Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திறந்தவெளி அருங்காட்சியகம்... அசத்தும் விழுப்புரம் இளைஞர்! #worldMuseumDay

இன்று சர்வதேச அருங்காட்சியகம் தினம். வரலாற்றைப் பாதுகாக்கவும், அதற்கு உறுதுணையாக இருப்பவர்களுக்காகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் சத்தமே இல்லாமல் தனி ஓர் இளைஞர் ஒரு சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அவரது முயற்சியை வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அருங்காட்சியகம்

தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி வரும் ரமேஷ், இன்று நம் கண்முன்னே அழிந்து கொண்டிருக்கும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த 17 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி-விழுப்புரம் இடையே அமைந்துள்ளது முண்டியம்பாக்கம் கிராமம். இவ்வூரின் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்துக்கு வெளியே,  உடைக்கப்பட்ட சிலைகளையும் வரலாறு சொல்லும் பழங்கால கற்சிலைகளையும் சேகரித்து திறந்தவெளியில் சிறு அருங்காட்சியமாக அமைத்து பாதுகாத்து வருகிறார் ரமேஷ். 

இதுகுறித்து ரமேஷ் கூறுகையில் ''விழுப்புரம் மாவட்டத்துல தொன்மையான பல கோயில்கள் இருக்கு. இங்கெல்லாம் திருப்பணி செய்யும்போது, பழைமையான சிலைகள் பிண்ணமானதும் ஆற்றுக்குள் புதைக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படி ஒரு கோயில்ல இருந்த சிலைகளைப் பெண்ணை ஆத்துல பொதச்சிட்டாங்க. நாங்க கோயில்ல விசாரிச்சப்போ, சிலைகளைப் புதைச்ச இடத்த எங்கக்கிட்ட சொல்லலை. பெண்ணை ஆறு முழுக்க தேடி ஆறு சிலைகளைக் கண்டெடுத்தோம். இத இப்படியே விட்டுடக்கூடாது, வரும்கால இளைஞர்களுக்கு இந்தச்சிலைகள்தான் நம்ம பண்பாட்டையும் கலாசாரத்தையும் சொல்லும். அதனால் இது போன்ற சிலைகளைப் பாதுகாக்க முடிவெடுத்தோம்.  

விழுப்புரம் மாவட்டத்தில் வயல்வெளிகள், வண்டிப்பாதைகளில் சிதறிக்கிடந்த வரலாற்றுப் பொக்கிஷங்களைச் சேகரித்து, எங்க ஊரில் அருங்காட்சியகம் அமைத்துப் பாதுகாக்க முடிவெடுத்தோம். அதற்காக கிராம பஞ்சாயத்துக்குச் சொந்தமான இடத்தில்,  சேகரித்த பதினான்கு சிலைகளை மேடை அமைத்து, அந்தச் சிலைகள் குறித்த தகவல் பலகைகள் வைத்து,  2001 ஆம் ஆண்டு அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியரைக் கொண்டு அருங்காட்சியகத்தை திறக்க வைத்தோம். அழிக்கப்படும் சிலைகளைப் பாதுகாக்கவும், பழைமையைப் பாதுகாக்க அரசுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும்  'விழுப்புரம் வரலாற்று பேரவை' என்ற அமைப்பை உருவாக்கினோம். நாங்கள் சேகரித்து வைத்திருக்கும் சிலைகள் எல்லாமே சோழர்கள் காலத்தைச் சேர்ந்தவை. சரியான கட்டடம் இல்லாமல் இருப்பதால், இந்தச் சிலைகளும் திருடு போகிறது.  நூறாண்டுகளுக்கு முன்னறே சேவல் சண்டை நடந்ததுக்கு ஆதாரமா ஒரு கல்வெட்டு இருக்கு, இப்போ அது பொதுப்பணித்துறை அலுவலகத்துல குப்பையோட குப்பையா இருக்குது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுபோல் பல்வேறு இடங்களில் சிலைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. இவை அனைத்தையும் பாதுகாக்க, எங்கள் மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் அமைத்து, இவற்றை முறையாகப் பாதுகாக்க வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

தொலைந்து போகும் வரலாற்றை மீட்டெடுக்கும் இவர்களின் பயணம் வெற்றிபெற வாழ்த்திவிட்டு வந்தோம்.

- இ.லோகேஷ்வரி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close