Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிராக்டர் விலை ஏற... சொகுசு கார் விலை குறைய... இது ஜி.எஸ்.டி அம்சம்!

பால் விலை ஏறினாலே, அடுத்த நாள் உலகமே அழியப்போவதுபோல் மளிகைக் கடையில் கூட்டம் அள்ளும். ஜிஎஸ்டி, வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரவிருக்கிறது. அதிலும் ஆட்டோமொபைல் உலகில், ‘ஜிஎஸ்டி வருவதற்குள் முந்துங்கள்’ என்று கார்/பைக் விளம்பரங்கள்வேறு மிரட்டல் தொனியில் பயமுறுத்துகின்றன. விளைவு, கார்/பைக் ஷோரூம்களில் கூட்டம் அள்ளுகிறது. உதிரிபாகங்களைப் பொறுத்தவரை `பைக் டயர் விலை 300 ரூபாய் வரை ஏறுமாமே... டயரை மாத்திடவேண்டியதுதான்!' என்று நல்ல நிலையில் இருக்கும் டயர்களைக்கூட மாற்றும் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல...’ என்பதுபோல், ஜிஎஸ்டி-யைப் புரிந்துகொள்ள இது ஒன்றும் சாதாரண அரசு வரி அல்ல. ‘இன்டர்ஸ்டெல்லர்’ ஹாலிவுட் படத்தை சப்-டைட்டில் இல்லாமல் பார்ப்பதுபோல்தான் ஜிஎஸ்டியைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், ஜிஎஸ்டி-க்குப் பிறகு கார் வாங்குவதில் மிடில் க்ளாஸ் மக்களுக்கு நன்மைகளும் உண்டு... தீமைகளும் உண்டு.

* ஆல்ட்டோ, கிராண்ட் ஐ10 போன்ற நான்கு மீட்டருக்குக் குறைவான, 1,200 சிசி-க்கும் குறைவான பெட்ரோல் கார் வாங்குவது நஷ்டம்.

* ஸ்விஃப்ட், ஹூண்டாய் எலீட் i20 போன்ற நான்கு மீட்டருக்குக் குறைவான, 1,500 சிசி-க்கும் குறைவான டீசல் கார்கள் வாங்குவதில் எந்த லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை.

* நான்கு மீட்டருக்குக் குறைவான 1.5 லிட்டர் இன்ஜினுக்கும் குறைவான எக்கோஸ்ஃபோர்டு போன்ற பெட்ரோல் கார் வாங்குவது 1.7 சதவிகிதம் லாபம்.

* எஸ்யூவி-களுக்கு இப்போது 55 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. இனி, 28 சதவிகிதம் ஜிஎஸ்டி-யுடன் கூடுதலாக 15 சதவிகித வரி உண்டு. ஆகவே, எஸ்யூவி வாங்கினால் 12 சதவிகித அளவு லாபம் கிடைக்கும்.

இந்த நிலையில்தான், பணக்காரர்கள் வாங்கும் சொகுசு கார்களுக்குக் கணிசமாக விலை குறைத்து, விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்கள் விஷயத்தில் புத்திசாலித்தனமாக ஒரு ட்ரிக்கைக் கையாண்டிருக்கிறது மத்திய அரசு. 

டிராக்டர்GST Impact

டிராக்டர்கள் மீது குறைந்தபட்சமாக 12 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. ‘பரவாயில்லையே... மற்ற வாகனங்களுக்கு 28 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை வரி ஏற்றியிருக்கும் வேளையில், டிராக்டர்களுக்கு 12 சதவிகிதம்தானா’ என நிம்மதி அடைவீர்கள்தானே! இங்குதான் சூட்சுமமே இருக்கிறது. காரணம், டிராக்டர் உற்பத்திக்கான உதிரிபாகங்கள் மீது 28 சதவிகிதம் அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறார்கள். இதனால், டிராக்டர் உற்பத்திச் செலவு நிச்சயம் அதிகரிக்கும். அப்படியென்றால், என்ன அர்த்தம்? டிராக்டர்களின் விலையை  மறைமுகமாக உயர்த்தி, விவசாயிகளைச் சேற்றில் கால்வைக்கவிடாமல் டிராக்டர் உற்பத்திச் செலவில் கை வைத்துவிட்டது மத்திய அரசு. அதாவது, பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலைக்கூட ஆட்டவில்லை.

இதனால், ஒரு டிராக்டரின் விலை நிச்சயம் 30,000 முதல் 40,000 வரை விலை உயரும் அபாயம் இருக்கிறது. `30,000 ரூபாய்தானே... போயிட்டுப்போகுது' என இதை அசால்ட்டாக ஒதுக்கிவிட முடியாது. பெரிய பண முதலைகளோ, தனவான்களோ டிராக்டர்கள் வாங்கி நிலத்தை உழப்போவதில்லை. அன்றாடக் கூலிகளான விவசாயிகள்தான் டிராக்டர்கள் வாங்குவார்கள் என்பதால், இந்தத் தொகை அவர்களுக்குப் பெரிய சுமையாகத்தான் இருக்கும்.

டிராக்டர்

இந்த நிலையில், `டிராக்டர்களின் உதிரி பாகங்களுக்கு விதிக்கப்பட இருக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பை, 18 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்' என்று டிராக்டர் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு, மத்திய அரசைக் கேட்டுவருகிறது. ‘‘விவசாயிகளைப் பொறுத்தவரை ஏற்கெனவே ஆள் பற்றாக்குறை இருக்கிறது. டிராக்டர்கள்தான் எங்களைப் பாதுகாக்கும் தெய்வம். இப்போது இந்த வரிவிதிப்பைப் பார்த்தால் பயமாக உள்ளது. உடனடியாக இந்த வரிவிதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் டாஃபே டிராக்டர் நிறுவனத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன். 

பீட்சாவுக்கு வரி குறைத்து, கடலைமிட்டாய்க்கு வரி ஏற்றிய அதே வினோதம்தான், டிராக்டர்களுக்கும் சொகுசு கார்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

நடத்துங்க!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close