Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஆதார், ஜி.எஸ்.டி-யால் என்னவெல்லாம் நன்மை?” - விளக்கும் நந்தன் நீல்கேனி

நாட்டையே தற்போது பரபரப்பாக வைத்திருக்கும் ஆதார் கார்டு திட்டத்தின் முதல் விதையைத் தூவியவர், நந்தன் நீல்கேனி. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர், ஆதார் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பெங்களூரு தெற்கு தொகுதி வேட்பாளர் என பன்முகம் கொண்ட இவர், மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அவர், ஆதார், ஜி.எஸ்.டி, ஆட்டோமேஷன் என பலதுறைகளை தொட்டு பேசினார். அப்படி மாணவர்களுக்கு அவர் அளித்த ட்ரெண்டி அட்வைஸ் இதோ...

ஆதார் நிறுவன முன்னாள் சேர்மன் நந்தன் நீல்கேனி

"சென்னை ஐ.ஐ.டி.,யின் பட்டமளிப்பு விழாவிற்கு வந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். 

நான் சுமார் 30 ஆண்டுகள் ஸ்டார்ட்அப்பில் பணிபுரிந்திருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் அரசின் திட்டங்களில் கூட ஸ்டார்ட் அப்களில்தான் நான் பணியாற்றினேன். எனவே என் வாழ்நாள் முழுவதும் ஸ்டார்ட் அப்பிலேயே பணிபுரிந்திருக்கிறேன் என சொல்லலாம். இந்த துறையில் தற்போது நடக்கும் அளவிற்கு மிகப்பெரிய மாற்றங்கள் எப்போதுமே நடந்ததில்லை. இன்று தொழில்நுட்பங்களால் பல சவால்களைச் சந்தித்து வருகிறோம். 

இன்று உலகில் சுமார் 2.5 பில்லியன் மக்களிடம் ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. இதுமட்டுமின்றி, அனைத்து டிவைஸ்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதாகவும் இருக்கின்றன. இப்படி மட்டுமே உலகில் தற்போது சுமார் 100 பில்லியன் டிவைஸ்கள் ஒன்றோடு ஒன்று கனெக்ட் செய்யப்பட்டிருக்கின்றன.. இதெல்லாம் வெறும் ஆரம்பம்தான். சரி... இவையெல்லாம் என்ன செய்யும்? நிறுவனங்கள் புதுப்புது தொழில்களை செய்வதற்கு இவை ஆதாரமாக அமையும். எனக்கு முன்னாள் பேசிய கோயங்கா, ஆட்டோமொபைல் துறையை பற்றி இங்கே குறிப்பிட்டிருந்தார். ஆட்டோமொபைல் துறையானது பல வருடங்களாக, சில நிறுவனங்களின் கையில் மட்டுமே இருக்கிறது. ஆட்டோமொபைல் உலகில் இந்த நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் எலெக்ட்ரிக் கார்கள், டிரைவர்லஸ் கார்கள் போன்றவையெல்லாம் வந்தபின்னர் ஆட்டோமொபைல் துறை நிறைய மாற்றங்களைக் கண்டுவருகிறது. 

நீங்கள் வருங்காலத்தில் என்ன வேலைக்கு போவீர்கள் என்பதை யூகிக்கவே முடியாது. எந்த மாதிரியான நிறுவனங்கள் வருங்காலங்களில் இருக்கும் என்பதையும் நம்மால் தற்போது யூகிக்க முடியாது.

இந்த மாற்றம் என்பது ஆட்டோமொபைல் துறையில் மட்டுமில்லை. பல துறைகளில் நடந்து வருகிறது. உதாரணமாக விளம்பர நிறுவனங்களை எடுத்துக்கொள்ளுங்கள். கடந்த பத்து வருடங்களில் எந்தளவிற்கு மாற்றங்களைக் கண்டுவிட்டது பாருங்கள்? இன்று பெரும்பாலான விளம்பரங்கள் டிஜிட்டல்மயமாகிவிட்டன. இப்படி ஒவ்வொரு துறையிலும் மாற்றங்கள் நடந்துவருகின்றன. புதிய சாதனையாளர்கள், புதிய தொழில்நுட்பங்கள் என அடிக்கடி மாறுதல்களைச் சந்தித்து வரும் ஒரு புதுமையான வேளையில் நாம் தற்போது இருக்கிறோம். 

ஐ.ஐ.டி மாணவர்களாகிய உங்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி என்னவென்றால், இன்றுடன் உங்கள் கல்லூரி வாழ்க்கை முடிந்துவிட்டது. அதாவது ஐ.ஐ.டி.,யில் உங்கள் கல்வி முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் சோகமான விஷயம் என்ன தெரியுமா? வாழ்க்கையில் உங்கள் கல்வி இன்னும் முடியவில்லை. நீங்கள் கற்றுக்கொள்வதை உங்களால் நிறுத்தவே முடியாது. வாழ்க்கை முழுவதுமே கற்க வேண்டிய கட்டாயம் இருக்கிற ஒரு யுகத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். ஏனெனில் நீங்கள் வருங்காலத்தில் என்ன வேலைக்கு போவீர்கள் என்பதை யூகிக்கவே முடியாது. எந்த மாதிரியான நிறுவனங்கள் வருங்காலங்களில் இருக்கும் என்பதையும் நம்மால் தற்போது யூகிக்க முடியாது. சுயதொழில் முனைவோர்கள் வருங்காலங்களில் என்ன மாதிரியான பிசினஸ் செய்வார்கள் என்பதையும் நம்மால் யூகிக்கமுடியாது. எனவே தற்போது நீங்கள் என்ன படித்திருந்தாலும், வருங்காலங்களில் நிறைய படிக்க வேண்டியிருக்கும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உங்கள் கற்றல் மாறிக்கொண்டே இருக்கும். எனவே வாழ்க்கை முழுவதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு தயாராக இருங்கள். இந்த ஐ.ஐ.டி.,யில் இருந்து எடுத்துசெல்ல வேண்டியது வெறும் பாடங்களை மட்டும் அல்ல. எப்போதும் புதிய விஷயங்களை கற்க தயாராக இருக்கும் மனநிலையைத்தான் இங்கிருந்து எடுத்து செல்லவேண்டும்.

சென்னை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழா

தற்போது இருக்கும் வேலைகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கப்போவது ஆட்டோமேஷன்தான். கடந்த சில வருடங்களாக மெஷின் லேர்னிங், ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், டீப் லேர்னிங், நியூரல் நெட்வொர்க்ஸ் போன்றவை அனைத்தும் வேகமாக வளர்ந்துவருகிறது. இவை அனைத்துமே இயந்திரங்களை மேலும் மேலும் ஸ்மார்ட்டாக மாற்றுபவை. இந்த மாற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும். எனவே இன்று இருக்கும் பணிகள் எதுவும் நாளை இருக்காது. எனவே வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. அதாவது, மனிதர்கள் செய்துவந்த பல பணிகளை இயந்திரங்கள் ஆக்கிரமித்துவிட்டன. ஆனால் மனிதர்களால் மட்டுமே செய்ய முடிகிற வேலைகளை எந்த இயந்திரமும் ஆக்கிரமிக்க முடியாது. மென்திறன்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். உணர்ச்சிகள், குழுவாக வேலை செய்யும் திறன், தலைமைப் பண்பு, இலக்குகளை நிர்ணயித்து செயல்படுதல் போன்றவற்றை எல்லாம், எப்போதும் ஆட்டோமேஷன் ஆக்கிரமிக்கவே முடியாது அல்லவா? எனவே இதுபோன்ற ஆளுமை திறன்களை நன்கு வளர்த்துக்கொள்ளுங்கள். 

இந்தியாவைப் பொறுத்தவரை தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுவருகிறது. இந்த தொழில்நுட்பம் அனைத்து மக்களையும் சென்று சேர்வதற்கான வசதிகளும் நம்மிடம் இருக்கின்றன. ஆதார் மூலமாக, நடக்கும் பரிவர்த்தனைகள், பெறும் பயன்கள் கூட இதில்தான் சேரும். தற்போது உங்கள் மொபைலை பயன்படுத்தியே வங்கி கணக்கு துவங்க முடியும், ஆவணங்களை இணையத்தில் சேமித்து வைக்க முடியும், தேவைப்படும் நேரத்தில் எல்லாம் உங்கள் தகவல்களை எளிதாகப் பெறமுடியும். ஆதார் மூலமாகவே இத்தனை விஷயங்கள் நடக்கின்றன. கடந்த ஜூன் 30-ம் தேதி மட்டும் ஆதார் மூலமாக 4 கோடி முறை பாதுகாப்பு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. ஆதார் மூலமாக பணம் பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்தபின்பு 2 பில்லியன் பணவர்த்தனைகள் கடந்த மூன்று வருடங்களில் நடந்திருக்கின்றன. இதுபோன்ற தொழில்நுட்பங்கள் தற்போது ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன என்றால், இவைதான் தொழில்துறையில் பல்வேறு விஷயங்களை எளிதாக்கியிருக்கிறது. இந்த புதிய தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் பயன்படுத்துவதன் மூலமாக, பல நிறுவனங்கள் வணிகம் செய்யும் விதத்தையே மாற்றியிருக்கின்றன.

ஜி.எஸ்.டி கவுன்சில்

மிகப்பெரிய அளவிலான கட்டமைப்புகள் மூலமாக இவற்றை செய்வதன் மூலம் இன்னும் நிறைய நன்மைகளை தேசிய அளவில் நம்மால் பெறமுடியும். அதற்கு உதாரணம்தான் ஜி.எஸ்.டி நெட்வொர்க். இன்று பலரும் ஜி.எஸ்.டி.,யின் பாதகங்கள் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜி.எஸ்.டி மூலமாக நமக்கு நிறைய டேட்டா கிடைக்கவிருக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக 8 மில்லியன் பிசினஸ்கள், ஒரே அமைப்பின் கீழே இயங்கப்போகின்றன. அனைத்து வரிகளையும் ஒரே அமைப்பின் கீழே செலுத்தப் போகிறார்கள். இதனால் மறைமுக வரி செலுத்துபவர்களின் விவரங்கள் அனைத்துமே முறையாகப் பதிவு செய்யப்படும். எந்த பொருள் வாங்குகிறார்கள், எந்த சேவைக்கு வரி செலுத்துகிறார்கள் என்பதைக்கூட ஜி.எஸ்.டி நெட்வொர்க் மூலமாக நம்மால் பதிவு செய்யமுடியும். எனவே நாட்டில் நடக்கும் பல மில்லியன் பரிவர்த்தனைகள் ஜி.எஸ்.டி மூலம் பதிவு செய்யப்படும். இது நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. முதலில் நம்மால் நாட்டின் துல்லியமான பொருளாதார நிலையை இந்த டேட்டாவின் உதவியுடன் அறிந்துகொள்ள முடியும். நாள்தோறும், வாரந்தோறும் நம்மால் நம் நாட்டின் பொருளாதார நிலையை நன்கு ஆய்வு செய்யமுடியும். எந்த பொருள் அதிகம் விற்கிறது, எந்த மாநிலம் பொருளாதரத்தில் வளர்கிறது எனப் பல்வேறு விஷயங்களை நம்மால் எளிதில் கணிக்க முடியும். மேலும் நிறுவனங்களும் தங்களின் வர்த்தகத்தை துல்லியமாக மதிப்பீடு செய்யமுடியும். இது ஜி.எஸ்.டி.,யில் மட்டுமல்ல. இன்னும் சில விஷயங்களிலும் நடக்கிறது. எலக்ட்ரானிக் டோலிங் சிஸ்டம் மூலம் மட்டும் மாதந்தோறும் 7 மில்லியன் பரிவர்த்தனைகள் நடக்கின்றன. ஆன்லைன் பில்லிங் சேவைகளும் இதேபோல செயல்படுகின்றன. இவை பொருளாதார அளவிலும் சரி; சமூக அளவிலும் சரி; பல விஷயங்களை சிறப்பாக செய்ய உதவும். 

20-ம் நூற்றாண்டின் மாற்றங்களுக்கு எண்ணெய்வளம்தான் அடித்தளமிட்டது. அப்படி 21-ம் நூற்றாண்டின் மாற்றங்களுக்கு இந்த டேட்டாதான் அடித்தளமிடப்போகிறது. ஆம். டேட்டாதான் இனி புதிய எண்ணெய்.

இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள், நிறைய புதிய நிறுவனங்கள் உருவாகவும், எற்கெனவே இருக்கும் நிறுவனங்கள் இன்னும் மேம்படவும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. 20-ம் நூற்றாண்டின் மாற்றங்களுக்கு எண்ணெய்வளம்தான் அடித்தளமிட்டது. அப்படி 21-ம் நூற்றாண்டின் மாற்றங்களுக்கு இந்த டேட்டாதான் அடித்தளமிடப்போகிறது. ஆம். டேட்டாதான் இனி புதிய எண்ணெய். ஆனால் எண்ணெய்க்கும், டேட்டாவுக்கும் இருக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் டேட்டா எல்லாருக்கும் கிடைக்கப்போகிறது. தனிநபர் ஒருவர் தன்னுடைய டேட்டாவை லோன் வாங்க, மருத்துவ வசதி பெற, நல்ல கல்வி பெற பயன்படுத்தலாம். அதேபோல நிறுவனங்களும் இந்த டேட்டாவை வணிக ரீதியில் நல்ல விதமாகப் பயன்படுத்தலாம். எனவே இந்த டேட்டா தனிநபர்களுக்கும் சரி... நிறுவனங்களுக்கும் சரி... நிறைய நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது. 

நிறைய மாற்றங்கள் நடந்துவரும் ஒரு யுகத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். எனவே அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், வாழ்நாள் முழுவதும் கற்பதற்கான மனநிலையை உருவாக்கிக்கொள்ளவும், உங்களுடைய ஆளுமை திறன்களை வளர்த்துக்கொள்ளவும் தயாராக இருங்கள். அப்படி செய்தால், நீங்கள் செய்யும் எந்தவொரு விஷயத்திலும் உச்சத்தில் இருப்பீர்கள்!

நன்றி"

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close