Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மரபணு மாற்றப்பட்ட பசுக்கள்... இயற்கையோடு விளையாடும் அறிவியல்!

மரபணு மாற்றப்பட்ட பசுக்கள்

மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனப் புகை, தொழிற்சாலை புகை மற்றும் கழிவுகள் என அனைத்தும் காரணிகளாக அமைய நம் பூமியின் வெப்பம் கிடுகிடுவென உயர்வதாகக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதனால் பல்வேறு மிருகங்கள் அழியும் தருவாயில் இருப்பதாக உலகெங்கிலும் இருந்து எச்சரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. பனிக் கரடிகள், பென்குயின்கள், பனிச்சிறுத்தை, நீர் நாய்கள், ஏராளமான மீன் வகைகள், கோல்டன் டோட் எனப்படும் தங்கநிற தவளைகள் மற்றும் ஆசிய யானைகள் போன்ற மிருக இனங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாகக் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்க, அறிவியலாளர்களும் இதைச் சரிக்கட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.

பசுக்களால் அதிக வெப்பத்தைத் தாங்க முடியுமா?

உலகில் பாதிக்கும் மேலான கால்நடை வகைகள் வெப்பமான பிரதேசங்களில்தான் வாழ்கின்றன. அதிகமாகும் வெப்பத்தால் ஏற்படும் அழுத்தமானது விலங்கின் புரதம் மற்றும் உடல் நலத்தை நிச்சயம் பாதிக்கும். இப்போது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் விகிதத்தின் படியே வெப்பமயமாதல் மேலும் தொடரும் பட்சத்தில், பசுக்களின் நிலைமை என்னவாகும் என்ற அச்சம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. வீடு சார்ந்த விலங்குகளின் பட்டியலில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும் பசு இனத்தைக் காப்பாற்ற புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் இருக்கும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.

என்ன செய்யப் போகிறார்கள்?

ஆரம்பகட்டமாக அதிக தட்பவெப்ப நிலையைத் தாங்கக் கூடிய ப்ராங்கஸ் (Brangus) இன மாடுகளை ஆராய்ச்சி செய்யத் தொடங்கியிருக்கின்றனர். இந்த ஆராய்ச்சிக்காக 3 வருடத்திற்கு $733,000 மானியம் வழங்கிருக்கிறது அதன் பெடரல் அரசு. இதன் மூலம் பல்வேறு வகை மாடுகளின் DNA கூறுகளை ஆராயவிருக்கிறார்கள். எந்த இனப் பசுவிற்கு வெப்ப சகிப்புத்தன்மை நிறைய இருக்கிறது? இவ்வகை பசுக்கள் எவ்வாறு தங்கள் உடலின் வெப்பத்தை சீர் செய்துக்கொள்கிறது? போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கில் இந்த ஆராய்ச்சித் தொடரவிருக்கிறது.  இதை அறிந்துவிட்டால், பல்வேறு மரபியல் கருவிகள் கொண்டு எந்த வெப்பத்தையும் தாங்கக் கூடிய மாடுகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத் திட்டங்களும் எதிர்ப்புகளும்

பசுவில் தொடங்கவிருக்கும் இந்த ஆராய்ச்சி வெற்றிபெறும் பட்சத்தில் அதிக வெப்பத்தால் அழியத் தொடங்கும் பல மிருக இனங்களைக் காப்பற்றும் முயற்சியில் இறங்கவிருக்கிறார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த கால்நடைகளை உருவாக்கி மனித இனம் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது. இதற்கெல்லாம் வலுசேர்க்கும் விதமாக, நாளை உலகம் அழியத் தொடங்கும் பட்சத்தில் மனித இனம் அழியாமல் காக்க அறிவியல் மட்டுமே உதவ முடியும். அப்போது மரபணு மாற்றங்கள், வேறு கோள்களுக்குச் சென்று வாழ முடியுமா என்று அறிதல் என்பது போன்ற விஷயங்கள் அத்தியாவசியமாக மாறிவிட்டிருக்கும். அதற்கு நாம் இப்போதிருந்தே தயாராக வேண்டாமா, என்று வாதிடுகின்றனர் விஞ்ஞானிகள்!

இது ஒரு புறமிருக்க, மரபணு மாற்றம் என்ற அறிவியல் கூற்றே சரியானதா? ஆபத்தில்லாத எதிர்காலத்தை அது கொடுத்துவிட முடியுமா? என்பது போன்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை! இது இயற்கைக்கு எதிரான செயலாகவும், மனிதன் கடவுளாக முயற்சிக்கிறான் என்றும் பல எதிர்ப்புகள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close