Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் புரொஜெக்டர்... பேட்டரி வண்டி... டூத்பிரஷ்... ஜியோமியின் டெக் திருவிழா!

ந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இப்போதைக்கு முடிசூடா மன்னனாக இருப்பது, சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம்தான்! நடுத்தர மக்களுக்கு ஏற்ற விலையில் அதிக வசதிகளுடன் மொபைல்களை விற்பதால், இந்நிறுவனத்துக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிறுவனம் வெளியிட்ட ரெட்மி சீரிஸ் அனைத்துமே மார்க்கெட்டில் சூப்பர் ஹிட்.

2017-ம் ஆண்டின் முதல் காலாண்டில் அதிக அளவில் விற்பனையான மொபைல்கள் பட்டியலில், ரெட்மி நோட் 4 முன்னிலை வகித்தது. இரண்டாவது காலாண்டின் முடிவில், ஜியோமி நிறுவனத்தின் மொபைல்கள் சுமார் 2.31 கோடி ஷிப்மென்ட் செய்யப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. முந்தைய காலாண்டைவிட இது 70 சதவிகிதம் அதிகம் ஆகும். இதுவரை வெளிவந்த மொபைல்களிலேயே ரெட்மி நோட் 4 மாடல்தான், அதிகம் விற்ற நான்காவது மாடல் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.

ஜியோமி வெளியிட்டு விழா

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வெளியீட்டு விழாதான், உலகின் மிகப்பெரிய டெக் நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டியிடும் ஜியோமி நிறுவனம், இதைப்போலவே சமீபத்தில் சீனாவில் மிகப்பெரிய அறிமுக விழா ஒன்றை நடத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த டெக் உலகமும் உன்னிப்பாகக் கவனித்த இந்த நிகழ்வில், ஸ்மார்ட்போன் தவிர்த்த மூன்று பொருள்களை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது ஜியோமி நிறுவனம்.

எம்.ஐ லேசர் புரொஜெக்டர் (MI Laser Projector) :

MI Laser Projector

திரையரங்கு அனுபவத்தில் வீட்டிலிருந்தபடியே படம் பார்க்க நினைப்பவர்களைக் குறிவைத்து புரொஜெக்டர் ஒன்றை ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் ஏ.எல்.பி.டி 3.0 லேசர் புரொஜெக்சன் முறையில் இயங்கும் 90 சதவிகிதத் திரையரங்குகளில், அப்பொட்ரானிக்ஸ் (Appotronics) என்ற நிறுவனத்தின் புரொஜக்டர்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிறுவனத்துடன் இணைந்து 'எம்.ஐ லேசர் புரொஜெக்டர் டி.வி' ஒன்றை சமீபத்தில் ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோமி நிறுவனத்தின் டி.வியுடன் வரும் இந்த புரொஜெக்டர், லேசர் முறையில் இயங்குவதால் மிகவும் துல்லியமானதாக, குறைந்த மின்சக்தியை மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த புரொஜெக்டர் மூலம் அதிகபட்சமாக 150 இன்ச் வரையில் துல்லியமான டிஸ்ப்ளேயில் திரையிட முடியும். 'உலகின் முதல் ரியல் சினிமா லேசர் புரொஜெக்டர் டி.வி' என இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு பில்ட்-இன் ஸ்பீக்கர்களும் இதில் உள்ளன. தற்போது சீனாவில் வெளியிடப்பட்டுள்ள இதன் மதிப்பு 9,999 சீன யுவான்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.94,800/-) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்.ஐ லேசர் புரொஜெக்டர் குறித்த வீடியோ :

 

எம்.ஐ அல்ட்ராசோனிக் டூத்பிரஷ் (MI Ultrasonic Toothbrush) :

Xiomi Ultrasonic Toothbrush

பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரானிக் டூத்பிரஷ் சீனாவில் அதிகப்பிரபலம். பார்ப்பதற்கு சாதாரண பிரஷ் மாதிரி இருந்தாலும், இதன் பிரஷில்ஸ் வைப்ரேட் ஆகி பற்களை சுத்தம் செய்யக்கூடியது. எம்.ஐ அல்ட்ராசோனிக் டூத்பிரஷ் என்ற பெயரில் பிரஷ் ஒன்றை ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அல்ட்ராசோனிக் முறையில் நிமிடத்துக்கு சுமார் 31,000 முறைகள் வைப்ரேட் ஆகக்கூடிய இந்த டூத்பிரஷ், நவீனமுறையில் பற்களை சுத்தம் செய்யக்கூடியது. 700 mAh பேட்டரி இருப்பதால் ஒரு முறை சார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு இரண்டு முறை பயன்படுத்தினால்கூட 18 நாள்களுக்கு இந்த பிரஷ்ஷில் சார்ஜ் இருக்கும் என ஜியோமி விளம்பரப்படுத்தியுள்ளது. மொபைல் போனுடன் இதை கனெக்ட் செய்து, பிரஷ் செய்த விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இந்த வாட்டர் ஃப்ரூப் பிரஷ்ஷின் மதிப்பு 199 சீன யுவான்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,800) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

நைன்பாட் பிளஸ் (Ninebot Plus) :

Xiomi Ninebot Plus

தசாவதாரம் படத்தில் சயின்டிஸ்ட்டாக வரும் கமல்ஹாசன், நின்றுகொண்டே இரண்டு சக்கர ஸ்கூட்டர் ஒன்றில் லேப் முழுவதும் சுற்றிவந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். அதைப்போன்றே எம்.ஐ நிறுவனத்தின் தயாரிப்பான நைன்பாட் பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோமி நிறுவனத்தின் நைன்பாட் மினியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இது. 100 கிலோ வரையிலான எடையைத் தாங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர், ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 35 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடியது. ஸ்மார்ட்போனை ரிமோட்டாகப் பயன்படுத்தி இதை இயக்கலாம். தானே சமநிலைப்படுத்தக்கூடிய வகையில் இதனுடன் சென்சார்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், வாடிக்கையாளர்கள் விரும்பினால் கேமராவும் இதனுடன் பொருத்தித் தரப்படும். 3,499 சீன யுவான்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.33,200/-) மதிப்புள்ள இந்த இருசக்கர ஸ்கூட்டர் இன்று முதல் சீனாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

ஜியோமி நிறுவனத்தின் தலைமையகம் சீனாவில் இருப்பதால், எந்தப் பொருளையும் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்துவதுதான் வழக்கம். அதன்பின்தான் உலகின் மற்ற இடங்களுக்கும் பெயர்களில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி விற்பனைக்குக் கொண்டுவரும் இந்நிறுவனம். எனவே, மேற்கண்ட பொருள்களும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close