Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யானைகளுக்கு நீச்சல் குளம், தங்குவதற்கு தனி மண்டபம்... வறட்சியிலும் கைவிடாத விவசாயி!

யானைகள் நீர் அருந்தவும், நீராடுவதற்கும் எனத் தனியாக நீச்சல் குளம் ஒன்றைக் கட்டிக்கொடுத்து அசத்தியிருக்கிறார் கும்பகோணம் விவசாயி ஒருவர்.

கும்பகோணத்தைஅடுத்துள்ள பேட்டைபட்டிணம் முடுக்குத்தெருவை சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன். இவர் தனது 15 ஏக்கர் நிலத்தில், யானைகளுக்கென்று இரண்டரை ஏக்கர் நிலத்தில் புல் பயிரிட்டும், தனது நிலத்திலேயே மண்டபம் அமைத்தும், அது நீராட நீச்சல் குளத்தையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். 

யானைகளுடன் விவசாயி ராமச்சந்திரன்

"அசோகன் என்பவருக்குச் சொந்தமான சியாமளா, அம்பிகா என்ற இரு யானைகளும் என்னுடைய வயல்பகுதி வழியாகத்தான் தினந்தோறும், கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில் விசேஷங்களுக்குச் செல்லும்; அப்போது என்னுடைய வயல்பகுதியில் உள்ள பம்புசெட்டில் தண்ணீரைப் பார்த்துவிட்டு தானாகவே வந்து நீரைப் பருகும். அப்போது அந்த இரு யானைகளும், சந்தோஷத்தில் பிளிறிவிட்டு செல்லும். அந்த சமயத்தில், நாங்கள் விவசாயப் பணிகளை செய்துகொண்டிருப்போம். யானை எங்களை எந்தத் தொந்தரவும் செய்யாது. அதற்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்துகொண்டிருக்கும். நான்கு வருடத்திற்கு முன்பு யானைக்கென்றே, கோ 4 வகை புல்லை போட்டு யானைக்கு தீனியாக கொடுத்து வந்தேன். 

பிறகு நான்கு வருடத்திற்கு முன்பு தனியாக என்னுடைய சொந்த இடத்தில்  ஒரு மண்டபம் கட்டினேன். அதில் விசேஷ நாட்களைத்  தவிர மற்ற நாட்களில் யானைகள் இங்குதான் தங்க வைக்கப்பட்டிருக்கும். அதற்காக நான் யானை உரிமையாளர்களிடம் எந்த நிதியும் வசூல் செய்ததில்லை. தினமும் போர்வெல்லில் 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் தண்ணீர் பீய்ச்சி அடித்து ஆனந்தமாய் குளிக்கும். அதை பார்த்துதான் நான் 30க்கு 30 அகலமும், 5 அடி ஆழமும் கொண்ட நீச்சல் குளத்தை இரண்டு வருடத்துக்கு முன்பு கட்டினேன். அந்த இடத்தில்தான் யானை தினமும் குளித்து வருகிறது. 

நீராடும் காட்சி

யானையைப் பராமரிப்பதற்கு 5 பேர் இருக்கிறார்கள், நான் வந்துவிட்டால் அது காதை ஆட்டி கூப்பிடும், நான் கடலை மிட்டாய், பிஸ்கட் வாங்கி வந்தால் வாயைத் திறக்கும். ஒருமுறை தோட்டத்தில் பெரிய வேப்பமரத்தை தூக்குவதற்கு ஆள் கிடைக்கவில்லை, யானைகளின் பெயரை சொல்லி தூக்கிக்கிட்டு வான்னு சொன்னேன், சியாமளாவும், அம்பிகாவும் தூக்கிட்டு வந்துச்சு. என்னை தேடி வந்தவரின் கார் ஒருநாள் பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது, கயிற்றைக் கட்டி  இழுக்க சொன்னோம், இழுத்து காரை பள்ளத்திலிருந்து காப்பாற்றியது சியாமளாவும், அம்பிகாவும்தான் நிறைய நேரங்களில் எங்களுக்கு கை கொடுத்திருக்கிறது. என்னைப் பார்த்தால் அது காதை ஆட்டி சந்தோஷப்படும் என்றார். மனிதர்களைப் போன்றே பல சிக்கலான நேரங்களில் இது எனக்கு உதவி செய்துள்ளது. இவற்றுடன் பழகும்போது, விலங்குகளுடன் பழகுகிறோம் என்ற உணர்வே இருக்காது. அந்த அளவிற்கு பாசம் மிக்கவை இந்த யானைகள்" என்கிறார் ராமச்சந்திரன். 

விவசாயி ராமச்சந்திரன்

இதன் பாகன் அசோகனிடம் பேசினோம்."தினமும் அவர் போடுகின்ற புல்லுக்கு மட்டும்தான் காசு கொடுப்போம். வேறு எதற்குமே பணம் கேட்டதில்லை. அந்த அளவுக்கு ராமச்சந்திரன் யானைகளின் மீது அன்பாக இருக்கிறார். குடிதண்ணீருக்கே பஞ்சம் ஏற்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் யானைக்கு நீச்சல் குளத்தை கட்டிக்கொடுத்து எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் விவசாயி ராமச்சந்திரன்" என்றார் பாகன் அசோகன். 

- ஏ. ராம்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close