Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிலநடுக்கங்களுக்கு காரணம் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்தான்... தடை செய்த அமெரிக்க மாகாணங்கள்!

ஹைட்ராலிக்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டே வருகின்றன. விவசாய நிலங்களை அழிக்கும் என்பதும், இயற்கைக்கு ஆபத்துகள் விளைவிக்கும் என்பதும் இதில் முக்கியமான இரண்டு பிரச்னைகளாக சொல்லப்படுகின்றன. இதில், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நாட்டின் வளர்ச்சிக்கான தியாகமாக இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் முன் வைக்கிறார்கள். ஆனால், இதனால் ஏற்படும் ஆபத்துகளை அவர்களால் மறைக்க முடியவில்லை. தவறான பிரசாரங்களால் இதனை சரிக்கட்ட முயற்சி செய்கிறார்கள். 

மீத்தேன், கெயில், ஷேல் கேஸ் என விதவிதமான பெயர்களில் நெடுவாசல் பகுதியில் இயற்கை வாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முனைகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் இயற்கை வாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டம் இருப்பதாகவும், ஆனால் தமிழகம் மட்டுமே பலி கொடுக்கப்படுவதாக தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் ஆளுங்கட்சியின் பிராசார பீரங்கிகள் சொல்லி வருகிறார்கள். உண்மையில், நெடுவாசலில் இருந்துதான் ஆப்ரேஷனை ஆரம்பிக்கிறது மத்திய அரசு. அதனால் இங்கே எதிர்ப்பு வலுவாக இருக்கிறது.

 

 

இத்திட்டத்தில் முக்கிய பிரச்னையாக ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையை கைகாட்டுகிறார்கள் வல்லுநர்கள். உடனே, இதற்கு பதிலாக மீத்தேன் திட்டத்தில் தான் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் உண்டு. ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங்குக்கு இடமே இல்லை என பதில் சொல்லி வருகிறார்கள் இத்திட்டத்தை ஆதரிப்போர். ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங்கால் நிலநடுக்கம் வருவதற்கும் வாய்ப்பு உண்டு என்றதற்கு ஆதாரங்கள் இல்லையெனவும் சொல்லி வருகிறார்கள். எந்த வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், பல ஆண்டுகளாக இத்திட்டத்தை சிறுக சிறுக வளர்த்து வருகிறது அரசு.

ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையை தடை செய்திருக்கின்றன என்பதுதான் உண்மை. ஓக்லஹாமா, நியூயார்க் போன்ற அமெரிக்க மாகாணங்கள் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறைக்கு தடை விதித்திருக்கின்றன. அந்தத் தடைக்கான காரணம் என்ன தெரியுமா? அந்தப் பகுதிகளில் வந்த நில நடுக்கங்கள்.

2016ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கேன்ஸஸ், ஓக்லஹாமா உள்ளிட்ட பல பகுதிகள் நிலநடுக்கங்களை சந்தித்தன. அதற்கான காரணங்களை ஆராய்ந்த குழு, இயற்கை வாயு எடுக்க ட்ரில்லிங் செய்ததும், ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையும் தான் காரணம் என அறிக்கை தந்தது. அதன் அடிப்படையில் ஓக்லஹாமா மாகாணத்தில் இயங்கி வந்த 37 எண்ணெய் கிணறுகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த 37 கிணறுகளிலும் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மத்திய மற்று கிழக்குப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் அதிகரித்திருக்கின்றன. 1970 முதல் 2000 வரை ஆண்டொன்றுக்கு 20 சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியிருக்கின்றன. 2010-2013 வரை எடுத்த அறிக்கையில் அந்த சராசரி 100ஐ தாண்டியிருக்கிறது. இதற்கு காரணங்களை ஆராய்ந்த இன்னொரு குழுவும் கைகாட்டியிருப்பது இயற்கை வாயு கிணறுகளைதான்.

நெடுவாசலில் எடுக்க திட்டமிட்டிருப்பது ஹைட்ரோ கார்பனோ, மீத்தேனோ.. அவை இயற்கை வாயுதான். அதற்கு இவர்கள் பயன்படுத்தப் போவதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பின்பற்றும் முறைகளைதான். அதில் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையும் அடங்கும். இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் ஒன்றை மக்கள் அதிகம் வாழும் பகுதியில் செயல்படுத்த முனையும் அரசு, அது பற்றிய உள்ளூர் மக்களின் கருத்தை கேட்க வேண்டும். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாதான் என்கிறார்கள். அது உண்மையா?

- கார்க்கிபவா

ஓவியம்: ஹாசிப் கான்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close