Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயற்கை 'வாட்ச்மேன்'களான நாட்டு நாய்களின் தற்போதைய நிலை! :(

விவசாயி காலையில் எழுந்ததும் தனது தோட்டப் பணிகளைக் கவனிக்கச் செல்வது வழக்கம். அப்போது அவனுடன் ஒரு ஜீவனும் துணையாகக் கிளம்பும். அந்த ஜீவன் முன்னே செல்ல, விவசாயி இரண்டு அடி தூரம் விட்டுக் கையில் கம்புடன் தொடர்வார். அப்போது அந்த ஜீவனிடமிருந்து வித்தியாசமான ஒலி எழுந்தால், விவசாயி கம்பை கெட்டியாக பற்றிக் கொண்டு அடுத்து வரப்போகும் ஆபத்தை எதிர்கொள்ளத் தன்னைத் தயார் செய்து கொள்கிறார். சரியாக நான்கு அல்லது ஐந்தடி தூரத்துக்குள் அந்த ஆபத்து என்ன என்பது விவசாயிக்குத் தெரிந்து விடும். ஆம், அந்த ஒலி எழுந்தால் பாம்போ, வேறு மிருகங்களோ இருக்கிறதென்று அர்த்தம். அப்போது எளிதாக விவசாயி ஆபத்தைத் தைரியமாக எதிர் கொள்வார். அந்த ஒலி எழுப்பும் ஜீவன், நாய்தான். விவசாயத்தில் மட்டும்தான் நாய் பாதுகாவலனா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை.

தெரு நாய்கள்

நீங்கள் குடியிருக்கும் ஊர், தெருக்கள், வீடு என அனைத்து இடங்களிலும் நாய்களின் பாதுகாப்பு எப்படியோ ஒருவிதத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும். இரவில் உறங்கிக் கொண்டு இருக்கும்போது நாய் குரைத்தால் நம்மில் பெரும்பாலோனோர்க்கு சில நேரங்களில் எரிச்சல் வருவது உண்டு. ஆனால், நாய் குரைக்கும் நேரம் எரிச்சல் பட வேண்டிய நேரம் இல்லை, அது நாம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம். அந்த ஜீவன் உங்களை எச்சரிக்கிறது என்று அர்த்தம். அத்தகைய நாய்களின் பெயர்கள் இன்று 'தெரு நாய்கள்'. உண்மையில் நாம் காக்க வேண்டியது அந்தத் தெருவையே காத்து வரும் நாட்டு நாய்களான தெரு நாய்களைத்தான். உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகில் ஆயிரக்கணக்கான தொழில்கள் இருந்தாலும், அதிகமான வருமானம் தரும் தொழிலாக 27-வது இடத்தைப் பிடித்திருப்பது, நாய்களுக்குத் தயாரிக்கும் உணவுத் தொழில்தான். நாம் நாட்டு நாய்களுக்குத் தனது எஜமானர் கொடுக்கும் உணவு பழைய கஞ்சியாக இருந்தாலும், குடித்து விட்டு தனது வாலை ஆட்டி நன்றியை வெளிப்படுத்தும். இன்று பெரும்பாலோனோர் வீட்டில் வளர்க்கும் நாய்கள் இதைச் செய்யுமா என்றால் இங்குப் பதில் இல்லை. நீங்கள் புதிதாக ஒரு தெருவில் குடியேறுகிறீர்கள். அப்போது அந்தத் தெருவில் இருக்கும் நாய்கள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பதாக உணர்பவரா நீங்கள். உங்களுக்குத்தான் அது புதிய தெருவே தவிர, அவற்றுக்கில்லை... அவை அனைத்தும் வாழையடி வாழையாக அந்தந்த தெருக்களிலும், இடங்களிலும் வாழ்ந்து வருகின்றன. அந்த ஜீவர்களுக்கு உறைவிடம், மறைவிடம் எனச் சகலமும் அந்த இடம்தான். நாட்டு நாய்கள் பொதுவாக அதற்குரிய எல்லைகளை வரையறுத்துக் கொள்ளும் தன்மையை இயல்பாகவே கொண்டிருக்கும்.

தெரு நாய்கள் எனச் சித்தரிக்கப்பட்ட நாட்டு நாய்கள் நன்றிக்குப் பெயர் பெற்றது. நீங்கள் ஏதாவது ஒரு வகையில் அதற்கு உணவிட்டவராக இருந்தால், எத்தனை காலமானாலும் உங்களை மறக்காத அற்புத ஜீவன். அதேபோல உணவிட்ட பின்னர்க் கல்லை எடுத்து எரிந்தாலும் கூட அது நீங்கள் விளையாடுகிறீர்கள் எனத்தான் நினைத்துக் கொள்ளுமாம். வீட்டின் எந்தப் பக்கம் சத்தம் கேட்டாலும் முதலில் அந்தத் திசையை நோக்கி அசைகின்ற உருவம் நாயாகத்தான் இருக்கும். முற்காலத்தில் ஆடு, மாடுகளைப் பட்டிகளில் அடைத்து வளர்ப்பது வழக்கம். அவற்றின் பாதுகாப்புக்காகவே வளர்க்கப்படுபவை பட்டி நாய்கள் எனச் சொல்லக்கூடிய நாய்களைத்தான். மலையாள மொழியில் 'பட்டி' என நாய்களை அழைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருவாய், பச்சை நாய் என மூன்று வகை நாய்கள் பிரசித்தி பெற்றது. இதில் கருவாய்ச் செவலைக்குத்தான் மவுசு அதிகம். தோற்றத்தில் கருப்பு நிறமாக இருப்பதால், இரவில் மற்ற உயிரினங்களின் கண்களுக்கு அதிகமாகத் தென்படாது. எந்த ஒரு விலங்குகளையும் தனது அருகில் வர வைத்துத்தான் தாக்கும் வல்லமை படைத்தது. இதுபோல எல்லா நாய் வகைகளும் ஒரு சிறப்பை கொண்டுதான் இருக்கின்றன.

தெரு நாய்கள்

இன்று வெளிநாட்டு நாய்களின் மோகத்தால், நாட்டு நாய்கள் தெருவுக்கு விரட்டப்படுகின்றன. அதிகமாக விலை கொடுத்து நீங்கள் நாய் வளர்ப்பவராக நினைத்துக் கொள்ளலாம். அதிகமான ஆபத்தில் உள்ள எஜமானர் குரல் கொடுக்காமல் இருக்கும் போதும், அவரை ஆபத்தில் இருந்து காப்பதற்கான பணியை நாட்டு நாய்கள் ஈடுபடும். நாட்டு நாய்கள் வெளியாட்கள் அளிக்கும் உணவை அவ்வளவு எளிதில் எடுத்துக் கொள்ளாது. முகர்ந்து பார்த்து உறுதி செய்த பின்னர்தான் எடுத்துக் கொள்ளும். இரவு நேரத்தில் புதிய நபர் யாராவது தெருவுக்குள் நுழைந்தால் முதலில் எதிர்க்கும் குரல் தெருநாய்களின் குரல்களாகத்தான் இருக்கும். ஒரு நாய் குரல் எழுப்ப ஆரம்பித்து விட்டால் பக்கத்துத் தெருவில் உள்ள நாய்களும் உஷாராகிக் குரைக்கும். விலை அதிகமாகக் கொடுத்து மேலை நாடுகளின் நாய்களை வாங்கும்போது, அதற்கேற்றவாறு பயன்படுத்த வேண்டி, பணம் வீணாகச் செலவழிப்பதுதான் தொடர்கிறது. இன்று தெரு நாய்களின் நிலை, குப்பைத் தொட்டிகளுக்குள்ளும், குப்பை வண்டிகளின் பின்னும் தனக்கான உணவைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தினம், தினம் நம்மிடம் நன்றியைக் காட்டும் நாய்களுக்கு, நாமும் ஒருமுறை நன்றியைக் காட்டலாம். எப்படி என்கிறீர்களா?.. நீங்கள் வீண் என நினைக்கும் உணவுகளை குப்பைகளில் வீசுவதற்குப் பதிலாக வீட்டின் வெளியே வைத்து விடுங்கள். நாம் நாய்களுக்குச் செய்யும் சிறிய நன்மையாகவாவது இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close