Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘குண்டாக இருப்பதும் கறுப்பாக இருப்பதும் அவமானம் அல்ல’’ - கேலி செய்தவரை மன்னிப்பு கேட்கவைத்த அமெரிக்க மாடல் நட்டாலி ஹேஜ்

நட்டாலி ஹேஜ்

பொது இடங்களில் பெண்களின் நிறம், உடல் பருமன் ஆகியவற்றைச் சொல்லி கேலிக்குள்ளாக்கும் பழக்கம் உலகம் முழுக்க இருக்கிறது. இதனால், பல பெண்கள் மனதளவில் உடைந்துபோகின்றனர். தன்னைப் பற்றி குறைவான மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்கிறார்கள். உடல் பருமன் குறித்துக் கவலைப்படும் ஒரு பெண், சரியாகச் சாப்பிடாமல் உடல் நோய்களுக்கும் ஆளாகிறார். இவற்றையெல்லாம் எப்படித் தவிர்ப்பது என்று தனது அனுபவத்தின் வழியாகப் பாடம் கற்றுக்கொடுத்துள்ளார் நட்டாலி ஹேஜ் என்ற அமெரிக்க மாடல். 

ஒல்லியாக இருப்பவர்கள் மட்டுமே மாடலிங் துறையில் ஜொலிக்க முடியும் என்பதை உடைத்து, மாடலிங் துறையில் ஜொலிப்பவர் நட்டாலி. சமீபத்தில், உடல் பருமனைச் சுட்டிக்காட்டும் புகைப்பட ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக, லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். இவர் சென்ற விமானத்தில் சந்தித்த அனுபவங்கள் கொடுமையானவை. பொதுவாக, விமானத்தில் செல்லவே பயப்படுபவர் நட்டாலி ஹேஜ். விமானத்தின் இருக்கைகள் இவருக்கு வசதியாக இருப்பதில்லை என்பது முக்கியக் காரணம். ஆனால், லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றபோது, வசதியாக அமர்ந்து பயணிக்கும் வகையில் 70 டாலர் கூடுதலாகச் செலுத்தியிருந்தார். ஆனால், இருவருக்கிடையே அமர்ந்து பயணிக்கும் வகையில் இவருக்கான இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு பேருந்து பயணத்தில் அருகில் அமரும் நபர் குண்டாக இருந்துவிட்டால், பக்கத்தில் இருப்பவர் என்னெவெல்லாம் செய்வார் என்று யோசித்துப் பாருங்கள். அதைவிடக் கொஞ்சம் அதிகமான பிரச்னையை இந்த விமானப் பயணத்தில் சந்தித்தார், நட்டாலி ஹேஜ். அதைப் பகிரங்கமாக சமூக வளைதளத்தில் பதிவுசெய்துள்ளார். 

‘‘நான் இருக்கையில் அமர்ந்ததும் என் இடப்பக்கம் அமர்ந்திருந்த நபர் குரலை உயர்த்தியும், பெருமூச்சு விட்டும் தன்னை சரி செய்துகொள்ளத் தொடங்கினார். அதன்பின் என்னைப் பற்றிய தகவல்களை அவரது நண்பருக்கு மெசேஜ் செய்ததைக் கவனித்தேன். செய்தியைப் பெற்ற நபர், 'அந்தப் பெண், மெக்சிக்கன் உணவை சாப்பிட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்' என்று குறுஞ்செய்தி அனுப்பினார். அதற்கு இவர், 'அந்தப் பெண் மெக்சிகோவைச் சேர்ந்த ஒருவரையே முழுதாக சாப்பிட்டிருப்பதாக நினைக்கிறேன்’ என்று பதில் அனுப்பினார். மேலும், ’தான் இருக்கையின் ஓரத்தில் தள்ளப்பட்டு, தன் கழுத்தின் அச்சு விமானத்தின் ஜன்னலில் பதிந்துள்ளது' என்றும் தனது நண்பருக்குச் செய்தி அனுப்பினார். என்னை ஒருவர் மட்டமாகக் கேலி செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அந்த இடத்தை மாற்றிக்கொள்வதற்காக வலதுபுறத்தில் இருந்தவரிடம் நடந்தவற்றைக் கூறினேன். அவரோ இடத்தை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார். 

நட்டாலி ஹேஜ்

என் பிரச்னையைக் கேட்ட வலதுபுற நபர், 'உடல் பருமனாக இருப்பவர்கள் தினமும் எதிர்கொள்ளும் பிரச்னை இது. பேருந்தில் பயணிக்கும்போதும், வரிசைகளில் நிற்கும்போதும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் இருந்தாலும், பிறரால் கேலி செய்யப்படுகிறீர்கள். நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை உணர்ந்து நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும்' என்று சமாதானம் செய்தார்'' என்று வேதனைப்பட்டுள்ளார் நட்டாலி. 

பிறகு, தன் இடதுபுறம் அமர்ந்து குறுந்தகவல் வழியாகக் கேலி செய்த நபருடன் நேருக்கு நேராகச் சண்டையிட்டுள்ளார். அதை வீடியோவாக எடுத்துள்ளார். பிறகு, சம்பந்தப்பட்ட நபர் நட்டாலியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ‘‘இனிமேல் இதுபோன்று வேறு யாரிடமும் நடக்க வேண்டாம்'' என எச்சரித்துள்ளார் நட்டாலி ஹேஜ். 

நட்டாலி ஹேஜ்ஜின் தைரியம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவைப்படுகிறது. உடல்வாகு அல்லது நிறத்தைக் கேலி செய்வது, இணையதளத்திலும் வழக்கமான வேடிக்கையாகிவிட்டது. கேலிக்காக உருவாக்கப்படும் மீம்ஸ்களில், அழகற்றவர்கள் என்று குறிப்பிட கறுப்பு மற்றும் பருமனான பெண்களே பயன்படுத்தப்படுகின்றனர். கேலிக்குள்ளாக்கப்படுவர்கள் தைரியமாக எதிர்க்க ஆரம்பித்தால், மாற்றம் வரும் என்பதற்கு நட்டாலி ஹேஜ் ஓர் உதாரணமாகி இருக்கிறார். 

குண்டாக இருக்கிறோம், கறுப்பாக இருக்கிறோம் என்று எங்கும் எதற்காகவும் கலங்க வேண்டாம் பெண்களே. இந்தச் சமூகம் உங்கள் மீது சுமத்தும் பொய்யான நம்பிக்கைகளை உடைத்தெறிந்து தன்னம்பிக்கையோடு வலம் வாருங்கள்! 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close