Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.என்.எஸ் சென்னை கப்பலுக்கு அ.தி.மு.கவால் கிடைக்கவிருக்கும் ‘அடடே’ பெருமைகள்!

ஐ.என்.எஸ் சென்னை ( INS Chennai) போர்க்கப்பலை சென்னைக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்தப் போர்க்கப்பல் 7500 டன் எடை மற்றும் 164 மீட்டர் நீளம் கொண்டது. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறன் கொண்ட போர்க் கப்பல் இது. கடலின் மேற்பரப்பு, கடலின் அடிப் பரப்பு, ஆகாயம் என மூன்று நிலைகளில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் விட இன்னும் பல பெருமைகளை அ.தி.மு.க-வின் மூலம் அடையப்போகிறது ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பல். இந்தப் போர்க்கப்பலைப் பார்வையிடுவதற்காகத்தான் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். போர்க்கப்பலில் அணிப் பேச்சுவார்த்தையா... இது பெரும் அக்கப்போராக அல்லவா இருக்கிறது? என ஆதங்கப்படாமல் மேலே படியுங்கள். 

INS chennai - ஐ.என்.எஸ்

பொதுவாக, விருதுகள் வழங்கும்போது 'விருது பெறும் பிரபலத்தால் அந்த விருது பெருமை கொள்கிறது' எனச் சொல்வார்கள். அதேபோலத்தான் பல பெருமை வாய்ந்ததாகக் கருதப்படும் ஐ.என்.எஸ் போர்க்கப்பல் தற்போது ஒரு மாநிலக் கட்சியின் ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள் சந்தித்துக் கொள்வதற்குப் பாலமாக இருக்கப் போகிறது. அதுமட்டுமல்லாது, ஒரே நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆட்சியிலிருக்கும் முக்கிய நிர்வாகிகளைச் சுமக்கும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறது ஐ.என்.எஸ் போர்க்கப்பல். 

தமிழக மீனவர்களுக்குப் பெரும் துயரமாக நீடித்துக் கொண்டிருப்பது கச்சத்தீவு விவகாரம். இன்று கப்பலில் நடக்கும் பேச்சுவார்த்தை முடிந்ததும் அ.தி.மு.க நிர்வாகிகள் அப்படியே கச்சத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்று அதையும் மீட்டு இந்தியாவோடு சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒன்று நடந்தால் அந்தப் பெருமையும் ஐ.என்.எஸ் போர்க்கப்பலுக்கே சென்று சேரும். 

அப்படியே அவர்கள் ஸ்ட்ரைட்டாக சிலோனுக்குப் போய், இலங்கைக் கடற்படையோடு பேச்சுவார்த்தை நடத்தினால், இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்திய மொத்தப் பெருமையும் கப்பலுக்கே வந்து சேரும். 

கப்பலில் ஆலோசனை நடத்தி முடித்துத் திரும்பும் அமைச்சர்கள் 'தர்மம் மறுபடி வென்றது' எனச் சூளுரைப்பார்கள். 'தர்மத்தைக் காத்த கப்பலே' என ரத்தத்தின் ரத்தங்கள் பேனர் வைப்பார்கள்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு இரு அணிகளும் இணக்கமாகச் செயல்பட முடிவெடுத்தால் பல பஞ்சாயத்துகளுக்கும் தீர்வு ஏற்படும். ஜெயலலிதா மரணத்தில் இருந்துவந்த மர்மம் விலகி அது இயற்கையான மரணம் எனும் செய்தி பரவும். அப்போலோ மருத்துவமனையின் மீது ஏற்பட்டுள்ள களங்கம் தெளியும். மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்பதால் தொடங்கப்பட்ட பல கட்சிகள் சர்ச்சை தீர்ந்தபின்பு கட்சியைக் கலைக்கவும் வாய்ப்புள்ளது. 

ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் சாதனைகளின் நினைவாக 'விக்ராந்த்' பைக் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டதைப் போல, இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெற்று அ.தி.மு.க காக்கப்பட்டால் அதன் நினைவாக இந்தக் கப்பலையே கொண்டுவந்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்படலாம். வெளியூரிலிருந்து வரும் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் அவரது சமாதியில் காதை வைத்து கடிகாரச் சத்தம் கேட்பதைப் போல அ.தி.மு.க தொண்டர்கள் கப்பலை குலதெய்வமாகக் கொண்டாடுவார்கள்.

துரோகிகள் என மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்ட இரு அணியினரும் ஆரத்தழுவிக் கட்டிக்கொண்டால், ஆரோக்கியமான அரசியல் என தமிழக மக்கள் புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம். இந்தியாவிலேயே... ஏன் உலகிலேயே... ஆட்சியைக் காப்பாற்ற போர்க்கப்பலில் ஆலோசனை செய்த இனம் தமிழினம் என நாளைய வரலாறு பேசும். 

- விக்கி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close