Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருநின்றவூர் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்ததற்கு திமுக அரசே காரணம்: அமைச்சர் ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு!

சென்னை: முந்தைய  திமுக அரசின் கொள்கை கோணலுக்கு  ஒரு உதாரணம்தான் திருநின்றவூர் வீட்டுமனைத் திட்டம் என்றும்,  இதன் காரணமாகத்தான் இன்று திருநின்றவூர் குடியிருப்புகளில்  தண்ணீர் தேங்கி அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  " தி.மு.க அரசின் கொள்கை கோணலுக்கு ஒரு உதாரணம்தான் திருநின்றவூர் வீட்டுமனைத் திட்டம்.  இதன் காரணமாகத்தான் இன்று திருநின்றவூர் குடியிருப்புகளில்  தண்ணீர் தேங்கி அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.  திருநின்றவூர் குடியிருப்புப் பகுதியில் மழை வெள்ள நீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதால், இந்தக் குடியிருப்புப் பற்றிய உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்வது எனது கடமை என கருதுகிறேன்.

திருநின்றவூர் ஏரியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில்  குடிசை மற்றும் ஓடு வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன.  உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக குடிசைப் பகுதிகள் மேம்பாடு செய்ய திட்டமிடப்பட்டது.

ஏரியின் ஒரு பகுதியிலேயே வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் பெருமழை காலங்களில் வீடுகளைச் சுற்றி வெள்ளம் சூழ்வது வாடிக்கையாக உள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 12 அடியாக உள்ளது. ஆனால்  வீட்டுப் பகுதிகள் இதிலிருந்து 5 அடி கீழேயே உள்ளன.  எனவே, திருநின்றவூர் ஏரியில் 7 அடி அளவிற்கு தண்ணீர் வந்தவுடன் வீடுகள் வெள்ளத்தால் சூழப்படுகிறது.  7 அடிக்கு கீழே தண்ணீர் அளவு குறையும் போது தான் வீடுகளைச் சுற்றியுள்ள வெள்ளம் வெளியேறும்.  பெரு மழை காலங்களில், ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், ஏரி முழுக் கொள்ளளவை எட்டி விடுகிறது.  தற்போது இந்த ஏரியில்  11 அடி  அளவிற்கு தண்ணீர் உள்ளது.

1.8.1996 மற்றும் 21.7.1997 ஆகிய தேதியிட்ட அரசாணைகளின்படி திருநின்றவூர் ஏரியில் 20.13 ஹெக்டேர்  அதாவது 49.74 ஏக்கர் நிலம் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்திற்கு  வீட்டுமனை அபிவிருத்திக்காக   வழங்கப்பட்டது.  ஏரிகள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்புகளையும் முறைப்படுத்தும் வகையில் 1990 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது அன்றைய தி.மு.க அரசு செய்த பெரும் தவறாகும். 

அவ்வாறு பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஏரியின் ஒரு பகுதியை  மாற்றுவதற்கு ஆட்சேபனை இல்லை என்ற சான்றை பொதுப் பணித்துறை வழங்கிய போது, அவ்வாறு வழங்கப்படும் நிலம் திருநின்றவூர் ஏரியின் முழுக் கொள்ளளவிற்கு 45 சென்டி மீட்டர் அதிகமான உயரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு உயர்த்தப்படுவதற்கு தேவையான மண் ஏரியின் உட்பரப்பிலிருந்து  எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிபந்தனைகள் எதுவும் கடைபிடிக்கப்படாததால் தான் இந்தக் குடியிருப்புகளில் வெள்ள நீர் தேங்குவது என்பது தடுக்க இயலாததாக உள்ளது.

ஏரிப் புறம்போக்கு, ஏரிக் கரைகள்,  நீர் படுகைகள் என வீடுகள் கட்டுவதற்கு உகந்ததாக இல்லாத இடங்களிலும் அரசியல் காரணங்களுக்காக ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்துவது என்பது தி.மு.க. அரசு எப்போதும் கொண்டுள்ள கொள்கையாகும்.

அதில் நீதிமன்ற உத்தரவுகளையும் உதாசீனப்படுத்தி பத்தாண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு, ஒப்படை செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையாணைகளை தளர்த்தி, வீட்டுமனைப் பட்டா வழங்க உத்தரவிட்டது.

நீர்நிலைகளைப் பாதுகாக்காமல் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு அரசியல் காரணங்களுக்காக இது போன்ற அரசாணைகளை பிறப்பித்ததன் விளைவாகத் தான் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

1990 ஆம் ஆண்டில் முந்தைய தி.மு.க. அரசால் வெளியிடப்பட்ட அரசாணை காரணமாகவே திருநின்றவூர் ஏரிப் பகுதியில்  உள்ள வீடுகளில் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவது என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. எனினும் விவசாயிகள் மற்றும் குடியிருப்புதாரர்களிடம்  கலந்து பேசி விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமலும், தேங்கியுள்ள மழை நீர் கணிசமாக குறையும் படியும் மதகுகள் வழியாக தேவையான தண்ணீரை வெளியேற்ற அரசு முடிவெடுத்துள்ளது. இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ