Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கூட்டணியில் இருப்பதாக கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருக்கட்டும்!'

சென்னை: தே.மு.தி.க. எந்த கூட்டணியிலும் இல்லை. தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. இருப்பதாக கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருக்கட்டும். அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று விஜயகாந்த் பா.ஜ.க.வுக்கு குட்டு வைத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் விரைவில் வர உள்ளது. இதையடுத்து, தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்த பா.ம.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து மக்கள் நல கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து தி.மு.க. தலைவரும் தன் பங்கிற்கு விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகுவதை பா.ஜ.க. தலைவர்கள் விரும்பவில்லை.

அதனால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் மோகன்ராஜுலு ஆகியோர் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்தினர். ஆனாலும், பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளது என்று விஜயகாந்த் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், சென்னை மத்திய கைலாஷில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தே.மு.தி.க. எந்த கூட்டணியிலும் இல்லை. தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. இருப்பதாக கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருக்கட்டும். அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்படும். உங்களை எல்லாம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். கூட்டணிக்கு வருமாறு அழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்காது. கலைஞர், ஜெயலலிதாவை சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்கள் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் என்ன செய்தார்கள்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ