Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவர்கள் வீடுகளில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு! தேவகோட்டை பள்ளி ஆச்சரியம்

ஆசிரியர்

'உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிற லெட்டரை மறக்காமல் அப்பா, அம்மாவிடம் கொடுக்கணும்' என்று பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக்கு கடிதம் கொடுத்தனுப்பினால் சரியான நேரத்துக்கு பெற்றோர்கள் வந்துவிடுவது பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் நடக்கலாம். ஆனால், அரசுப் பள்ளிகளில் அப்படி நடப்பது இல்லை.

பல அரசுப் பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புகள் நடப்பதே இல்லை. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இந்தச் சந்திப்புக்கான முயற்சி எடுத்தாலும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லை என ஓரிரு சந்திப்புகளோடு நிறுத்திவிடுகின்றனர். அவ்வாறு நிறுத்திவிட்டால் இழப்பு யாருக்கு?

நிச்சயமாக... மாணவர்களுக்குத்தான் இழப்பு. ஏனெனில் ஒவ்வொரு மாணவரின் நிறை,குறையை அவர்களின் பெற்றோரிடம் கூறுவது, மாணவர்களை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவக்கூடியது. அதே போல மாணவர்களின் வீட்டுச் சூழலை ஆசிரியர் புரிந்துகொண்டு மாணவரை அணுகுவதற்கும் பயன்படும். அதனால் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு மாணவரின் கல்விக்கு மிக முக்கியமானது.

இதை நன்கு உணர்ந்த தேவகோட்டை, சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் புதிய முறையில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பை நடத்தியுள்ளார். இந்தப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

Teacher

"எங்கள் பள்ளியின் மாணவர்கள் நன்றாக படிக்கக்கூடியவர்கள்தான். கலை நிகழ்ச்சிகளில் போட்டிப்போட்டுக்கொண்டு கலந்துகொள்பவர்கள்தான். யாரைச் சேர்ப்பது, யாரை விலக்குவது என நானும் ஆசிரியர்களும் திக்குமுக்காடிப் போவோம். இது ஒழுங்காக நடந்தாலே போதுமே பிறகு எதற்கு பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு? எனக் கேள்வி எழலாம். மாணவரைப் பற்றி குறை கூறுவதற்கு மட்டும்தான் இந்தச் சந்திப்பு என நான் நினைக்கவில்லை. ஒரு நாளின் பெரும் பொழுது நம்மோடு இருக்கும் மாணவர்களின் பெற்றோரைச் சந்திப்பதும், அவர்களைப் பற்றி கூடுதலாக தெரிந்துகொள்வது ஆசிரியர்களின் அடிப்படைத் தகுதியாக நினைக்கிறேன்.

நாங்களும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பை பள்ளியில் நடத்த திட்டமிட்டோம். என்றைக்கு நடத்தலாம் என ஆசிரியர்களோடு ஆலோசனை நடத்தியதில் புதிய யோசனை கிடைத்தது. எங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர் பெரும்பாண்மையோர் கூலி வேலைகளுக்குச் செல்பவர்கள். தாங்கள் கஷ்டப்பட்டாலும் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என நினைப்பவர்கள்தான் என்றாலும் தங்களின் ஒருநாள் வருமானத்தை விட்டு, பள்ளிக்கு வரும் சூழலில் இருப்பவர்கள். அதனால், மாணவர்கள் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கே சென்று இந்தச் சந்திப்பை நடத்த முடிவு செய்தோம்.

மாலை நான்கரை மணிக்கு மேல், நானும் ஆசிரியர்களும் அந்தப் பகுதிக்குச் சென்றோம். மாணவர்களிடம் நாங்கள் வரப்போவதைச் சொல்லியிருந்ததால், சில பெற்றோர்கள் வேலை முடிந்து வழக்கமாக வரும் நேரத்திற்கு, சிறிதுநேரம் முன்கூட்டியே வீட்டுக்கு வந்திருந்தனர். பெற்றோர்கள் எங்களை மனமகிழ்ந்து வரவேற்றனர். ஒவ்வோர் ஆசிரியரைப் பார்த்து தங்கள் பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் எனக் கேட்டுத் தெரிந்துகொண்டனர். ஆசிரியர்களும் அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு

பிறகு, ஒரு நிகழ்ச்சியைப் போலவும் இந்தச் சந்திப்பை மாற்றினோம். எங்கள் பள்ளிக்கு எண்ணற்ற அறிஞர்களும் சாதனையாளர்களும் வந்து பேசியும் பயிற்சிகள் அளித்தும் மாணவர்களுக்கு ஊக்கமளித்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி மாணவர்கள் தானாகவே பேசப் பேச பெற்றோர் ஆச்சர்யப்பட்டனர். மேலும், தாங்கள் கலந்துகொண்ட போட்டிகள் பற்றியும் அதில் பெற்ற பரிசுகளையும் சான்றிதழ்களையும் பற்றி மாணவர்கள் கூறும்போது பெற்றோர்கள் நெகிழ்ந்தனர்.

தனலெட்சுமி எனும் மாணவி பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு 46 சான்றிதழ்களைப் பெற்றிருந்தார். அவர் தனது அனுபவங்களைப் பேசியதைக் கேட்டு, சிறப்பு விருந்தினாராக ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோஹன் வியந்துபோனார். அந்த மாணவியை சிறப்பாக பாராட்டவும் செய்தார். தனலெட்சுமி சுட்டி விகடனின் சீனியர் சுட்டி ஸ்டாரும்கூட. தனலெட்சுமி மட்டுமல்ல, எங்கள் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் போட்டிகளில் கலந்துகொண்டு 15-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.

பெற்றோர் தரப்பிலிருந்தும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். ஒருவர் பேசும்போது, சத்துணவு வழங்கும் நேரத்தில் பள்ளிக்குச் சென்றபோது, சுத்தமான முறையில் சத்துணவு வழங்கப்படுவதைப் பார்த்ததாக குறிப்பிட்டார். அவர் சொன்னதை ஆமோதிப்பதாக பல பெற்றோர்களும் தலையசைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துகொண்டது பெரும் வெற்றியாக பார்க்கிறேன். இனி ஒவ்வொரு முறையும் இப்படி நடத்தலாம் என்று எண்ணமும் தோன்றுகிறது" என்று குரலில் மகிழ்ச்சி ததும்ப கூறுகிறார் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்.

மாணவர்களை முன்நகர்த்தும் ஆசிரியர்களின் ஒவ்வொரு முயற்சியும் பாராட்டத்தக்கது.

- வி.எஸ்.சரவணன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close