Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''வீம்பு, வைராக்கியத்தை எங்களுக்காக மட்டும் விட்டுக்கொடுப்பா!'' - அம்மா பற்றி நெகிழும் சீனுராமசாமி #MothersDay

சீனு ராமசாமி

''கள்ளிக்காட்டில் பெறந்த தாயே...
என்னக் கல்லொடச்சி வளத்த நீயே...''
திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் 'தென்மேற்குப் பருவக்காற்றில்' வரும் இந்தப் பாடலானாலும் சரி,

''போய் வாடா ஏம் பொளிகாட்டு ராசா...
போராடு சிறு மலையெல்லாம் தூசா...''
பாடலானாலும் சரி, கேட்கும்போதெல்லாம் உடல் சிலிர்க்கும். தாய்மையின் புகழை தன் திரைப்படங்களில் வலுவாகப் பதிவு செய்பவர் இயக்குநர் சீனுராமசாமி. இவர் படைப்புகளில் அம்மாக்களே ஆளுமைகள்.

''தாய் என்பவள் ஒரு குடும்பத்தின் நம்பிக்கை. அதிலும் மகன்கள் மீது தாய்க்கிருக்கும் நம்பிக்கைக்கு இந்த உலகில் ஈடே இல்லை. அந்த நம்பிக்கையை அசைக்கவும் யாராலும் முடியாது. நான் வீட்டில் மூத்தவன். எனக்கு அடுத்ததாக மூன்று தம்பிகளும் இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அம்மாவிடம் சென்று 'நான் சினிமாவில் வேலை பார்க்கப் போகிறேன்' என்று சொன்னபோது அவர் துளிகூட வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அப்போதெல்லாம் சினிமாவில் வேலைக்கு அனுப்பவே பல பெற்றோர்களும் தயங்குவார்கள். நான் மூத்தமகன் வேறு. அம்மா யோசிக்கவாவது செய்வார் என்று நினைத்தேன். ஆனால், அவரோ என் கலை ஆர்வத்தைப் புரிந்துகொண்டு சந்தோஷமாக “போய் வாடா மகனே” என்று வழி அனுப்பி வைத்தார். அதுதான் அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை.

இதைத்தான் நான் என் முதல் படைப்பான கூடல்நகர் படத்தின் டைட்டிலிலேயே சொல்லியிருந்தேன். “அம்மா உனக்கும், என் மீதான உனது நம்பிக்கைக்கும்” என்று.

கூடல்நகர் படம் வெளிவந்து மக்களின் கவனத்தை ஓரளவிற்குப் பெற்றிருந்தது. ஆனாலும்கூட, என் துறை சார்ந்தவர்கள் அதைப் பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதெல்லாம் ஒரு பெரிய படைப்பா என்றபடியே நகர்ந்தார்கள். அது எனக்கு மிகப்பெரிய மன வருத்தத்தைக் கொடுத்தது. நான் அவநம்பிக்கையின் தாழ்வாரத்திற்கே போய்விட்டதுபோல உணர்ந்தேன். அதன் தாக்கம் என்னை அடுத்த படத்தைக்கூட துவக்க முடியாமல் செய்தது. அப்போதுதான் ஓர் இரவில் அம்மா சொன்ன வார்த்தை நினைவிற்கு வந்தது. “டேய், கிறுக்கா. எம்புட்டோ பெரிய அறிவாளிங்கலாம் ஒண்ணு சேந்து ராக்கெட்டு விடுதாங்க. அதுவே கீழ விழுந்து போயிடுது. போடா, தைரியமா அடுத்தடுத்து நகர்ந்து போ. வாழக்க ஒருமுறைதான்டா மவனே. விட்டுடாதய்யா” என்ற அந்த வார்த்தைதான் என்னை உசுப்பிவிட்டது. அதன்பிறகு மனம் முழுவதும் தன்னம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் சீனுராமசாமி.

சீனு ராமசாமி

இப்போ சீனுராமசாமிய மக்கள் ஏத்துக்கிட்டாங்க, அவரோட படங்களை ரசிக்கிறாங்கன்னா அதுக்கு காரணம் என் அம்மாதான். என்னோட படங்கள்ல அம்மா கேரக்டருக்கு ஒரு தனித்துவம், தைரியம் இருக்கும். அதுகூட என் அம்மாட்ட இருந்து நான் கத்துக்கிட்டதுதான். கரப்பான்பூச்சிய பார்த்தாலே பயந்து ஓடுற பெண்களுக்கு மத்தியில என் அம்மா பாம்ப பார்த்தா கம்ப எடுத்துட்டு வெரட்டி ஓடும். அவங்க வாழ்ற சூழல் அப்படி. அதைத்தான் என் கேரக்டர்கள் மூலம் வெளிப்படுத்துறேன்.

ஒருமுறை அம்மாக்கிட்ட இருந்து போன் வந்தது. “உன்ன பார்த்து உன்கூட போட்டோ எடுக்க ஒருத்தர் வீட்டுக்கு வந்துருந்தாருய்யா, நான் அவன வரசொல்லுறேன்னு சொல்லிட்டேன்” என்று சொன்னதுதான் தாமதம். உடனடியா நான் மதுரை கிளம்பி போனேன். அம்மா என்ன நம்பி சொன்ன அந்த வார்த்தைய காப்பாத்தணும், அதுதான் எனக்கு முக்கியம். அம்மாவுக்காக செய்றதுல ஒரு திருப்தி கிடைக்குது.

அம்மாவும் அப்படிதான். நான் ஊருக்கு போகும்பொதெல்லாம் காலைல ஐஞ்சு மணிக்கே ஓடைக்குப் போய் பானைப்பொறி போட்டு அயிர மீனையும் வெளுச்சி மீனையும் புடிச்சிட்டு வந்து காராம்பசும்பாலுல உசுரோட நீந்த விடும். மீனு பாலைக்குடிச்சிட்டு மண்ணை வெளியில விட்டதும் அப்புடியே கொழம்பு வெச்சி, 7 மணிக்கெல்லாம் இட்லிக்கு ஊத்தி தரும்பாருங்க, உலகத்தோட வேற எந்த மூலைக்குப் போனாலும் அம்மா வைக்குற அந்த மீன் கொழம்பு வாசத்த அனுபவிக்க முடியாது.

என்னோட ஊக்கம், உருவாக்கம் எல்லாமே அவள்தான். அப்பா வலுவுற்ற காலத்துல ஒரு ராசாளி பறவை போல முன்ன நின்னு எங்களை அழைச்சிட்டு போனாள். எல்லாக் காலங்களிலும் பிள்ளைகளோடு நிற்பவள். எந்தத்துன்பம் வந்தாலும் விலகிச் செல்லாதவள் அவள் ஒருத்தியே. ஒரு குடும்பம் முன்னேறுகிறது என்றால், அங்கே தாயின் உழைப்புதான் அதிகமாக இருக்கும். நாங்களும் அப்படித்தான். எங்கள் முன்னேற்றத்திற்குப் பின்னால் நிற்பது அம்மா மட்டும்தான். அவளுடைய வீம்பு, பிடிவாதம், வைராக்கியத்தால்தான் நாங்கள் வளர்ந்தோம். என் அம்மாவுடைய வைராக்கியம் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் மட்டும்தான் இருந்தது. அந்த வைராக்கியம்தான் தனியொருத்தியாக எங்களைப் படிக்க வைத்தது முதல் ஆளாக்கியது வரை தொடர்ந்தது. ஆனாலும், அந்த வீம்பு, பிடிவாதம், வைராக்கியத்தை அம்மா ஒரே ஒரு புள்ளியில் விட்டுக்கொடுத்து விடுவார். அந்தப் புள்ளிதான் பிள்ளைகளின் நலன்.

இப்படி எங்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கும் என் அம்மாவிற்கு இந்த அன்னையர் தினத்தில் ஒரேயொரு கோரிக்கைதான் வைத்திருக்கேன். 'இதுவரை நீ மகிழ்ச்சியாகத்தான் இருந்து வருகிறாய். ஆனாலும், நீ இன்னும் இன்னும் சந்தோஷமாக இருக்க வழி என்னன்னு கண்டுபுடிச்சு சொல்லு. உன் மகனா அதை நிறைவேத்த நான் தயாரா காத்துக்கிட்டு இருக்கேன்' ’’.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close