Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அருண் ஜெட்லி தன் மீதான குற்றச்சாட்டுகளை தவறு என நிரூபிப்பார் என்கிறார் மோடி!

புதுடெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை, அருண் ஜெட்லி தவறு என நிரூபிப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த காலத்தில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக பா.ஜ.க. எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத்தும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார். இதனால், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், அருண் ஜெட்லிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாக வெடித்துள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு செய்தியாளர்களிடம் கூறும்போது, ''எதிர்க்கட்சியினரின் திட்டத்தை முறியடிக்கும் வகையில், பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்களது தொகுதியில் ஒருநாள் இரவு முகாமிட்டு, ஏழைகள், இளைஞர்கள், பெண்களின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நல்ல பணிகள் குறித்த விழிப்புணர்வையும், மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளது குறித்தும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

மேலும், மோடி பேசும்போது, ''ஹவாலா பண மோசடி வழக்கில், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை சிக்க வைப்பதற்கு அப்போதைய மத்திய அரசு முயன்றது. ஆனால், அந்த குற்றச்சாட்டு தவறு என்று நிரூபித்து, அதில் இருந்து அத்வானி வெளியே வந்தார். இதனால் காங்கிரசின் திட்டம், பூமராங் போன்று திரும்பிவிட்டது.

அதுபோலவே, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிராகவும் தற்போது பொய்யான, உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தெரிவித்து வருகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது போல, பா.ஜ.க.வைச் சேர்ந்த மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், சிவராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே ஆகியோர் மீதும் காங்கிரஸ் முன்பு பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை காங்கிரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால், பா.ஜ.க. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அத்வானி தன் மீதான குற்றச்சாட்டுகளை தவறு என்று நிரூபித்ததை போல, அருண் ஜெட்லியும் தன் மீதான குற்றச்சாட்டுகளை தவறு என நிரூபிப்பார்" என்று தெரிவித்ததாக கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ