Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சென்னை வெள்ளத்திற்கு முழு காரணம் அ.தி.மு.க. அரசே': ஜன. 5-ல் தி.மு.க. ஆர்ப்பாட்டம்!

சென்னை: சென்னை மாநகரில் வெள்ளம் ஏற்பட முழு முதல் காரணம் அ.தி.மு.க. அரசே என்பதை வலியுறுத்தும் வகையில், தி.மு.க. சார்பில் வருகின்ற ஜனவரி 5-ம் தேதி சென்னை மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்து உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நவம்பர் மாத இறுதியிலும், டிசம்பர் மாதத் தொடக்கத்திலும் தமிழகம் முழுவதும் பெய்த பெருமழை காரணமாகவும், அதனைத் தொடர்ந்து உரிய நேரத்தில் முறைப்படி செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்காமல் முன்னறிவிப்பின்றி ஒட்டுமொத்தமாகத் திடீரென்று மிக அதிக அளவில் தண்ணீரைத் திறந்துவிட்ட காரணத்தால் ஏற்பட்ட செயற்கையாக வெள்ளத்தினாலும் சென்னை மாநகரமே நீரில் மூழ்கி,

ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாகி, லட்சக்கணக்கானோர் வீடிழந்து, நாதியற்றவர்களாக உற்றார் உறவினர் வீடுகளில் தங்கியிருந்த நிலையில், அவ்வளவு பெரும் சேதத்திற்கும் காரணம் அ.தி.மு.க. அரசும், அதன் நிர்வாகக் கோளாறுகளும், தாமதமும் தான் என்று அனைத்துக் கட்சியினரும் குற்றஞ்சாட்டிய போது, அதுபற்றி தமிழக முதலமைச்சர் எவ்வித விளக்கமும் அளிக்க முன்வரவில்லை என்பதால், அந்த நாசத்திற்குக் காரணமானவர் யார் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த, நீதி விசாரணை நடத்திட வேண்டுமென்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி கூறிய போதிலும், அவ்வாறு நீதி விசாரணை இதுவரை உருவாக்கப்படாததைக் கண்டித்தும், வெள்ள நிவாரண உதவிகள் வழங்குவதில் பல இடங்களில் பல்வேறு முறைகேடுகள் ஆளுங்கட்சியினராலும், அரசினராலும் நடத்தப்படுவதைக் கண்டித்தும், சென்னை மாநகரில் வெள்ளம் ஏற்பட முழு முதல் காரணம் அ.தி.மு.க. அரசே என்பதை வலியுறுத்தும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் ஜனவரி 5-ம் தேதியன்று சென்னை மாநகரில் என்னுடைய தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று கழக நிர்வாகிகளின் அவசரக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் பொங்கல் நாள், தமிழர் திருநாள், புத்தாண்டு தொடக்கம் என்பதையொட்டி ஆண்டுதோறும் "ஜல்லிக்கட்டு-ஏறு தழுவல்-மஞ்சுவிரட்டு" என்ற பெயரில் தமிழக கிராமங்களில் எல்லாம் இளைஞர்கள் பங்கேற்கும் வீர விளையாட்டு; பல ஆண்டு காலமாகச் சிறப்பாக நடைபெற்று வந்து, தற்போது தடுக்கப்பட்டு விட்டது பற்றியும் கழக நிர்வாகிகளின் கூட்டத்தில் இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

அ.தி.மு.க. அரசு எல்லாவற்றையும் போல, இந்தப் பிரச்னையிலும் முன்கூட்டியே முயற்சி எடுத்து உச்ச நீதிமன்றத்தில் முறையான அனுமதியைப் பெற்றுத்தரத் தவறிவிட்டது.  மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு, முதலமைச்சர் ஜெயலலிதா,  நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிகிற நாளன்று, பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்.

உண்மையிலேயே அதிலே அக்கறை இருந்திருந்தால், முன்கூட்டியே பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டாமா?

23-12-2015 அன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொலைக்காட்சிகளில் ஜல்லிக்கட்டு பற்றி அளித்த பேட்டியைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சருக்கு நான் எழுதிய அவசரக் கடிதத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு எவ்வித இடையூறுமின்றி நடைபெற பிரதமரைச் சந்தித்து தேவையான முயற்சிகளை உடனே மேற்கொள்ள வேண்டு மென்று வலியுறுத்தியிருந்தேன். அந்தக் கடிதத்திற்கு அன்றிரவே பதில் எழுதிய மத்திய இணை அமைச்சர், "  கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வருகின்ற ஜனவரி மாதம், தமிழர் திரு நாளாம் தைப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதி பெற்றுவிடுவோம் என்கின்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது " என்று அவசரக் கடிதம் எழுதியதையும் இந்த நேரத்தில் நாம் மனதில் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் இவ்வாறு கடிதம் எழுதியுள்ள நிலையில் 28-ம் தேதியன்று அலங்காநல்லூரில் நமது கழகப் பொருளாளர், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என்று கருதுகிறேன்.

ஜல்லிக்கட்டு விழாவினை நடத்த வேண்டு மென்று கோரி என்னைச் சந்தித்த குழுவினரும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ள நம்பிக்கையை ஏற்று, இந்த முடிவினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close