Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேலியோ பற்றிய உண்மைகளை அடுக்கும் நியாண்டர்தல் ஆராய்ச்சி!

மனிதனைப் போல இருப்பார்கள். ஆனால், மனிதர்களில்லை. குரங்கைப் போலவும் தெரிவார்கள். ஆனால், குரங்குமில்லை. உயரம் அதிகபட்சம் ஐந்தடி. அந்த முகம், அதை எப்படி வர்ணிப்பது... எந்த இலக்கணமும் அல்லாமல் சீரற்று, பரட்டைத் தலை, எல்லா பக்கங்களிலும் பறந்து கிடக்கும் தாடி, சற்றே பெரிய மூக்கு, உறுதியான முகத்தின் எலும்புகள் தோலோடு நெருக்கமாக ஒட்டிக் கொண்டிருப்பது, அந்த முகத்தைக் கொஞ்சம் கடுமையாக வெளிக்காட்டும். உறுதியான, மிக உறுதியான உடற்கட்டு. இன்னும்கூட வர்ணிக்கலாம்தான். ஆனால், எதுவும்100 சதவிகிதம் உண்மையாகிவிடாது. நான் சொல்வது, 'நியாண்டர்தல்' என்ற இனத்தைப் பற்றி. 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் அவதரித்து, 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முற்றிலுமாக அழிந்துபோனவர்கள். நியாண்டர்தல்களுக்கும், மனிதர்களாகிய நமக்கும் விதை, ஒரே மூதாதைய இனம்தான் என்று சொல்லப்படுகிறது. 

நியாண்டர்தல் குகை மனிதன்

நியாண்டர்தல்களின் எலும்புகள், முதன்முதலாக ஜெர்மனியிலிருக்கும் ஒரு குகையில் 1856-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. இதுவரை பலகட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தாலும், சமீபத்தில் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் லாரா வேரிச் மேற்கொண்ட ஆராய்ச்சி, பல புதிய விஷயங்களைக்  கண்டுபிடித்துள்ளது. பெல்ஜியம் நாட்டின் ஸ்பை குகையிலிருந்து ஒரு மண்டை ஓடும், ஸ்பெயினின் எல் சிட்ரன் குகையிலிருந்து 2 மண்டை ஓடும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. லாராவின் ஆராய்ச்சி, அவர்களின் பற்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. 

நியாண்டர்தல் குகை மனிதன் ஆராய்ச்சிநியாண்டர்தல்கள், குகைகளில் வாழ்ந்த இனம். முழுக்க முழுக்க விலங்குகளை வேட்டையாடி, மாமிசங்கள் மட்டுமே உண்டு வாழ்ந்த இனமாகவே பதியப்பட்டிருந்தது. இந்தக் குகை மனிதர்களின் உணவுப் பழக்கங்களின் அடிப்படைதான் இன்றைய 'பேலியோ டயட்' . ஆனால், இதற்கெல்லாம் மாறாக நியாண்டர்தல்களில் ஒரு பகுதியினர் சுத்த சைவர்களாக இருந்த ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. 
ஸ்பெயினில் கிடைத்த மண்டை ஓட்டிலிருந்த பற்களை ஆராய்ந்ததில், அவர்கள் மாமிசம் சாப்பிட்டதற்கான எந்தவொரு அறிகுறியுமே இல்லை. மாறாக, தேவதாரு கொட்டை (Pine Nuts), பாசிகள், மரப் பட்டைகள், காளான்கள் போன்றவற்றையே சாப்பிட்டு சுத்த சைவர்களாக இருந்துள்ளனர். அசைவம் சாப்பிட்ட பெல்ஜியம் குகையைச் சேர்ந்தவர்களும்கூட அதிக அளவிலான சைவ உணவுகளை எடுத்திருக்கிறார்கள் என்பதைப் பற்களிலிருந்த உணவுத் துகள்களைக்கொண்டு கண்டறிந்துள்ளனர். 

'பேலியோ' என்றாலே, அசைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவது. கற்கால மனிதர்களின் உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது என்ற புரிதலில் ஒரு கூட்டம் பேலியோவைப் பின்பற்றுகிறது. ஆனால், அது முழுக்கவே தவறானது என்று தன் ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவித்துள்ளார் லாரா வேரிச்.

"இருக்கும் இடத்தில், கிடைக்கும் உணவை உண்பதுதான் நியாண்டர்தல்களின் வழக்கமாக இருந்துள்ளது. அவர்களிடமிருந்துதான் மனிதர்களுக்கும் அந்தப் பழக்கம் வந்திருக்க வேண்டும்.  சூழலுக்கு ஏற்ற உணவுகளைச் சாப்பிட்டதால்தான் பல கண்டங்கள் கடந்தும், பல்லாயிரம் ஆண்டுகளாய் மனித இனம் வளர்ச்சிகண்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

நியாண்டர்தல் குகை மனிதன்

நியாண்டர்தல்கள், குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடைபட்டவர்கள் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. ஆனால், உண்மை என்னவெனில்... மனிதர்களைப் போல நியாண்டர்தல்களும் ஒரு இனம். மனிதர்களுக்கும் நியாண்டர்தல்களுக்கும் இடையே இருந்த உறவுகள் குறித்தும் இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 

நியாண்டர்தல்களும்  மனிதர்களும் உடல்உறவு கொண்டார்கள். இரு இனங்களும் சேர்ந்து கலப்பினங்களை உருவாக்கியது என்பதற்கான எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. இன்றைய மனிதர்களின் 'டிஎன்ஏ'-க்களில்கூட 20% அளவுக்கான நியாண்டர்தல் ஒற்றுமை இருக்கிறது. மேலும், நியாண்டர்தல்கள் என்றாலே, 'காட்டுமிராண்டித்தனம்' என்ற பிம்பமே முன் நிற்கும். ஆனால், அதையெல்லாம்கூட இந்த ஆராய்ச்சி பெயர்த்திருக்கிறது. 

மனிதப் பற்கள் மற்றும் நியாண்டர்தல் பற்களிலிருக்கும் சில பாக்டீரியாக்களின் ஒற்றுமைகளின் அடிப்படையில், நியாண்டர்தல்கள் மனிதர்களை முத்தமிட்டிருக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், மிக மென்மையான முறையில், நல்ல புரிதலோடு நியாண்டர்தல்கள் உடல்உறவில் ஈடுபட்டிருப்பார்கள் என்றும் ஆராய்ச்சி சொல்கிறது.

மரம், செடிகளின் மருத்துவ குணங்களையும்கூட அவர்கள் அறிந்துவைத்திருந்தனர். ஸ்பானிய குகையிலிருந்த எடுக்கப்பட்ட மண்டை ஓடு ஒரு சிறுவனுடையது. அவனுக்கு பற்களில் சில கிருமிகள் இருந்து தொல்லைகொடுத்துவந்துள்ளன. வயிறு வலியும்கூட இருந்திருக்கிறது. அந்த வலியைப் போக்க, அவன் புன்னை மரப் பட்டையைச் சாப்பிட்டிருக்கிறான். புன்னை மரப் பட்டையில் இயற்கையாகவே 'ஆஸ்பிரின்' இருக்கிறது. ஆஸ்பிரின் ஒரு 'வலி போக்கி'. மேலும், ஆன்டி-பயோட்டிக்காகச் செயல்படும் பெனிசிலின் கொண்ட செடிகளையும் சாப்பிட்டுள்ளனர். 

நியாண்டர்தல் குகை மனிதன்

நியாண்டர்தல்களின் ஆராய்ச்சி, மனித சமுதாயத்துக்கு மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. நியாண்டர்தல்களின் டிஎன்ஏ எச்சங்கள்தான் மனிதர்களிடையே இருக்கும் 'டைப் 2 டையாபட்டிஸ்' , 'புகை பிடிக்கும் பழக்கம்' போன்றவைகளுக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த தொடர் ஆராய்ச்சிகள் வரலாற்றின் பல சந்தேகங்களின் முடிச்சுகளை அவிழ்க்கலாம், எதிர்காலத்தின் பிரச்னைகளை நிகழ்காலத்தில் தீர்த்திட உதவிடலாம். 

எத்தனையோ விஷயங்களை ஆராய்ந்திடும் அறிவியலால், இன்னும் ஒரேயொரு விஷயத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது, நியாண்டர்தல்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி ஒட்டுமொத்தமாக அழிந்துபோனார்கள் என்பது தான்?

- இரா. கலைச் செல்வன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close