச்சே! பல பவுன்சர்கள் ஏறி நின்றாலும் தாங்கும் வண்ணம் ரயிலில் இருப்பதுபோல் ஸ்ட்ராங்கான ஃபுட் கிளாடிங் இதில் இருக்கிறது. இதில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி ஏந்தி நின்று கொண்டே பயணிக்கும் வண்ணம் அகலமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஃபுட் கிளாடிங்ஸ்.

* இந்த காரின் டீசல் டேங்க் கொள்ளளவு 87 லிட்டர் . இதன் மைலேஜ், லிட்டருக்கு கிட்டத்தட்ட 3.5 முதல் 4 கி.மீதான். 

* வாயை மூடிக் கேட்கவும். இந்த காரின் ஆன்ரோடு விலை 1.25 கோடி ரூபாய். பாதுகாப்புச் செலவுகளுக்காக கூடுதலாக  ஜஸ்ட் 1 கோடி ஆகியிருக்கும்.  ஆக மொத்தம் தோராயமாக ரெண்டே கால் கோடியைத் தொட்டிருக்கும். சரி... இந்நேரம் ஓ. பன்னீர்செல்வத்தின் இனோவா கிரிஸ்டா விலையை  கூகுள் பண்ணியிருப்பீர்கள். 27 லட்சம்!   

- தமிழ்,
படங்கள்: மீ.நிவேதன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close