Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘பிக் பாஸ்’ வீட்லேர்ந்து வெளிய வந்தா... காத்திருக்கு சர்ப்ரைஸ்! #BiggBoss

'பிக் பாஸ்...' ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது. ஆனா இந்த ப்ரோகிராமை பார்க்கவும் முடியாது... பார்க்காம இருக்கவும் முடியாதுங்கிற நிலைமையில் இருக்காங்க மக்கள். அடுத்தநாள் வர்ற மீம்ஸ்லாம் புரியணுமா இல்லையா... அதுக்காகவாச்சும் இதைப் பார்த்தாகணும். 

பிக் பாஸ்

அம்மா அப்பாகிட்ட பொழுதன்னைக்கும் திட்டு வாங்குறவன், அக்கா, அண்ணண், தம்பி, தங்கச்சி இம்சை தாங்க முடியாதவன், முக்கியமா பொண்டாட்டி புள்ளைக தொல்லை தாங்காதவன்  எவனோ ஒருத்தன்தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கண்டு பிடிச்சிருக்கணும். ஆனா எனக்கென்னமோ லவ்வர் கொடுமை தாங்க முடியாத ஒருத்தன் செஞ்ச வேலையாத்தான் இருக்குமோனு ஒரு டவுட்டு!

‘சாப்டு... சாப்டு தூங்குறதுக்கு என்ன தங்கம்’னு சொல்றவங்களுக்கு... நாமளே சமைச்சு நாமளே சாப்பிடனும்னா சும்மாவா..? அதுவும் நாம அப்பப்போ சிக்கன், முட்டைனு டயட்ல இருப்போம். எப்பப் பார்த்தாலும் அடுத்தவன் நம்ம சோத்துல கையை வெச்சிருவானோனு பயத்துலயே வேற வாழணும். தொயரம்ல..!

சரி... ‘பிக் பாஸ்’ இந்த உலகத்துக்குச் சொல்ல வர்ற உண்மை என்னனு பார்த்தோம்னா ஒரு மனுஷனால சொந்த பந்தங்கள், டி.வி,மொபைல்னு எது வேணும்னாலும் இல்லாம வாழ முடியும். ஆனா பொறணி பேசாம மட்டும் வாழ முடியாது. அடடா..! ஆயா காலத்து டெக்னிக்னாலும் செமல்ல..!

நூறு நாள் கழிச்சி உள்ள இருக்குறவங்க வெளியே வரும்போது எப்படி இருப்பாங்க... கண்டிப்பா படையப்பா ரம்யா கிருஷ்ணன் போல 'ஆ வெயில்...'னு மூஞ்சியை சுளிச்சுக்கிட்டுக் கண்ணாடியை போட்டுப்பாங்க. பொல்யூஷன், ட்ராஃபிக்கை எல்லாம் பார்த்து 'இது அதுல்ல'னு மயங்கி விழுந்துடுவாங்க.

பழக்க தோஷத்துல எல்லோரையும் கட்டிப்பிடிக்கப்போய் அவமானப்படலாம். இல்லேன்னா பொண்டாட்டியோ புருசனோ பெத்தவங்களோ கழுவிக் கழுவி ஊத்தலாம். ரொம்ப  ஆசை  ஆசையா காதலிச்ச காதலன்/ காதலி ப்ரேக்-அப் பண்ணிட்டு ‘ஆளை உட்றா சாமி’னு தெறிச்சு ஓடலாம். 

ச்சை... வீட்டுக்குள்ளயே இருந்துட்டு, ருசியா சாப்பிட்டு எத்தனை நாளாச்சுனு ஹோட்டலுக்குப் போய் பறக்குறது ஊறுறது தாவுறதுனு எல்லாத்தையும் ரவுண்ட் கட்டி சாப்பிட்டுட்டு பில்லைப் பார்த்தா கண்ணை கட்டும். அதான் ஜி.எஸ்.டியின் மகிமை. ஜி.எஸ்.டி ஆர்டர் வந்ததே பாவம் நாம சொன்னாத் தானப்பா அவங்களுக்கு தெரியும்..! 

பிக் பாஸ்

'பிக் பாஸ்' வீட்டில் மோடி, ஹெச்.ராஜா...

இது கூடப் பரவாயில்ல... அவங்க உள்ள இருக்குற நேரம்பார்த்து  ஐநூறு ரூவா ரெண்டாயிரம் ரூவாலாம் செல்லாதுனு அறிவிச்சுட்டாய்ங்கனா கோவிந்தா கோவிந்தா... ‘உன் பணம் பணம் என் பணம் உன் பணம் என் பணம்’ கதை தான்..! பான் கார்டை வேற ஆதார் கார்ட்டோட இணைச்சிருக்க மாட்டாங்க. நீங்க ஆன்ட்டி இந்தியன்னு சொன்னாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை.

செல்போன் இல்லாம கூட இருந்துருவாங்க போல... கெரகம் கண்ணாடியும் மேக்கப் செட்டும் இல்லாம உள்ளே இருக்கமுடியாது. அது ஒண்ணுதான் என்டர்டெயின்மென்ட்டு. அதுலயும் ஒரு நல்லது இருக்கு. 'நாங்க ஜி.எஸ்.டி.க்கு எதிரா போராடும்போது நீங்க போராட்டத்துக்கு வந்தீங்களா?? இல்லைல... அதனால உங்கள நடிகர் சங்கத்துல இருந்து தூக்குறோம்'னு விஷால் அண்ணன் கோவமா சொல்லிட்டார்னா ப்யூட்டி பார்லர்  வெச்சுப் பொழச்சிக்கலாம்.

சொல்ல முடியாது... 100 நாள்ல நம்ம தமிழ்நாட்டு முதலமைச்சரே மாறலாம். கடந்த மூணு மாதங்களாவே கவர்னர் வருவார்... ஆட்சியை கலைப்பார்ங்கிற தமிழக மக்களின்  கனவு நிறைவேறலாம். சிதறிச் சின்னாப்பின்னமாக் கிடக்குற கட்சி 'நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை... தன்னைப் போல என்னை எண்ணும் நீயும் நானும் ஓர் அம்மா பிள்ளை'னு பேக் -ரவுண்டு பாட்டைப் போட்டுவிட்டு  ஒண்ணாச் சேர்ந்து கும்மி அடிக்கலாம். இல்லேன்னா திடீர்னு யாராவது வந்து அம்மா சமாதியில சைலண்டா போய் உட்கார்ந்துட்டு இன்னும் ரெண்டு கட்சி புதுசா ஆரம்பிச்சிருக்கலாம்.

ரசிகர்களின் வேண்டுகோள் : 'பிக் பாஸ் ப்ளூப்பர்ஸ்' என்ற நிகழ்ச்சி தொடங்கி எடிட் செய்த பகுதிகளைப் போட்டு எங்களை இம்சிக்க வேண்டாம் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close