Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அறிஞர் போற்றுதும்... அறிஞர் போற்றுதும்! ஆளுமைகளுக்கு விருது வழங்கிய பள்ளி மாணவர்கள்

‘அறிஞர் போற்றுதும்... அறிஞர் போற்றுதும்' என்ற பெயரில் ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கிவருகிறது ஓர் ஆங்கிலப் பள்ளி. இந்த விருதுகளை, அந்தப் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் மாணவர்களே வழங்குகிறார்கள் என்றால், ஆச்சர்யமாக இருக்கிறதா?

அறிஞர்களைப் போற்றும் பண்பு அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக இருந்துவருகிறது. ஆனால், தமிழகத்தில் அது மாதிரியான ஒரு சூழல் குறைவு என்பது மிகவும் கவலைப்படக்கூடிய ஒரு விஷயமாகவே இருந்துவருகிறது. 

தமிழ் அறிஞர்கள்

அறிஞர்களைப் போற்ற வேண்டும் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், ‘யார் அறிஞர்?, யாரை போற்ற வேண்டும்?’ என்ற கேள்விகள், எல்லோரின் மனதிலும் இருக்கத்தான் செய்கின்றன. இவ்வாறான கேள்விகள் நம்மிடையே எழும் நேரத்தில் பலர் இதற்கான விடையைத் தேட விரும்புவதில்லை. இதனால், அறிவுத் தளத்திலும் இலக்கியத் தளத்திலும் இயங்கிக்கொண்டிருக்கும் ஆளுமைகளை நாம் அடையாளம் காணமால் விட்டுவிடுகிறோம்.

இதை மாற்றும் ஒரு முயற்சியில், துளசிதாசனை தலைமை ஆசிரியராகக்கொண்ட திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியில், ஆண்டுதோறும் ‘அறிஞர் போற்றுதும்... அறிஞர் போற்றுதும்!’ என்ற பெயரில் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், கவிஞர் கலாப்ரியா, எழுத்தாளர் பூமணி, சோ.தர்மன் ஆகியோருக்கு தமிழ் இலக்கிய விருதும், சூழலியலாளர் தியோடர் பாஸ்கரன், சிற்பி ராஜன் ஆகியோருக்கு சமூக நோக்கு விருதும், கவிஞர் யுகபாரதி, எழுத்தாளர் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு படைப்பூக்க விருதும் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை ஞானாலயா நூலகம், திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசுப் பள்ளி நூலகம் ஆகியவற்றுக்கு, பள்ளி சார்பில் சிறப்பு நிதி வழங்கப்பட்டது.

விருது பெற்ற தமிழ் அறிஞர்களிடம் பேசும்போது, அவர்கள் கூறிய ஒரு வார்த்தை... “நாங்கள் செல்லாத இடம் இல்லை; பார்க்காத மனிதர்கள் இல்லை. பல ஆளுமைகளின் கரங்களால் பரிசுகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால், இன்றுபோல் நாங்கள் என்றும் மகிழ்ந்ததில்லை. காரணம், மாணவர்களின் கைகளால் விருது பெற்றதே” என்றனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மூத்த எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, எழுத்தாளர் ஞானி, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், கவிஞர் நந்தலாலா ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ் அறிஞர்

மாணவர்களின் மத்தியில் மாணவர்களே விருது வழங்கும் ஒரு நிகழ்வைப் பற்றி பள்ளியின் இணைச் செயலாளரிடம் கேட்டபோது, 

“மறந்துகொண்டிருப்பது மக்களின் இயல்பு. நினைவுப்படுத்துவது எங்கள் கடமை. ஆம், தமிழ் எழுத்தாளர்களில் பலர், தற்போது மறக்கடிக்கப்படுகின்றனர். அவர்களைப் போற்றவேண்டிய கடமை நமக்கானது. வெறும் ஏட்டுப் படிப்பு என்பது, மாணவர்களுக்குப் பயனளிக்காது. எழுத்தாளர்களைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ளும்போதுதான் அவர்களுக்கு தமிழ் மீதும், தமிழ் எழுத்துகள் மீதும் ஓர் ஆர்வம் ஏழும். மாணவர்களே எழுத்தாளர்களுக்குப் பரிசளிக்கும்போது, அவர்கள் ‘மதிப்பெண் மட்டும் வாழ்க்கை அல்ல, அதைத் தாண்டி நிறைய இருக்கிறது’ என்பதை உணர்ந்துகொள்கிறார்கள்.

2009-ம் ஆண்டில் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, இது பற்றி மாணவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தோம். “எல்லா சமூகங்களிலும் எழுத்தாளர்கள் போற்றப்படுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் அவ்வாறான சூழ்நிலை இல்லை. தமிழ் ஆளுமைகளை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியை நாங்கள் தொடங்கினோம். இந்த நிகழ்ச்சி தொடங்க, பள்ளியின் தலைமை ஆசிரியர் துளசிதாசனின் பங்கு முக்கியமானது” என்றார்.

இலக்கியம்தான், மனிதச் சமூகத்தைத் தொடர்ந்து உயிப்புடன் வைத்திருக்கிறது. வாசிக்க வாசிக்கத்தான் சிறந்த படைப்பாளி உருவாகிறான். தமிழ் அறிஞர்களை, மாணவர்கள் மத்தியில் போற்றும்போது அவர்களின் மனதில் விதைக்கும் அந்த விதை என்பது, நிச்சயம் அவர்களையும் சிறந்த படைப்பாளியாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close