Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கண்காணிப்பு, ஆராய்ச்சி, பாதுகாப்பு... ஆழ்கடலிலும் ஆதிக்கம் செலுத்தும் ட்ரோன்கள்! #UnderwaterDrones

ட்ரோன்கள் என்றதுமே நம் நினைவு வானின் மீதுதான் இருக்கும். வானில் வட்டமடித்து மனிதர்களைக் கண்காணிக்கும், தீவிரவாதிகளின் மீது குண்டுமழை பொழியும் ட்ரோன்கள் பற்றிப் படித்திருப்பீர்கள். ஆனால் ஆழ்கடலின் அடியில் இயங்கும் ட்ரோன்களைப் பற்றி தெரியுமா? எப்படி வான்வெளி ட்ரோன்கள் பாதுகாப்பு, படப்பிடிப்பு, கண்காணிப்பு என மனிதர்களுக்கு உதவியாக இருக்கிறதோ அதைப்போலவே கடலின் அடிப்பரப்புகளை பற்றிப் படிப்பதற்கும், கடல் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் பயன்படுபவை இந்த ஆழ்கடல் ட்ரோன்கள். பொதுவாக Unmanned Underwater Vehicles என அழைக்கப்படும் இந்த ட்ரோன்களில், தற்போது அடுத்த கட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகிறது சென்னை ஐ.ஐ.டி. 

வானில் பறக்கும் ட்ரோன்

இந்த ஆராய்ச்சியைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் நாம் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக கடலில் இயங்கும் ஒரு நீர்மூழ்கிக்கப்பல்களை எடுத்துக்கொள்வோம். கப்பலில் இருக்கும் இன்ஜின் ஆனது, கப்பலில் இருக்கும் புரோப்பல்லர்களை (Propeller) இயக்கும். அந்த இன்ஜினுக்கான மின்சக்தி எரிபொருள்கள் மூலம் பெறப்படும். இப்படி இயங்கும் புரோப்பல்லர்கள் ஆனது, கப்பலுக்குத் தேவையான உந்துசக்தியை அளித்து கப்பலை இயக்கும். இதன் மூலம்தான் கப்பலின் இயக்கங்கள் நடைபெறும். ஆனால் கடலில் இருக்கும் உயிரினங்கள் எப்படி இடம்பெயர்கின்றன எனக் கொஞ்சம் யோசியுங்களேன். மீன் ஆனது தனது துடுப்புகள் மற்றும் வால் பகுதியை அசைப்பதன் மூலம் நகர்கிறது. பாம்புகளுக்கு துடுப்புகள் கிடையாது. அவை எப்படி நகர்கின்றன? தனது உடல் முழுவதையும் மேலும், கீழும் அசைப்பதன் மூலமாக நகர்கின்றன. சுறா மீன் மற்றொரு மாதிரியாக நீந்தும். இதேபோல பறவைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு மாதிரியாக பறக்கும். மனிதன் தயாரித்த நீர்மூழ்கி கப்பல்களோடு ஒப்பிட்டால், இயற்கையின் இடப்பெயர்ச்சி முறைகள் ஒவ்வொன்றும் இப்படி வித்தியாசமானது. 

இந்த முறைகளின் பின்னால் இருக்கும் அறிவியலைப் பயன்படுத்தி ஆழ்கடல் வாகனங்களை இயக்குவதற்கு Bio-Inspired Propulsion System எனப்பெயர். "பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான்" என்பது போல, கடல்வாழ் உயிரினங்களின் அசைவுகளைக் கண்காணித்து, அதன் தத்துவத்தின் அடிப்படையில் வாகனங்களை வடிவமைப்பதுதான் இந்த திட்டம். வருங்காலங்களில் உருவாக்கப்படும் ஆழ்கடல் ட்ரோன்கள் இப்படித்தான் உருவாக்கப்படும். இதுகுறித்த ஆராய்ச்சிகளைத்தான் சென்னை ஐ.ஐ.டி.யின் கடல்சார் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிருஷ்ணன்குட்டி மற்றும் அவரது மாணவர் நாக பிரவீன் பிரபு ஆகிய இருவரும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இருக்கும் புரொபல்சன் சிஸ்டம் மற்றும் பயோ இன்ஸ்பையர்ட் புரொபல்சன் சிஸ்டம் ஆகிய இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்கினார் நாக பிரவீன் பிரபு.

Underwater drones

"ஆளில்லா ஆழ்கடல் வாகனங்கள் உலகம் முழுவதுமே பல்வேறு விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ட்ரோன்கள் என்றும் அழைக்கலாம். சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இதுபோன்ற வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தற்போது பயன்படுத்தப்படும் வாகனங்களில் சில குறைபாடுகள் இருக்கின்றன. முதலாவது அதிகப்படியான எரிபொருள் செலவு. வாகனங்களின் இன்ஜின்கள் அதிகப்படியான சக்தியை வெளியிட வேண்டியிருப்பதால் அதிகமாக எரிபொருள்கள் செலவாகும். மேலும் சுற்றுச்சூழலும் மாசடையும். அத்துடன் கடலுக்கடியில் நீண்ட நாள்கள் இருக்க முடியாமல், அடிக்கடி எரிபொருள்களை நிரப்ப, வாகனங்கள் மேல்பகுதிக்கு வரவேண்டிய அவசியமும் ஏற்படும். 

இரண்டாவது இந்த வாகனங்களின் அதிர்வுகள் மற்றும் இரைச்சல். இவை ஏற்படுத்தும் அதிர்வுகள் கடலில் இருக்கும் பல்லுயிர் தன்மைக்கு இடைஞ்சலாக இருக்கும். மேலும், இரைச்சல் உண்டாவதால் எளிதில் எதிரிகள் நம் வாகனங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதேபோல இந்த வாகனங்கள் நீருக்குள்ளே செல்லும்போது, மேல்பரப்பில் நீரலைகள் உண்டாகும். இதை வைத்துக்கொண்டே ரேடார் மூலம், கடலுக்கு அடியில் இருக்கும் வாகனம் எப்படிப்பட்டது என்பதைக் கண்டறிய முடியும். அடுத்தது வாகனங்களை திருப்புவதில் இருக்கும் சிக்கல். உதாரணமாக ஒரு கப்பலை உடனே திருப்ப வேண்டுமென்றால், தரையில் திருப்புவது போல உடனே திருப்பிவிட முடியாது. சிறிதுதூரம் சென்றுதான் திரும்பும். கப்பலை நிறுத்துவதும் இப்படிதான். ஆனால் இயற்கையான முறையில் இந்த வாகனங்களை உந்த செய்வதன் மூலமாக, விரைவாக திருப்பவும் நிறுத்தவும் கூட நம்மால் முடியும்.

மீனின் அசைவுகள்

அதேபோல இந்த இயற்கையான புரொபல்சன் சிஸ்டம் மூலம் எரிபொருள்களை நம்மால் பெருமளவு குறைக்க முடியும். இதில் சாதாரண வாகனங்களை விடவும் 65% அதிகமான திறனைப் பெற முடியும். எரிபொருளின் நுகர்வு குறைந்தால், சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும். இந்த ட்ரோன்கள் சத்தமின்றி, அதிக அதிர்வுகளின்றி இயங்குவதால் கடலின் பல்லுயிர்தன்மைக்கும் எவ்வித அச்சுறுத்தல்களும் இருக்காது. இயற்கையான இடப்பெயர்ச்சி முறைகளில் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றில் மீனின் அசைவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எங்கள் சோதனைகளைச் செய்துவருகிறோம். மீன்களைப் பொறுத்தவரை அதன் உடலில் துடுப்புகள் மற்றும் வால் ஆகிய இரு பகுதிகள் மட்டும்தான் இயங்கும். மற்ற பகுதிகள் அப்படியே இருக்கும். மீனின் இடப்பெயர்ச்சியில் வால்தான் சுமார் 80% அளவிற்கு பங்களிக்கிறது. இதையெல்லாம் வைத்துதான் எங்கள் சோதனை மாதிரிகளை உருவாக்கியிருக்கிறோம். இதுகுறித்த கணித ரீதியான ஆராய்ச்சிகளை பெங்களூருவில் இருக்கும், தேசிய அறிவியல் கழகம் மேற்கொண்டு வருகிறது. செயல்பாடுகள் தொடர்பான ஆராய்ச்சிகளை சென்னை ஐ.ஐ.டி.,தான் இந்தியாவில் முதல்முறையாக மேற்கொண்டு வருகிறது.

வானில் பறக்கும் ட்ரோன்களுக்கும், கடலின் அடியில் இயங்கும் ட்ரோன்களுக்கும் இடையே உருவ அளவிலும், தொழில்நுட்ப ரீதியிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. வானில் பறக்கும் ட்ரோன்களில் இறக்கைகள் மூலம் கீழிருந்து மேலே பறக்கிறது. இந்த ட்ரோன்கள் துடுப்புகள் மூலமாக நகர்கின்றன. அந்த ட்ரோன்களை வேகமாகக் கூட நம்மால் இயக்க முடியும். ஆனால் இந்த ட்ரோன்களை குறிப்பிட்ட அளவிலான வேகத்தில் மட்டும்தான் நம்மால் இயக்க முடியும்" என நிறுத்த, இந்த ஆளில்லா ஆழ்கடல் ட்ரோன்களின் பயன்பாடுகள் குறித்து பேராசிரியர் கிருஷ்ணன்குட்டி விளக்கத் துவங்கினார்.

பேராசிரியர் கிருஷ்ணன்குட்டி"நம் நாடு பெருமளவு கடலால் சூழப்பட்டுள்ளதால், கடலின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். ஆனால் மனிதனால் மட்டுமே கடலின் அனைத்துப் பகுதிகளையும் கண்காணிக்க முடியாது. அதுபோன்ற இடங்களில் கைகொடுப்பவைதான் இந்த ஆழ்கடல் ட்ரோன்கள். இதன் மூலம் ஆட்களை கடலுக்குள் அனுப்பாமலே, கடலினைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். கடலின் ஒவ்வொரு இடத்தையும் சென்சார்கள் மூலம் ஆராயவும் முடியும். ஆழ்கடல் ட்ரோன்கள் பெருமளவு ராணுவ கண்காணிப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் கடலின் வளங்களை ஆராய்தல், மீன் வளங்கள் குறித்த கண்காணிப்பு, கடலின் தாதுவளம் குறித்த விவரங்கள், பூமியின் நிலப்பரப்பு குறித்த தகவல்கள், கடலில் ஏற்படும் கப்பலின் எண்ணெய் கசிவுகள் போன்ற விவரங்களையும் பெற முடியும். இது அளவில் மிகவும் சிறியதாகவும், அதிர்வுகள் குறைவானதாகவும் இருக்கும். எனவே எதிரிகள் ரேடார் மூலமாக இதனைக் கண்டறிவது என்பதெல்லாம் கடினம். எப்படி ஏரியல் ட்ரோன்கள் வானில் இருந்து கண்காணிக்க உதவுகிறதோ, அதைப் போலவே ரகசியமாக கடல்பரப்பைக் கண்காணிக்க இவை அதிகளவில் உதவும். இந்த ட்ரோனை கடலுக்கு அடியில் அனுப்பிவிட்டு, அதனை ஏதேனும் ஒரு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கட்டுப்படுத்தவும், அதன்மூலம் தகவல்களைப் பெறவும் முடியும். செலவும் குறைவு. எனவே ஆழ்கடல் ஆராய்ச்சிகளுக்கும் வருங்காலங்களில் அதிக அளவில் உதவிசெய்யும்" என்றார்.

இந்த ட்ரோன்களின் வருங்காலம் பற்றிக் குறிப்பிட்ட பிரவீன், "தற்போது வானில் பறக்கும் ட்ரோன்கள் அல்லது நீருக்கடியில் பயணம் செய்யும் ட்ரோன்கள் என இருவகையாக இருக்கின்றன. ஆனால் எதிர்காலங்களில் ஒரே ட்ரோனை இரண்டு பரப்புகளிலும் இயக்கும்படி வடிவமைக்கப்படலாம். அதற்கான ஆய்வுகளும் தற்போது நடந்து வருகின்றன. நீங்கள் பறக்கும் மீன்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அதனால் நீருக்கடியில் விரைவாக நீந்தவும் முடியும். நீருக்கு வெளியே பறக்கவும் முடியும். எனவே அதன் செயல்பாடுகளை வைத்து இதுமாதிரியான ட்ரோன்கள் வடிவமைக்கப்படலாம்" என்றார்.

இயற்கையிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close