Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜீரோ பட்ஜெட்டில் ஜியோ போன்... ஆனால் ஒரு கண்டிஷன்... யாருக்கு செக் வைக்கிறார் அம்பானி? #RILat40

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக்கூட்டம் (Annual General Meeting), மும்பையில் உள்ள பிர்லா மதுஸ்ரீ அரங்கில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடந்த ஆண்டு சாதனைகள், ஜியோவின் வளர்ச்சி, புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் போன்ற முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றன.

ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசும் முகேஷ் அம்பானி

இந்தப் பொதுக்கூட்டத்தை, அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனது உரையுடன் தொடங்கிவைத்தார். நீதா அம்பானி உள்ளிட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். டெக்ஸ்டைல் நிறுவனம் மூலம் தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் சாம்ராஜ்யம், இன்று பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. 1966-ம் ஆண்டு பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம், 1977-ம் ஆண்டு முதல் பப்ளிக் லிமிட்டெட் நிறுவனமாக மாறியது. அந்த ஆண்டு முதல் அந்நிறுவனத்தின் சார்பாக பங்குதாரர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நாற்பது ஆண்டுகால வளர்ச்சிபற்றி, அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசினார்.

1977-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தில் செய்யப்பட்ட ரூ.1,000 முதலீட்டின் மதிப்பானது, தற்போது ரூ. 16.5 லட்சமாக உயர்ந்துள்ளது. 70 கோடி ரூபாயாக இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு தற்போது 3.3 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

கோகிலாபென் அம்பானி

இந்த நாற்பது ஆண்டுகால சாதனைகளுக்குக் காரணமாக இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தனது தந்தை திருபாய் அம்பானிக்கு நன்றி தெரிவித்து அவர் பேசினார். அப்போது இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திருபாய் அம்பானியின் மனைவி கோகிலா பென் அம்பானி, கண்கலங்கத் தொடங்கிவிட்டார். கூட்டத்தில் கலந்துகொண்ட பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் மேடையில் அமர்ந்திருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களும் எழுந்து திருபாய் அம்பானிக்கு மரியாதை செலுத்தினர். திருமதி. கோகிலா பென் சில நிமிடங்கள் தனது இருக்கையில் நெகிழ்ச்சியாக இருந்தார். இது அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் நெகிழச்செய்தது. தனது தாயார் கண்கலங்குவதைப் பார்த்த முகேஷ் அம்பானி, சில நிமிடங்களுக்குத் தனது உரையை நிறுத்திவைத்தார்.

சாதனை படைத்த ஜியோ :

"ரிலையன்ஸ் ஜியோ தனது 4ஜி வர்த்தக சேவையைக் கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோ தொடங்கப்பட்டு 83 நாள்களில் 5 கோடி சந்தாதாரர்களைப் பெற்றது. 170 நாள்களில் 10 கோடி சந்தாதாரர்களைப் பெற்று சாதனை படைத்தது. தற்போது சுமார் 12.5 கோடி சந்தாதாரர்கள் ஜியோ நெட்வொர்க்கில் இருக்கின்றனர். நமது நிறுவனம் அடுத்தடுத்து உலக சாதனை படைத்துவருகிறது. மிக வேகமாக தொழில்நுட்ப சேவையை மேற்கொண்ட நிறுவனம் ஜியோ தான். ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ஸ்கைப் போன்றவற்றைவிடவும் ஜியோ வேகமாக வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கிறது. மொபைல் டேட்டாவைப் பயன்பாட்டில் சீனா மற்றும் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது. ஜியோ நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன் மொபைல் பிராட்பேண்ட் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 155-வது இடத்தில் இருந்தது. தற்போது டேட்டா பயன்பாட்டில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த 12 மாதங்களில் இந்தியாவின் 99 சதவிகித மக்கள்தொகையை ஜியோ வாடிக்கையாளர்களாகப் பெறும். ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 7 புதிய வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைகின்றனர். நாளொன்றுக்கு 250 கோடி நிமிடங்கள் ஜியோ நெட்வொர்க்கில் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன" என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

வம்பிழுத்த அம்பானி :

ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சி பற்றிப்பேசிய முகேஷ் அம்பானி, மற்ற நிறுவனங்களின் டெலிகாம் பங்குகள் குறைந்துள்ளதைக் குறிப்பிட்டு வம்பிழுத்தார். ஒட்டுமொத்த டெலிகாம் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 2.82 சதவிகிதம் அளவுக்கும், ஐடியா செல்லுலர் நிறுவனம் 2.47 சதவிகிதம் அளவுக்கும் சந்தையை இழந்துள்ளன. முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் டெலிகாம் சந்தை 0.81 சதவிகிதம் குறைந்துள்ளது.

ஜியோபோன் (Jio Phone) :

Akash Ambani and Isha Ambani

ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் 4G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்போவதாகக் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகிவந்தன. இந்நிலையில், அந்நிறுவனத்தின் சார்பாக 4G ஸ்மார்ட்போன் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி இந்த 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திப் பேசினர். 'இந்தியாவின் ஸ்மார்ட்போன்' என்ற டேக்கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜியோபோனில் 4ஜி தவிர, வாய்ஸ் கமாண்ட் மூலம் அழைப்புகள் மேற்கொள்ளும் வசதி, ஆபத்துக்காலங்களில் அவசர உதவி குறுஞ்செய்தி, வாய்ஸ் சர்ச் மூலம் விருப்பமானவற்றை இணையத்தில் தேடும் வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இருக்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோபோன் - Reliance JioPhone

ஜியோபோன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான வசதிகளையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்கள், மாதம் ரூ.153 செலுத்தினால் 'ஜியோ தன் தனா தன்' ஆஃபரில் அன்லிமிட்டட் கால்ஸ், 4ஜி டேட்டாவைப் பெற முடியும். சந்தையில் 4ஜி ஸ்மார்ட்போனின் குறைந்தபட்ச விலை ரூ.4,000 முதல் தொடங்குகிறது. ஆனால் ரூ.1,500 டெபாசிட் தொகையைச் செலுத்தி இந்த ஸ்மார்ட்போனைப் பெற்றுக்கொள்ளலாம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத்தொகையானது வாடிக்கையாளர்களுக்கே திரும்பத்தரப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.0 தான் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். ஆகஸ்டு 24-ம் தேதி முதல் ஜியோபோனுக்கான ப்ரி-புக்கிங் தொடங்குகிறது.

ஜியோபோன் விற்பனை புதிய உலக சாதனை படைக்கும் என்பது முகேஷ் அம்பானியின் கனவு. அது பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close