Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒன்றரை அடி திருக்குறளை ரெண்டு நாள் படிச்ச நியாபகம் இருக்கா உங்களுக்கு?! #WorldPoetryDay

பள்ளிக்கூடம்

ம்ம பசங்க கப்ஸா அடிக்க வாய்ப்பு இல்லாத பகுதி... செய்யுள். நம் அனைவரின் பள்ளி நாட்களின் மறக்க முடியாத அத்தியாயம் அது. 'எல்லோரும் நாளைக்கு செய்யுள் பகுதியை மனப்பாடம் செஞ்சுட்டு வந்திடணும்!' - தமிழ் ஐயாவோ, தமிழ் அம்மாவோ, ஆங்கில சாரோ, ஆங்கில மிஸ்ஸோ சொல்லிட்டுப் போயிடுவாங்க. ஒரு கடவுள் வாழ்த்து, 20 திருக்குறள், அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம், சிலப்பதிகாரம்னு இலக்கிய நயம் பொருந்திய மனப்பாடப் பகுதிகள் தமிழ்ப் பாடத்துல நிறையவே இருக்கும். அதுபோல ஆங்கிலப் பாடத்துலயும் பொயட்ரி பகுதி இருக்கும். இவற்றோட கதை நிகழ்வுகளையும், நீதிகளையும் கிளாஸ்ல டீச்சர் சொல்லிக் கொடுக்குறப்போ, கேட்க ரொம்பவே சுவாரஸ்யமாத்தான் இருக்கும். ஆனா... அதை மனப்பாடம் செய்றதுக்குள்ள நாம படுற கஷ்டம் நமக்குத்தானே தெரியும்?! அதெல்லாம் ஒரு பசுமையான ஸ்கூல் லைஃப் காலம்! 

ஒன்றே முக்கால் அடி திருக்குறளை தூக்கம் தொலைச்சு மணிக்கணக்கில் வாய்விட்டுப் படிச்சு, வீட்டுல இருக்குறவங்க தூக்கத்தையும் சேர்த்தே கெடுத்த புகழ் நம்மைச் சாரும். 'ஓ காட் பியூட்டிஃபுல் ஓ காட் பியூட்டிஃபுல்'னு ஒப்பாரி வெச்சுப் படிச்சாலும் மனப்பாடம் ஆகாம இருந்த ஆறாவது இங்கிலீஷ் பொயட்ரி, அவ்வ்வ்வ் அனுபவம். 

எதுக்கு இப்போ சம்பந்தமே இல்லாம ஸ்கூல் லைஃப் செய்யுள், பொயட்ரியைப் பத்தியெல்லாம் பேச்சுனு நினைக்குறீங்களா? இன்னைக்கு 'வேர்ல்டு பொயட்ரி டே!' கவிதை பத்தி அறியாதவங்களும் பள்ளிப் பருத்துவத்துல செய்யுள் படிக்காம இருந்திருக்க மாட்டாங்க. ஸோ, நாம இந்த நாள்ல செய்யுள்களைக் கொண்டாடுவோம். 

தேசிய, சர்வதேச அளவிலான இலக்கிய இயக்கங்கள் புதிய அங்கீகாரம் மற்றும் உத்வேகம் பெற, 1999-ம் ஆண்டு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21-ம் நாளை உலக செய்யுள் தினமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. மக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கம், முன்னோர்னு பல பாரம்பர்ய விஷயங்களை அழகிய மொழியில் பேசுற கவிதைகளைப் படிக்க, எழுத, படைப்புகளை வெளியிட என்று ஊக்குவிக்கிற நாள் இது.  

கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்னு மாறி மாறி பாடங்களை கவனிச்சு, படிச்சு நாம கடுப்பாகி இருக்குற நேரத்துல... ஒவ்வொரு நாளும் ஒரு பீரியட் மட்டுமே வந்தாலும் நம்மளை உற்சாகமாக்கும் தமிழ், ஆங்கில வகுப்புகளை எதிர்நோக்கிக் காத்திருந்த காலம் உண்டுதானே? இதுல இங்கிலீஸுக்கும் நமக்கும் இருக்குற ஏழாம் பொருத்தத்தால அந்தப் பாடத்துல மட்டும் ஆர்வம் கொஞ்சம் குறைவா இருந்த ஆட்களும் உண்டு. அப்படி ஸ்கூல் லைஃப்ல, கிளாஸ் ரூம்ல இருக்குற எல்லார் முன்னாடியும் நின்னு மனப்பாடச் செய்யுளை ஒப்பிக்குற அந்தப் பழக்கம்தான், பால்ய வயசுலயே நம்ம ஸ்டேஜ் ஃபியரைக் குறைக்க உதவுச்சுன்னு தாராளமா சொல்லலாம். இன்னைக்கு சோஷியல் மீடியாவுல கவிதை, கட்டுரைகளை எழுத அடிப்படை அதுதான்னும் சொல்லலாம். 

வார்த்தை உச்சரிப்பு, பிழையில்லாம எழுதுறதுன்னு லேங்குவேஜ் டீச்சர்ஸ் சொல்ற விஷயங்களை அப்போ பெருசா கண்டுக்காமதான் நம்மில் பலரும் இருந்தோம். ஆனா இப்போ வேலைச் சூழல்ல சீனியர் அத்தாரிட்டிக்கு மெயில் அனுப்ப, லெட்டர் எழுத, மீட்டிங்ல பேசன்னு பல நிலையிலயும் தடுமாறுவதை உணர்கிறோம். ஸ்கூல் லைஃப்ல உருப்படியா படிச்சிருந்தா, இன்னைக்கு இந்த தர்ம சங்கடம் நமக்கு வந்திருக்கும்மான்னு நம்மில் பலரும் அடிக்கடி நினைச்சுக்குறது உண்டு. அப்படி நினைக்குற, நினைக்காம இருக்கிற பலரும் நம்ம ஸ்கூல் லைஃப் லேங்குவேஜ் கிளாஸ்லயும், எக்ஸாம் டைம்லயும் நடந்த சம்பவங்களை நினைச்சுப் பார்த்தா ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கும்.
  
மாணிக்கவாசகர் எழுதிய 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி' என்ற திருவாசக வாழ்த்துப் பாடலை ஆறாம் வகுப்பு கடவுள் வாழ்த்துடன் மறந்தே போனோம். 'அங்காடித் தெரு' படத்தின் வாயிலாக சோஃபியாவுக்கு கொடுத்த லவ் லெட்டர் வாயிலாக, அப்பாடலை நடிகர் பிளாக் பாண்டிதான் நமக்கு நினைவுபடுத்தினார். திருக்குறள்ல 'கற்க'னு தொடங்கும் குறளை எழுதுகன்னு கேள்வியைப் பார்த்ததும், அப்பாடா ரெண்டு மார்க் உறுதிடான்னு மனசுக்குள்ள தம்ஸ் அப் போட்டுக்குற நாம, 'சொல்' என முடியும் குறளை எழுதுகன்னு கேள்வியைப் பார்த்ததும்... அச்சச்சோ என்ன குறளா இருக்கும்னு எல்லாக் குறளையும் வரிசையா சொல்லிப் பார்ப்போம். ஞாபகமே வராட்டி, நமக்கு முன்னாடியோ பின்னாடியோ எக்ஸாம் ஹால்ல உட்கார்ந்திருக்கிற நம்ம ஃப்ரெண்ட்டைக் கேட்டு எழுதுவோம். 

பள்ளி வகுப்பறை நாட்கள்

தமிழ், ஆங்கில செய்யுள் பகுதிகளை ஆசிரியர் சரியான உச்சரிப்புடன் சொல்லிக்கொடுத்து, 'நாளைக்கு எல்லோரும் மனப்பாடம் செஞ்சுட்டு வரணும், ஒவ்வொருத்தரா சொல்லணும்'னு சொல்லுவாங்க; டெஸ்ட் வெப்பாங்க. இதற்காக நாமும் வீட்டில் விழுந்து விழுந்து மனப்பாடம் செய்து, எழுதிப்பார்த்துட்டுப் போவோம். ஆனாலும் சீர் பிரிச்சு எழுதுறது, சந்திப்பிழை இல்லாம எழுதுறதெல்லாம் நமக்கு சிக்கல்தான். இதுல பலரும் ஒன்றரை அடி திருக்குறளை ரெண்டு நாளைக்கும் மேல படிச்சு, அப்படியும் மனப்பாடம் ஆகாம தவிச்சதும் உண்டு. 

அந்த ஸ்கூல் லைஃப் காலகட்டத்தை எல்லாம் கடந்து வந்து இன்னைக்கு பெற்றோராகிட்ட பலரும், தங்களோட குழந்தைகளுக்குத் தமிழ் செய்யுள் பகுதியையும், இலக்கண உச்சரிப்புகளையும், இங்கிலீஷ் பொயட்ரியையும் சொல்லிக் கொடுக்க ரொம்பவே சிரமப்படுவாங்க. அந்தத் தடுமாற்றத்துக்கு நாம ஸ்கூல் லைஃப்ல தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களை ஈடுபாட்டுடன் படிக்காம இருந்ததுதான் முக்கியக் காரணம்.

நாம என்ன படிப்புப் படிச்சாலும், எவ்வளவு உயரம் சென்றாலும் தாய் மொழிதான் நம்மோட அடையாளம். தமிழை சரியான புரிதலுடனும், உச்சரிப்புடனும் பேசவும், பிழையின்றி எழுதவும் வேண்டும். அதுதானே தாய்மொழியை முழுமையாகக் கற்றதை உறுதிப்படுத்தும்? ஸ்கூல் லைஃப் மொழிப்பாட வகுப்புகள் சுவாரஸ்ய நினைவுகளைக் கொடுத்தாலும், அதை நினைச்சு சந்தோஷப்படுற அதே சமயம், நம்ம மொழித் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம். அப்போதுதான் நம்ம பிள்ளைகளுக்கு பாடங்களை சரியா சொல்லிக்கொடுக்க முடியும். 

அகவை என்ன ஆனால் என்ன... நம்ம மொழியையும், அதன் கவிதைகளையும் தேடிப் படிப்போம், தேன் சுவைப்போம்! 

- கு.ஆனந்தராஜ்
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close